Election bannerElection banner
Published:Updated:

விடுதலை சிறுத்தை கட்சியினர் அன்புமணியை தாக்கியுள்ளனர்: ராமதாஸ்

விடுதலை சிறுத்தை கட்சியினர் அன்புமணியை தாக்கியுள்ளனர்: ராமதாஸ்
விடுதலை சிறுத்தை கட்சியினர் அன்புமணியை தாக்கியுள்ளனர்: ராமதாஸ்

விடுதலை சிறுத்தை கட்சியினர் அன்புமணியை தாக்கியுள்ளனர்: ராமதாஸ்

விடுதலை சிறுத்தை கட்சியினர் அன்புமணியை தாக்கியுள்ளனர்: ராமதாஸ்

சென்னை: அன்புமணி ராமதாஸை பதுங்கி இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியுள்ளனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்றிரவு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெத்தூர் காலனி என்ற இடத்தில் அவரது வாகனம் மீது சரமாரியாக கற்களை வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் மீது நடத்தப்பட்டத் தாக்குதலை சாதாரணமான ஒன்றாக கருத முடியாது. அவரை படுகொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டே இக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாலையில் வேகத்தடை அமைந்துள்ள பகுதியில், அன்புமணி ராமதாஸின் வாகனம் குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்த நேரத்தில், சாலையோர விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் பதுங்கியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட வன்முறை கும்பல் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அவ்வாறு வீசப்பட்ட கற்களில் 2 கிலோவுக்கும் அதிக எடையுள்ள கூர்மையான கருங்கல் ஒன்று பிரசார வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு குறிதவறி ஓட்டுனரைத் தாக்கியுள்ளது. சதிகாரர்களின் திட்டப்படி எல்லாமே நடந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாத மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்.

தருமபுரி தொகுதிக்கான வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தாம் அனைவருக்கும் பொதுவான வேட்பாளர் என்றும், பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தை முதன்மை மாவட்டங்களில் ஒன்றாக முன்னேற்றுவது தான் தமது நோக்கம் என்றும் கூறி வருகிறார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் அன்புமணியை தங்கள் வீட்டுப்பிள்ளையாக கருதி, அவர் செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார்கள். தருமபுரி தொகுதியில் அவர் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சக்திகள் ஒன்று சேர்ந்து தான் இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே பா.ம.க. தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வன்னியர் சங்கத் தலைவர் குரு, வேட்பாளர்கள் வடிவேல் ராவணன், அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி, அகோரம் உள்ளிட்டோர் மீது பல வடிவங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியினர் சாதாரண சாலை மறியல் செய்தால்கூட அவர்களை கொத்துக் கொத்தாக கைது செய்யும் காவல்துறையினர், இதற்கு காரணமான சமூகவிரோதிகளை கைது செய்து, அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அன்புமணி மீதும் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், அவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் காவல்துறை இன்று வரை நிறைவேற்றவில்லை. இதன் விளைவாகவே இக்கொடிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்களை சீர்குலைக்க வேண்டும்; அன்புமணி ராமதாஸின் உயிரைப் பறிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இத்தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் இதற்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணிக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கியத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களுக்கு முன்னும், பின்னும் காவல்துறையினர் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேநேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டும்; எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு