Published:Updated:

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

ப. திருமாவேலன்ஓவியங்கள் : கண்ணா

பிரீமியம் ஸ்டோரி
##~##

டுத்த தீபாவளிதான் அனைத்துக் கட்சி களுக்கும் நிஜ தீபாவளி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய தீபாவளி என்பதால். இந்த ஆண்டு தீபாவளி... அவர்களைப் போலவே 'நமநம’தான்!

 அம்மா நடத்தும் வாண வேடிக்கை!

ஊரே சும்மா உட்கார்ந்து நிலா பார்க்க வைத்துவிட்டார் அம்மா. அதற்கும் அவர்கள் துணைக்கு அழைத்த காரணம், கருணாநிதிதான். 'கடந்த ஐந்தாண்டு காலம் ஆண்ட கருணாநிதி, மின் உற்பத்திக்காக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதுதான் இன்றைய மின்வெட்டுக்குக் காரணம்!’ என்று

சிந்தித்துச் சொல்கிறார் ஓர் அமைச்சர். 'மத்திய அரசாங்கம் எங்களைப் புறக்கணிக்கிறது. ஏராளமான மின்சார வளத்தை வைத்துக்கொண்டு எங்களுக்குத் தர மறுக்கிறது’ என்கிறார் இன்னோர் அமைச்சர். இந்தக் காரணங்களில் ஓரளவு நியாயம் இருக்கலாம். ஆனால், 'கருணாநிதி திட்டமிடாததை நாங்கள் செய்கிறோம்’ என்று அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான மின் உற்பத்தித் திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துவிட்டு, 'தமிழகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று மன்மோகன் சிங்கிடம் நேரடியாகக் கேட்டு, மின்சாரம் வாங்கி வந்துவிட்டு இப்படிப் பேசுவதுதானே ஒரு முதல்வரின் கடமை!

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

எதிர்க் கட்சியாக இருக்கும்போது அறிக்கைவிடுவதுபோலவே, ஆளும் கட்சி ஆன பிறகும் அறிக்கை அரசியல் நடத்துவதுதான் மின்வெட்டைவிடக் கஷ்டமானதாக இருக்கிறது.

சூரிய சக்தி மீது ஜெயலலிதா செலுத்தி உள்ள கவனம், வரவேற்கத் தக்கது. ஆனால், ஈரத் துணியை வெயிலில் காயப்போட்டு எடுப்பதுபோல சூரிய சக்தியின் தயாரிப்பு, உடனடியாக எட்டிவிடக் கூடியது அல்ல. 'அடுத்த ஆண்டு டிசம்பர் வரை இதேதான் நிலைமை’ என்பதைப் பயம் இல்லாமல் முதல்வரிடம் யார் சொல்வது? காற்றாலை உற்பத்தியாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நடத்தியதுபோல நடத்தினால், சூரிய சக்திக்காரர்களும் சுருண்டுவிட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தர வாதம்?

எல்லாவற்றையும் தனது தலைவிதி என்று சொல்லிச் சமாதானம் அடைவதைத் தவிர, தமிழ்நாட்டு வாக்காளனுக்கு வேறு வழி இல்லை. அதற்காக அவனைச் சோர்வடைய விட்டுவிட முடியாது அல்லவா? புதிய வாண வேடிக்கை கிளம்பிவிட்டது. 'அடுத்த பிரதமர் அம்மாதான்’, 'அம்மா, பிரதமர் ஆகப்போறாங்க...’ என்று ஊரெல்லாம் போஸ்டர்கள், நகரெங்கும் விளம்பரங்கள். மண்டபங் களில் விருந்துடன், ஆலோசனைக் கூட்டங்கள். கலர் கலர் வேடிக்கைகளைக் காட்டுவதற்கு என்றே நான்கு அமைச்சர்கள் பிரித்துவிடப்பட்டுள்ளார்கள். (அதில் நம்முடைய மின்சார மந்திரியும் ஒருவர். கஷ்ட கால நிலைமையைக் கருதி நத்தம் விஸ்வநாதனையாவது அதில் இருந்து விடுவித்திருக்கலாம். 'அவர் இல்லாமல் அம்மாவைப் பிரதமராக்க முடியாது’ என்றால் மின் துறையை வேறு ஒருவருக்காவது மாற்றித் தந்திருக்க வேண்டும்)! இந்த நால்வரும் ஊர் ஊராகச் சென்று காட்டும் வாண வேடிக்கை, மக்களுக்கு இந்தத் தீபாவளியின் ஸ்பெஷல் கேளிக்கை, செலவு இல்லாமல்!

         ஒரே ஒரு சாட்டை!

