Published:Updated:

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

Published:Updated:
மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்
##~##

ழுகார் உள்ளே நுழையவும் மழை பொழியவும் சரியாக இருந்தது. சிறகுகளை சிலுப்பியபடி பேசத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''கடந்த முறை நான் சொன்ன இரண்டு மேட்டர்​களுக்கு ஃபாலோ-அப் இருக்கிறது. குஷ்பு மேட்டரைக் கடைசியில் சொல்கிறேன். முதலில் தலைமைச் செயலகம் பற்றி!'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்.

''முதல்வரின் செயலாளர்கள் பற்றி கோட்டை அதிகாரிகள் தரப்பில் உள்ள வருத்தத்தை நான் சொல்லி இருந்தேன். 'எப்போதும் அவர்கள் முதல்வருடன் இருப்பதால், யாரும் சந்திக்க முடியவில்லை’ என்று வருத்தப்பட்டனர் பலரும். நம்முடைய இதழ் வந்ததும் அதைப்பார்த்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே, 'நானே நினைச்சவுடன் அவங்களைச் சந்திக்க முடியலை. நினைச்சதைச் சொல்ல முடியலை. அப்படி இருக்க, மற்ற அதிகாரிகளால் எப்படி முடியும்?’ என்று கோபமும் வருத்தமுமாகச் சொன்னாராம்.''

''அவருக்கே அந்தக் கதியா?''

''தலைமைச் செயலகத்தில் இப்போது இரண்டு அதிகாரிகளுக்கு 'மாற்றான்’ என்று பெயர் வைத்துள்ளனர். முதல்​வரின் செயலாளர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வெங்கடரமணன், உள்துறைச் செயலாளராக இருக்கும் ராஜகோபால் ஆகிய இருவர்தான் அவர்கள். வெங்கடரமணனின் பதவிக் காலம் முடிந்து விட்டது. ஆனால், அவரது சேவை தேவை என்று நினைத்த முதல்வர் ஐந்து ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தார். அப்போது, தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்றார் வெங்கடரமணன். உள்துறைச் செய லாளராக இருக்கும் ராஜகோபாலுக்கு, திட்டம்-  வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஆணையர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 'பொதுவாக உள்துறைச் செயலாளருக்கு இப்படிக் கூடுதலாக எந்தத் துறையையும் ஒதுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு உள்துறையில் தினமும் ஏராளமான பிரச்னைகளை டீல் செய்ய வேண்டும் என்பதால், கூடுதல் சுமையை திணிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது, ராஜகோபாலுக்குத் திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொடுக்கப்பட்டு இருப்பது அவர் மீது முதல்வர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது’ என்கிறார்கள். ஷீலா ப்ரியா, முதல்வரின் செயலாளர்களில் முதலாமவர். இரண்டாவது ராம மோகன ராவ். சில மாதங்களுக்கு முன்பே, ஷீலா ப்ரியாவின் அதிகாரம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் ராம மோகன ராவ் சமீப காலமாக கொஞ்சம் சைலன்ட் ஆக்கப்பட்டு உள்ளார் என்றும் தகவல். அவர்களுக்கான இடங்களை வெங்கடரமணனும் ராஜகோபாலும் பிடித்து விட்டார்களாம்.''

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

''ம்!''

''இவர்கள் சம்பந்தமாக பலமான விமர்சனங்களும் கோட்டை வட்டாரத்தில் நிலவுகிறது. 'முதல் அமைச்சரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இவர்கள் இணைந்தும், போட்டி போட்டும் செயல்​படுகிறார்கள். வெங்கடரமணன், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு வரை முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கூடுதல் செயலராக இருந்தார். அதன்பிறகு, அசோக் வர்தன் ஷெட்டி ஆசீர்வாதத்தில் 2007 முதல் 2011 வரை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளராக இருந்தார். அதன்பிறகு, மீண்டும் ஜெயலலிதாவின் செயலாளராக ஆனார். இப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இவர்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். முதல்அமைச்சரின் அனைத்து உரைகளையும் இவர்தான் தயாரிப்பதாகச் சொல்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் இவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அமைச்சர்களுக்கு முதல்வரின் உத்தரவைச் சொல்வது இவர் என்பதால், இவரது வாக்கே வேதவாக்காக இருக்கிறது’ என்கிறார்கள்.

தன்னுடைய நண்பர்களை முக்கியப் பதவிகளில் கொண்டுவந்து விட்டார் என்றும் பேச்சு. 'இந்த ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவரும் ஒரு துறைக்கு தனக்கு வேண்டி​யவரைக் கொண்டு வந்தார். அவர்தான் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க அந்தக்கட்சிக்கு உதவியாக இருந்து பல ஆலோசனைகளைச் சொன்னவர். அவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவர வேண்டாம் என்று மூத்த அதிகாரி தடுத்தும் அதை மீறிக் கொண்டுவந்தார்கள். முந்தைய முறை அவர் இந்தத் துறையை சரியாகக் கவனித்திருந்தால், இந்த அளவுக்குத் தட்டுப்பாடு வந்திருக்காதே’ என்கி​றார்கள்.''

''அப்புறம்?''

''ராஜகோபால், நன்றாகப் பேசக்கூடியவர். ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் நடத்திய துறை ரீதியான மீட்டிங்குகளில் அசத்தியவர். முதலில் இவருக்கு உள்துறை தரப்பட்டது. அப்புறம், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொடுக்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அடிமாட்டு விலைக்கு வீடு ஒதுக்கீடு செய்தபோது, 'இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படி உங்களால் கொடுக்க முடிகிறது?’ என்று கேட்டு, தனக்கு வீடு வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர்தான் இந்த ராஜகோபால். 'தகுதி, திறமை உள்ளவராக இருந்தாலும் உள் துறையை வைத்திருப்பவருக்கு இன்னொரு துறை தரலாமா? தமிழகத்தில் கூடங்குளம், பரமக்குடி, சிவகங்கை, தர்மபுரி என்று சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சிதைந்து வருகிறது. அதைக் கவனிப்பவருக்கு இந்தக் கூடுதல் சுமை தேவையா?’ என்பதும் பலரது கேள்வி.''

''திறமைசாலிகள் என்று தெரிந்துதானே முதல்வர் அருகில் வைத்திருப்பார்?''

''அதற்காக மற்றவர்களை உதாசீனப்​படுத்தக் கூடாது என்பது இன்னொரு சாரார் கருத்து. 'முதல்வரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகச் செயல்படுவதை விட, தமிழ​கத்தை  வளப்படுத்தும் திட்டங்களில் இந்த அதிகாரிகள் கவனம் செலுத்தலாம்’ என்பதுதான் ஆதங்கம்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்!

''சிவகங்கை அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் ஆளும் கட்சிப் புள்ளிகள் மீதும் சில சந்தேக ரேகைகள் படிய ஆரம்பித்​துள்ளது.

