Published:Updated:

பெற்ற தாய், பாலுக்கு விலை கேட்பதுபோல் ஜெயலலிதா தண்ணீரை விற்கிறார்: மு.க.ஸ்டாலின்

பெற்ற தாய், பாலுக்கு விலை கேட்பதுபோல் ஜெயலலிதா தண்ணீரை விற்கிறார்: மு.க.ஸ்டாலின்
பெற்ற தாய், பாலுக்கு விலை கேட்பதுபோல் ஜெயலலிதா தண்ணீரை விற்கிறார்: மு.க.ஸ்டாலின்
பெற்ற தாய், பாலுக்கு விலை கேட்பதுபோல் ஜெயலலிதா தண்ணீரை விற்கிறார்: மு.க.ஸ்டாலின்

ஈரோடு: பெற்ற தாய், பாலுக்கு விலை கேட்பதுபோல் ஜெயலலிதா தண்ணீரை விற்கிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, ''தி.மு.க. ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது.

இதற்கு காரணம், 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். அப்போது, தமிழகத்தில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டப்படவில்லை. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஏராளமான தொழில்களை கொண்டு வந்தோம். அப்போது தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தேவை என்பதால், 2 மணி நேரம் மின் வெட்டினை நாம் சந்தித்தோம்.

அதே நேரம், வருங்காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கினோம். 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய மின் உற்பத்தி திட்டங்கள் 70 சதவீதம், 80 சதவீதம், ஏன் 90 சதவீதம் வரை பணிகள் முடிந்தன. ஆனால் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இந்த திட்டங்களை வேகப்படுத்தி முடிக்காமல் கிடப்பில் போட்டதால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மின்வெட்டு பிரச்னையை தீர்க்க முடியவில்லை.

தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக குடிநீர் வாரியம் தனியாக அமைக்கப்பட்டது. கூட்டுக்குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் அம்மா குடிநீர் என்று 10 ரூபாய்க்கு தண்ணீரை விற்கிறார்கள். இதை வேடிக்கைக்காக நான் கூறவில்லை. வேதனையுடன் கூறுகிறேன்.

பல நிறுவனங்கள் தண்ணீரை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஒரு அரசு தண்ணீரை விற்பனை செய்கிறது என்றால் அது உலகத்திலேயே தமிழக அரசு மட்டும்தான். தாய் பெற்ற குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு விலை கேட்பதுபோல ஜெயலலிதா தண்ணீரை விற்கிறார். அம்மா குடிநீர் சும்மா கிடைக்கும் என்று பார்த்தால், 10 ரூபாய்க்கு விற்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் நெசவாளர்களுக்கு மின்சாரம் இலவசமாக கொடுத்தோம். ஆனால் அ.தி.மு.க. அரசு இலவச மின்சாரத்தை தடை செய்தது. அதுவும் நல்லதுதான் மின்சாரம் இருந்தால்தானே இலவசமாக கொடுப்பதற்கு! விவசாயிகள், நெசவாளர்களுக்கு விரோதமான ஜெயலலிதா அரசுக்கு இந்த தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மத்தியில் நிலையான நேர்மையான ஆட்சி வரவேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி உருவாக வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டுபவர் பிரதமராக அமரவேண்டும். அதற்கு இந்த தேர்தலை தமிழக மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு, ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி தேடி தரவேண்டும்" என்றார்.