Published:Updated:

தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு துணை போகிறார் ஜெயலலிதா: வைகோ குற்றச்சாட்டு

Vikatan Correspondent
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு துணை போகிறார் ஜெயலலிதா: வைகோ குற்றச்சாட்டு
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு துணை போகிறார் ஜெயலலிதா: வைகோ குற்றச்சாட்டு
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு துணை போகிறார் ஜெயலலிதா: வைகோ குற்றச்சாட்டு
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு துணை போகிறார் ஜெயலலிதா: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: விவசாயிகளை வஞ்சிக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளின் நடவடிக்கைளுக்கு ஜெயலலிதா அரசு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அரசு நிர்ணயித்த கரும்பு கொள்முதல் விலையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய- மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளை நசுக்குவதையே குறிக்கோளாகச் செயல்படுகின்றன. பத்தாண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வேளாண்மைத் துறை நாட்டின் முதன்மையான இடத்தை இழந்தது மட்டுமல்ல, முற்றாகச் சீரழிந்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு, விவசாயிகளுக்காக வெற்று அறிவிப்புகளை மட்டுமே செய்து வருகின்றது. தமிழக அரசு அறிவித்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில்லை என்பதற்கு உதாரணம்தான், கரும்பு கொள்முதல் விலை விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பயன்தரவில்லை.

கரும்பு பயிரிடுவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது. பல்வேறு இயற்கை இடர்பாடுகள், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலையாட்கள் கிடைக்காமை போன்ற சோதனைகளை எதிர்கொண்டு விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தவாறு, கரும்பு உற்பத்தி செலவில் மேலும் 50 விழுக்காடு சேர்த்து, கரும்பு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

வயல் விலையாக கரும்பு டன் ஒன்று 3,500 ரூபாய் நிர்ணயம் செய்தால்தான் கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் போராடி வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 21இல் முதல்வர் ஜெயலலிதா கரும்புக்கு டன் ஒன்றுக்கு போக்குவரத்துச் செலவு உட்பட 2,650 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று அறிவித்தார். விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் கட்டிபடியாகாத விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும் இந்தத் தொகையைக்கூட சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்குவதை தமிழக அரசு உறுதிசெய்யவில்லை என்பதுதான் வேதனை தருகிறது.

தமிழ்நாட்டில் இயங்கும் 25 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் சுமார் 140 இலட்சம் டன் கரும்பு கொள்முதல் செய்கின்றன. நடப்பு பருவத்தில் தமிழக முதல்வர் அறிவித்த 2,650 ரூபாய் தனியார் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் விலையாக வழங்க முன்வராமல், அதிலும் 300 ரூபாய் குறைத்து, வெறும் 2,350 ரூபாய் மட்டுமே தருகின்றன.

விவசாயிகளை வஞ்சிக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளின் இத்தகைய நடவடிக்கைளுக்கு ஜெயலலிதா அரசு துணைபோவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு, கடந்த டிசம்பரில்7,200 கோடி ரூபாய் சர்க்கரை ஆலைகளுக்கு வட்டி இல்லா கடனாக வழங்குவதற்கு பரிந்துரை செய்தனர். இத்தொகையில் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்புக் கொள்முதல் தொகை வழங்கப் பயன்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கு பயன்தரவில்லை.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு நிர்ணயம் செய்த கரும்பு கொள்முதல் விலை 2,650 ரூபாய் விவசாயிகளுக்குக் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.