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

'அமைச்சர்கள் சிலரோடு நெருக்கமாக இருந்தவர் இந்த கதிரேசன். சக்தி வாய்ந்த அமைச்சர் ஒருவரின் தம்பியும் கதிரேசனும்  சிவகங்கை ஏரியாவில் 25 ஏக்கரில் சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு திட்டம் போட்டனர். இது சம்பந்தமாக இரண்டு முறை சிவகங்கைக்கு வந்து கதிரேசனின் வீட்டில் தங்கிவிட்டுப் போய் இருக்கிறார் அமைச்சரின் தம்பி. அப்போது, சோலார் பிளான்ட்டுக்காக இடமும் பார்த்து தன்னுடைய முதல் கட்டப் பங்களிப்பாக இரண்டு 'சி’யை சுளையாக எண்ணிக் கொடுத்தார் அமைச்சரின் தம்பி. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. சொன்னபடி வேலை நடக்கவில்லை. இது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் ஒருவரது வீட்டில் பஞ்சாயத்து நடந்தது. அமைச்சரின் தம்பிக்கு ஆதரவாக மாவட்டத்தின் வக்கீல் மகன் ஒருவர் பேசினார். அப்படியும் வேலை ஆகவில்லை. ஏரியாவில் மற்றவர்களிடம் தோரணை காட்டுவதுபோல் அமைச்சரின் தம்பியிடமும் குரலை உயர்த்தினார்கள். அதுதான் உயிருக்கே உலை வைத்துவிட்டது. பஞ்சாயத்துப் பேசிய மாவட்டத்தின் மகனும் இப்போது சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கிறார்’ என்று பேச்சு.  'கொலையை நீங்க செய்யுங்க... செலவை நாங்க பாத்துக்குறோம்’ என்ற பாணியில் கதிரேசன் கதையை முடித்திருக்கிறார்கள். கொலைக்குப் பயன்படுத்திய லாரியை 1.60 லட்சத்துக்கு அண்மையில்தான் வாங்கி இருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான அர்ச்சுனன் தரப்பு. இவ்வளவு பெரியதொகையைச் செலவுசெய்யும் அளவுக்கு அவர்களிடம் கையில் பசையும் இல்லை; கையில் ஆட்களும் இல்லை. அப் படியானால், கதிரேசன் கொலையின் பின்னணியில் சவுண்டு பார்ட்டிகள் யாரோ இருக்கிறார்கள்’ என்றும் சிலர் ரூட் கொடுக் கிறார்கள்.''

''பகீர் ரகமாக இருக்கிறதே?''

''ஆனால், போலீஸ் தரப்பு வேறுமாதிரி சொல்​கிறது. 'கதிரேசன் பல பேருக்கு இடங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அமைச்சரின் தம்பிக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் பகை இருந்தது என்று இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. கஸ்டடி விசாரணையில் இருப்பவர்களும் அப்படி எந்தத் தகவலையும் சொல்லவில்லை. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் சென்னையில் செட்டில் ஆகி இருக்கிறார். தி.மு.க-வில் கோலோச்சும் அந்தப் புள்ளியின் ஆட்கள், கொலை நடப்பதற்கு முன், அருகில் உள்ள கிராமத்தில் 10 பைக்குகளில் வந்து கூடிப்பேசிக் கலைந்திருக்கிறார்கள். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். முக்கியப்புள்ளி சிக்கினால்தான் யாருடைய கூலிப்படை என்று தெரியும். கூலிப்படை சிக்கினால்தான் இந்தக் கொலையின் கூட்டுச்

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

சதியில் யார் யாருக்குத் தொடர்பு என்ற லிங்க் முழுமையாகத் தெரியும்’ என்கிறார்கள். மொத்தத்தில் சிவகங்கை கொலைக்குள் பெரிய அரசியல் கும்பல் சிக்கி இருப்பது தெரிகிறது.'' என்ற கழுகார் அடுத்து பெங்களூரு மேட்டரை எடுத்தார்...

''கடந்த இதழில், 'ஆறே மாதங்களில் அதிரடித் தீர்ப்பு’ என்று உமது நிருபர்  எழுதியதைப் போலவே, சொத்துக் குவிப்பு வழக்கின் புதிய நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா தன்னுடைய முதல் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கி இருக்கிறார். அதனால், ஜெயலலிதா தரப்புக்கு பயங்கர ஷாக். சசிகலாவுக்கு வரும் டிசம்பர் 10-ம் தேதி ஆஜராகத் தேதி குறித்துள்ளார். கடந்த 20-ம் தேதி பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இந்த வழக்குக்குப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் நாள் விசாரணை என்பதால், அவரைப் பார்க்கவும் அவரது அணுகுமுறையை நோட் எடுப்பதற்காகவும் பலரும் வந்திருந்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும், சென்னையில் இருந்து உயர் பதவியில் இருக்கும் உளவுத்துறை போலீஸாரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

'நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் நியமனம் குறித்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, ஹை கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது அல்லவா? நான் இப்போதுதான் புதிதாக வந்து இருக்கிறேன். அதனால், வழக்கு சம்பந்தமான அத்தனை ஆவணங்களையும் பார்க்க வேண்டும். அதற்காக மூன்று வார கால அவகாசம் எடுத்துக்கொள்கிறேன். அதனால், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அன்றைய தினம் வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் மீதி இருக்கும் கேள்விகள் கேட்கப்படும்’ என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு சட்டென எழுந்து கேபினுக்குள் நுழைந்து விட்டார். இதை, சசிகலா தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.''