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

ருணாநிதியின் கட்சியிலும் குடும்பத்திலும் எல்லா நாளும் தீபாவளிதான்! ஆளாளுக்கு ஒரு பட்டாசு கம்பெனியைத் தொடங்கி சரமாரியாக வெடித்துக்கொண்டு இருந்தவர்கள்... கடைசியாக 'அந்த’ப் பரம்பரைச் சாட்டையைக் கைப்பற்றிப் பற்றவைக்கத் துடிக்கிறார்கள். 234 பேர் எம்.எல்.ஏ. ஆகலாம், 39 பேர் எம்.பி. ஆகலாம். ஆனால், ஒருவர்தான் தமிழக முதல்வராக முடியும். அந்த ஒருவர்தான் தி.மு.க. கட்சித் தலைவர் ஆக முடியும் என்பதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம்.

ஸ்டாலின் - அழகிரி ஆகிய இருவரும்தான் கருணாநிதியின் அதிகாரத்தைப் பங்கிடும் முஸ்தீபுகளில் மும்முரமாக இருந்தார்கள். தனித் தனித் தலைமைக் கழகம், பிரிந்து நின்று போராட்டம் நடத்தினார்கள். அடிதடிகள் நடந்தன. துரை தயாநிதியை போலீஸ் விரட்டோ விரட்டு என்று விரட்டுவதைப் பார்த்து விரக்தி அடைந்த அழகிரி, ஸ்டாலினுடனான மோதலைக் கொஞ்ச காலத்துக்குத் தள்ளிவைத்துவிட்டார். அந்த இடத்தை கனிமொழி கைப் பற்றிக்கொண்டார். இளைஞர் அணிக்கு ஸ்டாலின் ஆட்களை நியமிக்கிறார் என்றால், 'கலைஞர் பகுத்தறிவுப் பாசறை’க்கான ஆட்களை கனிமொழி நியமிக்கிறார். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்துகிறார்களா அல்லது தங்களது கோஷ்டிகளைப் பலப்படுத்துகிறார்களா என்பதுகூடப் புரியாத அளவுக்குத் தி.மு.க. தொண்டன் விவரம் அறியாதவன் அல்ல!

தலைமைப் பதவி விவகாரத்தில் மட்டும் கருணாநிதி முடிவு எடுக்க மாட்டார். ஏனென்றால், அது அவரது பிம்பத்துக்கு வேட்டுவைக்கும் காரியம். மூன்று பேருமே தனது ரத்த பந்தங்கள் என்பதால், மூவரையுமே தட்டியும் கொடுத்து, தட்டியும் வைக்கிறார். ஆனால், இது இன்னும் சில மாதங்கள்கூடத் தாக்குப் பிடிக்காது என்பதே நிதர்சனம். அவர் கையில் பற்றவைத்திருக்கும் சாட்டை, அவரது விரல் வரைக்கும் வந்துவிட்டது. லேசாக அந்தச் சூட்டை அவர் உணர ஆரம்பித்துவிட்டார். வெளியில் காட்டிக்கொள்ளாமல் வெப்பத்தைத் தாங்க நினைத்தால் கை மட்டுமல்ல... கட்சியே பழுத்துப்போய்விடும் அபாயம் இருக் கிறது.

           வெத்து வேட்டுகள்!

படா படா பட்டாசுகளைப் பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி அடுக்கிவிட்டு, ஒரு பக்கெட் தண்ணீர் எடுத்து அதன் மீது ஊற்றினால் எப்படி இருக்கும்? விஜயகாந்தின் இன்றைய நிலைமை இதுதான்.

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

சூப்பர் பாப்புலாரிட்டியைச் சும்மா உட்கார்ந்தே கரைக்க ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த். அதனால்தான் கட்சியே தரைதட்டி நிற்கிறது. 29 எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க் கட்சித் தலைவர் என்ற மகுடம், கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே வாய்த்தது. தி.மு.க-வும் பிடிக்காத, அ.தி.மு.க-வும் பிடிக்காத வாக்காளர்களின் கண்ணுக்கு ஆபத்பாந்தவனாகத் தெரிந்தார். எட்டு சதவிகிதத்தை நெருக்கி வாக்குகளைத் திரட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதனாலேயே கார்டன் கதவு திறந்தது. 40 கிடைத்தது. அந்த அரசியல் அந்தஸ்தைத் தனது செயல்பாடுகளின் மூலமாகத் தக்கவைத்துக்கொள்ள விஜயகாந்த் தவறிவிட்டார்.

பெரும்பான்மையாக இருக்கும் ஆளும் கட்சி, அதுவும் தன்னோடு கூட்டணி அமைத்து வென்ற எதிர்க் கட்சியை உதாசீனப்படுத்தவே செய்யும். அதுதான் அரசியல். அதை மட்டுமல்ல, எதையும் சகித்துக்கொண்டு சட்டசபைக்குள் விஜயகாந்த் இருந்திருக்க வேண்டும். அவர் உள்ளே இருந்தால், 29 தே.மு.தி.க. உறுப்பினர்களுக்குமாவது தைரியம் இருந்திருக்கும். 'படத்தில் ஒரு ஹீரோதான் இருக்க வேண்டும்’ என்று சினிமா மாதிரியே நினைத்ததன் விளைவு இது.

தினம் இருவர் இருவராகக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதிர் முகாமில் தஞ்சம் அடைவது, விஜயகாந்தின் ஒரே பெருமையான 'எதிர்க் கட்சித் தலைவர்’ அந்தஸ்தையும் பறித்துவிடும்! இணை கமிஷனர் புரமோஷனில் தானாகவே அடுத்து கமிஷனர் ஆவதுபோல எதிர்க் கட்சித் தலைவராக வருபவரே, அடுத்து முதல்வராவார் என்று தே.மு.தி.க. தலைவன் நம்பிவிடக் கூடாது!

வெடிகுண்டுகள் எப்போது வெடிக்கும்?

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

காது ஜவ்வினைக் கிழிக்கவைக்கும் அளவுக்கு குபீர் அணுகுண்டுகளை வைகோ, நாஞ்சில் சம்பத் இருவருமே பற்றவைத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ஆனால், வெறும் புகைதான் வருகிறது. லேசாகப் பொறி தெரிகிறது. ஆனால், 15 நாளாக வெடிக்கவே இல்லை.

நாஞ்சில் சம்பத், மேடையில் ஒன்பது மணி நேரம்கூடப் பேசலாம். ஆனால், வைகோவுக்கு ஒரு ஹலோ சொல்லக்கூட மனம் இல்லாமல் இருந்ததுதான் இந்த மனக் கசப்புக்குக் காரணம். வைகோவிடம் பேசுவது இல்லை, அவரைப் பார்ப்பது இல்லை, அவர் செய்த உதவிக்கு நன்றி சொல்லவில்லை என்று பல 'இல்லை’கள் பட்டியல் போடப்படுகின்றன. 'எனக்கான முக்கியத்துவத்தை வைகோ தரவில்லை’ என்று அனைத்துக்கும் ஒற்றை வரியில் சம்பத் காரணம் சொல்கிறார். 'அவரா நீக்கட்டும்’ என்று சம்பத்தும், 'அவரா போகட்டும்’ என்று வைகோவும் தாங்களாக முடிவெடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறார்கள்.

சம்பத்தை உள்ளே இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பெரிய கட்சிகளுக்கு இருக்கிறது. 'அவரைச் சமாளிக்க முடியுமா?’ என்ற தயக்கமும் கூடவே இருக்கிறது. சம்பத் குண்டு எங்கிருந்து வெடிக்கப்போகிறது என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது!

'ஐயோ... நாறுதே!’

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

பட்டாசுகளில் பாம்பு மாத்திரைக்கு விசேஷ குணம் உண்டு. பற்றவைத்ததும் நாற்றம் குபுகுபுஎனக் கிளம்பும். டெல்லியில், காங்கிரஸ் ஆடிக் கொண்டு இருப்பது இந்த விளையாட்டைத் தான். தினமும் ஓர் ஊழல் நாற்றம் வெளியில் கசிகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் ஆரம்பித்தது இது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்துவதில் கல்மாடி ஆட்கள் முடிந்தவரை சுருட்டினார்கள். கார்கில் போர் வீரர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீட்டிலும் சுயநல சக்திகள் உள்ளே புகுந்தன. மன்மோகனின் அமைச்சரவையில் இருக்கும் 15 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலையே கொடுத்தது அண்ணா ஹஜாரே குழு. அதை எதிர்த்துப் பேசிக்கொண்டு இருந்த சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்கூட இப்போது சிக்கிக்கொண்டார். நிலக்கரி ஊழல் சந்தி சிரிக்கிறது. சி.ஏ.ஜி. ரிப்போர்ட்

வெ(ட்)டி பாலிடிக்ஸ்!

வந்தாலே ஏதாவது ஓர் ஊழல் வெளிவருவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் சோனியாவுக்கோ, ராகுலுக்கோ கவலை இல்லை. ஏற்கெனவே 'போஃபர்ஸ்’ பட்டம் தாங்கியவர்கள் அவர்கள். 'போஃபர்ஸை மறந்தது மாதிரி இதனையும் மறந்துவிடுவார்கள்’ என்று சிரித்தபடியே பேசும் அளவுக்கு மத்திய அமைச்சர்களுக்கு நம்பர் 10, ஜன்பத் ரோடு வீட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறதுபோல!

அடுத்த தீபாவளியிலாவது நிஜ நரகாசுர வதம் நடக்கும் என நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு