Published:Updated:

மீண்டும் வருமா சீரணி அரங்கம்?

Vikatan Correspondent

டிச.11,2010

கடந்த ஆட்சியில் இரவோடு இரவாக காணாமல் போன கண்ணகி சிலை தி.மு.க ஆட்சியில் மீண்டும் அதே இடத்தில் நிறுவபட்டுவிட்டது. அதேபோன்று கடற்கரையில் கண்ணகி சிலைக்கு பக்கத்திலேயே காணாமல் போன சீரணி அரங்கமும் மீண்டும் உயிர் பெறவேண்டும், அங்கு முன்பு போலவே பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ##~~##

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த 'சீரணி அரங்கம்' அண்ணா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அண்ணா உருவாக்கிய 'சீரணிப்படை' என்கிற அமைப்புதான் 'சீரணி அரங்கம்' என்கிற கட்டடத்தை பொதுக்கூட்டம் நடத்துவதற்காக கட்டியது.

மீண்டும் வருமா சீரணி அரங்கம்?

இந்த மேடைதான் பின்னர் 'சீரணி அரங்க'மாக மாறியது. இங்கு அரசியல் பொதுக்கூட்டங்கள், விழாக்கள், மத நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2003ம் ஆண்டு நள்ளிரவு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு அப்போது எதிர்கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு கிளப்பின.

அதன்பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடற்கரையில் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும் அரசு மவுனம் சாதித்தே வருகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் வரதராஜனிடம் பேசினோம். "சுதந்திர போராட்ட தேசியத் தலைவர்களும் சிங்காரவேலர், ஜீவா, ராமமூர்த்தி, அண்ணா, காமராஜர் போன்றவர்களும் கடற்கரையில் பேசியிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது எல்லோக்கும் இருக்கும் உரிமை. சுகாதாரத்தை பேணுவதாகச் சொல்லி ஜனநாயக உரிமைக்கு தடை விதிக்க முடியாது. அந்த உரிமை கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டது. இதனை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டம் நடத்த அனுமதிப்போம்' என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரை வாக்குறுதியை காப்பாற்றவில்லை.
பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் கடற்கரை அசுத்தம் செய்யப்படுகிறது என்று சொல்லி ஜனநாயக உரிமையை எப்படி பறிக்க முடியும். எப்படியானாலும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வரத்தானே செய்கிறார்கள், அப்போது அசுத்தம் ஏற்படத்தானே செய்கிறது," என்றார் வரதராஜன்.
 
தமிழக பி.ஜே.பி.யின் துணைத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "சீரணி அரங்கம் இருந்த இடம் ஆரம்பத்தில் திலகர் திடல் என்ற பெயரில்தான் இருந்தது. மீண்டும் அந்த இடம் கட்டப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. உப்பு சத்தியாக்கிரக நிகழ்ச்சி இங்குதான் நடந்தது. இங்கேதான் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பாரதமாதா ஆலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். மகாத்மா காந்தி, நேரு, பாரதி, சத்தியமூர்த்தி, காமராஜர் என அந்த இடத்தில் பேசாத தலைவர்களே இல்லை.

இப்படி சுதந்திர போராட்டகளமாக, சரித்திர முக்கியம் வாய்ந்த அந்த இடத்தில் திலகர் திடல் என்கிற பெயரே காணாமல் போனது. மீண்டும் சிரணி அரங்கத்தை திலகர் திடல் என்ற பெயருடன் திறக்க வேண்டும். மேலும் அங்கே அதோடு மதக்கூட்டங்கள் மட்டும் அங்கே நடத்த அனுமதிக்க கூடாது," என்றார்.

காந்தி டிரஸ்ட் அமைப்பின் தலைவர் சீனிவாசன், சீரணி அரங்கம் வேறு. திலகர் திடல் வேறு என்று சொல்கிறார். "கண்ணகி சிலைக்கு வடக்கே மாநிலக் கல்லூரிக்கு எதிரில்தான் திலகர் திடல் இருந்தது. பெரிய காலி மனையில்தான் அப்போது கூட்டம் நடந்தது. அங்கேதான் காந்திஜி, நேதாஜி போன்றவர்கள் உரையாற்றி இருக்கிறார்கள். அந்த இடத்தின் நினைவை போற்றும் வகையில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அரசு மறுத்துவிட்டது. அதன்பிறகுதான் வழக்கு போட்டேன். கடற்கரையில் கல்வெட்டு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி வரும் குடியரசு தினத்தில் அங்கே கல்வெட்டு வைக்கப்படும் என்று அரசு சொல்லியிருக்கிறது," என்கிறார்.

"வேறு மாவட்டங்களில் போன்று கூட்டம் நடத்த விசாலமான இடம் சென்னையில் இல்லை. அதனால் கடற்கரையில் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். குப்பை போன்ற அசுத்தம் எதுவும் ஏற்பட்டால் அதை கூட்டம் நடத்துபவர்களே சுத்தம் செய்து தரவேண்டும் என்று நிபந்தனைகள் எல்லாம் விதித்து கூட்டம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்," என்று சொல்கிறார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதே கோரிக்கையை முன்வைக்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா ''ரமலான் பக்ரீத் பெருநாட்களின் போது சிறப்பு தொழுகைகள் மெரீனா கடற்கரையில்தான் காலம்காலமாக நடந்துக்கொண்டிருந்தது. அதை தடுத்துவிட்டார்கள். இது மத அடிப்படை உரிமையையே பறிப்பதாகும். கூவத்தை ஒட்டி இருக்கும் தீவுத்திடலில்தான் இப்போது பண்டிகையின் போது தொழுகை நடக்கிறது. அசுத்தம் நிறைந்த அந்த இடத்தில் தொழுகை எப்படி நடத்த முடியும்? எங்களுக்கு மட்டுமல்ல எல்லா சமூகத்தினரும் கடற்கரையை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்," என்றார்.

அ.தி.மு.க. தரப்பில் பேசிய போது, "உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையை மேலும் அழகுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சீரணி அரங்கத்தை அம்மா அரசு இடித்தது. யாருக்குமே பயன்படாமல் வெறுமனே இருந்த சீரணி அரங்க கட்டடத்தை இடித்ததில் எந்த தவறும் இல்லை. கடற்கரையில் பொதுக்கூட்டங்களை நடத்த விதிக்கபட்ட தடையால் நாங்களும்தானே பாதிக்கப்பட்டோம். புதிய நீச்சல் குளம், உழைப்பாளர் சிலை அருகில் செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்காக்கள், என்று கடற்கரையை அழகு படுத்தினோம்.

கடற்கரை மணலில் இருக்கும் குப்பைகள அகற்றுவதற்காக வெளிநாட்டில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வந்து சுத்தப்படுத்தினோம். இப்போது அதைத்தானே தி.மு.க.வும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தால் கடற்கரையில் அழகு கெட்டு போகும்," என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் விசாரித்தோம்.. "தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கண்ணகி சிலையை மீண்டும் திறந்து வைக்கப்பட்ட போதும் கடற்கரை சாலையில் நடிகர் சிவாஜிக்கு சிலை திறக்கப்பட்ட போதும் இந்த நிகழ்ச்சிகள் கடற்கரையில் நடக்கவில்லை. சாலையில்தான் நடந்தது. கடற்கரையில் கூட்டம் நடத்த தடை என்று முந்தைய அரசு போட்ட உத்தரவுதான் இப்போதும் தொடர்கிறது," என்றனர்.

அப்படியென்றால் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிக்கு என்ன அர்த்தம்? 
 
- எம்.பரக்கத் அலி