Published:Updated:

நெல்லையில் ஸ்டாலின் மீது வழக்கு: விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

விகடன் விமர்சனக்குழு
நெல்லையில் ஸ்டாலின் மீது வழக்கு: விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
நெல்லையில் ஸ்டாலின் மீது வழக்கு: விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
நெல்லையில் ஸ்டாலின் மீது வழக்கு: விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

நெல்லை: ஸ்டாலின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நெல்லை பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவரான வக்கீல் அருள்ராஜ் என்பவர், நெல்லை நீதிமன்றத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சேகர்பாபு ஆகியோர் மீது வழக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ''கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஒரு நாளிதழில் வெளியான விளம்பரத்தில், மகாபாரத போருக்கு அர்ஜூனன் ரதத்தில் செல்லும்போது, கிருஷ்ணர் ரதத்தை ஓட்டிச் செல்வது போன்ற படம் வெளியாகியிருந்தது. அதில் அர்ஜூனராக ஸ்டாலினும், கிருஷ்ணராக சேகர் பாபுவும் சித்தரிக்கப்பட்டதுடன், ரதத்தின் மேல் இருக்கும் காவி கொடிக்கு பதிலாக தி.மு.க. கொடியை பறக்கவிட்டிருந்தனர்.

இந்த விளம்பரம் இந்துக்களின் மனஉணர்வுகளை புண்படுத்தியதுடன், இந்துக்களின் புனித நூலான கீதையை களங்கப்படுத்துவதாகவும் இருந்தது. வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் செயல்பட்ட ஸ்டாலின், சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த விளம்பரம் வந்த மறுநாளே பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக முதல்வருக்கு மனு கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதித்துறை நடுவர், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 24ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.