நாடு முழுவதுமுள்ள மாநில மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இளநிலைப் படிப்புக்கு 15 சதவிகிதமும், முதுநிலைப் படிப்புக்கு 50 சதவிகித இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் ஓர் இடம்கூட ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்படுவது கிடையாது. அதனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் இந்தக் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. தமிழகத்தில் தி.மு.க சார்பிலும், இந்தக் கல்வி ஆண்டே ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.
அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டில், வருமான வரம்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் வருமான வரம்பு எட்டு லட்சம் என்பதை மறுபரிசீலனை செய்யத் தயார் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வைத் தொடங்க அனுமதி கோரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் வகுப்பினருக்கு 10 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தனர். மேலும், 10 சதவிகித ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இந்தக் கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை மேற்கொள்ளலாம் என்றும், வரும் மார்ச் மாதம் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இந்த தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ``சமூகநீதியைக் காக்க வேண்டும் என்று தி.மு.க முன்னெடுத்துச் சென்ற இந்த வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இது தமிழக முதல்வருக்குக் கிடைத்த வெற்றி. இதன்படி இந்தியா முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் 4,000 இடங்கள் கிடைக்கும். இதை மிகவும் நல்ல தீர்ப்பாகப் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``PG மருத்துவப் படிப்புகளில் AIQ-க்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், 27% செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட தி.மு.க-வுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி! அநீதியையும் வெல்வோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.