Published:Updated:

பா.ஜனதா போட்டியிடாத நீலகிரியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: தமிழருவி மணியன்

Vikatan Correspondent
பா.ஜனதா போட்டியிடாத நீலகிரியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: தமிழருவி மணியன்
பா.ஜனதா போட்டியிடாத நீலகிரியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: தமிழருவி மணியன்

நாகர்கோவில்: நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம் எனக் கூறியுள்ள காந்திய மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன், அத்தொகுதி மக்களும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து காந்திய மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன் பிரசாரம் மேற்கொண்டார்.

பா.ஜனதா போட்டியிடாத நீலகிரியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: தமிழருவி மணியன்

இதையடுத்து, இன்று (12ஆம் தேதி) மதியம் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும். மற்ற இடங்களில் இரண்டாம் இடம் கிடைக்கும். தி.மு.க. பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையேதான் நேரடிப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்குப் பின் 280 இடங்களுக்கு மேல் பெற்று பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி கட்சிகளுக்கும் அதில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்று மோடி சொல்வது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

வட இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. இது மன்மோகன்சிங்கிற்கும் தெரியும். அதனால்தான் தனது பிரதமர் இல்லத்தை விட்டு இப்போதே வெளியேறுகிறார். தமிழ்நாடு, கர்நாடகத்தில் காங்கிரசிற்கு கடுமையான எதிர்ப்பலை வீசுகிறது. அதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும்.

நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரின் பொறுப்பின்மை காரணமாக தாமரைக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. நீலகிரியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் 1,76,000 கோடி ஊழல் ஏற்படுத்திய மிகப் பெரிய ஊழல்வாதி. அதனால் அவரை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க. வேட்பாருக்கு காந்திய மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. அ.தி.மு.க.வை ஆதரிக்கும் படி நீலகிரி மக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி காந்தியமக்கள் கட்சி தலைவி வள்ளிரமேஷ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

மோடி திருமணமானவர் என்று தற்போது குற்றச்சாட்டுகளை கருணாநிதியும் கூறி வருகிறார். அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அவரது மனைவி அவரைப்பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டையும் சொல்லவில்லை. ஒருவரின தனிப்பட்ட அக வாழ்வை அலசி பேசுவது என்றால் ராகுல் முதல் கருணாநிதி வரை பேசலாம். அது கருணாநிதி சொல்வது போல, கண்ணாடி வீட்டிலிருந்து மீது கல் எரிவது போலாகும். பா.ஜ.க ஆட்சியமைத்ததும், அதில் இடம் பெற ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவரோடு ஒருவர் போட்டிப் போட்டுக்கொள்ளுவார்கள் என்பது உண்மை.

2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. ஆட்சியைமைக்காது. மாறாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைத்திடும். அவர்கள் ஆட்சியைமைத்ததும் போடும் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தும் திட்டத்திற்காகத்தான் இருக்கும்'' என்றார்.

ச.காளிராஜ்

படங்கள்: ரா.ராம்குமார்