''அன்று சசிகலா ஆஜராக வேண்டுமா?''

''ஆமாம்!'' என்ற கழுகார் குஷ்பு மேட்டருக்​குள் நுழைந்தார்.

''குஷ்புவை கோபாலபுரத்துக்கு வரக்கூடாது என்று கருணாநிதி குடும்பத்தினர் சொன்னதை நான் சொல்லி இருந்தேன். 'வரும் நாடாளு​மன்றத் தேர்தலில் சென்னையில் ஏதாவது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று குஷ்பு நினைக்கிறார். அதைக் கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய இருவரிடமும் அவர் சொல்லி விட்டார். இந்தத் தகவல் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்த பிறகுதான், கொந்தளிப்பு கூடியது.  இந்த விஷயங்கள் தயாளு அம்மாளுக்குத் தெரியவந்தபோது அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கருணாநிதி ஆடிப்போனாராம். அது மட்டும் சஸ்பென்ஸ்!'' என்று சிறகுகள் படபடக்கப் பறந்தார் கழுகார்!

படம்: ந.வசந்தகுமார்

 வைஷ்ணவிக்கு கல்யாணம்!

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

மதுரை ஆதீனத்தின் சிஷ்யை வைஷ்ணவிக்கு  வரும் பிப்ரவரி 7-ம் தேதி கல்யாணம் நடக்கப் போகிறது. மாப்பிள்ளை டிப்ளமோ இன்ஜினீயர். வைஷ்ணவியின் சொந்த ஊரான கச்சனம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆதீனம்தான் இந்த திருமணத்தைப் பேசி முடித்தாராம். நவம்பர் 23-ம் தேதி, சொந்த ஊரில்  நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மதுரை ஆதீனம் நேரில் சென்று ஆசீர்வாதம் செய்ய இருக்கிறார். 'அக்கா வைஷ்ணவி இல்லறத்தைத் தொடங்குவதால் விரைவில் ஆதீனத்தின் பணிகளைக் கவனிக்க அவரின் தங்கை கஸ்தூரி ஆதீன மடத்துக்குள் அடியெடுத்து வைக்கலாம்’ என்கிறார்கள் மடத்தின் உள் விவகாரங்கள் அறிந்தவர்கள்!

 இளங்கோவன் மீது என்ன கோபம்?

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்

சோனியாவைச் சந்திக்க நேரம் கேட்டு இரண்டு மாதங்களாக காத்திருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஆனால், அனுமதி நோ. 'தி.மு.க-தான் நம்முடைய கூட்டணியில் இருக்கிறது. அவர்களைத் தேவைஇல்லாமல் ஏன் விமர்சித்துப் பேச வேண்டும்?’ என்று சோனியா கோபப்படுகிறாராம். அதனால்தான், சந்திப்புக்கு நேரம் தரவில்லையாம்!

 அமைச்சர்களுக்கு என்ன காய்ச்சல்?

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணிக்கு தீபாவளிக்கு முந்தைய நாள் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே, அப்போலோவில் தங்கி மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றவர், மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். கோட்டைக்கு வரும்போது தாங்கித் தாங்கியே நடக்கிறார். இந்த நிலையில், செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அப்போலோவில் அட்மிட். கடந்த 20-ம் தேதி கடுமையான காய்ச்சல் என்று வந்தாராம். மூன்று நாளில் இவரும் டிஸ்சார்ஜ் ஆனார்.  கேட்டால், 'இவர்களுக்கு சாதாரணக் காய்ச்சல்தான்’ என்று இவரைச் சுற்றி உள்ளவர்கள் சொல்கிறார்கள். அதற்குள் அமைச்சர்களின் எதிர் கோஷ்டியோ, 'டெங்கு’ என்று கிளப்பி விடுகிறார்கள்.

மிஸ்டர் கழுகு: கோட்டையில் மாற்றான்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism