Published:Updated:

சட்டமன்றச் சரவெடிகள்!

எம்.பரக்கத் அலி

சட்டமன்றச் சரவெடிகள்!

எம்.பரக்கத் அலி

Published:Updated:
##~##

வைர விழாக் கொண்டாட்டங்களில் திளைக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம். 60 ஆண்டு கால சட்டசபை நிகழ்வுகளில் சிரிப்பலையை உண்டாக்கிய நறுக்... சுருக்... விவாதங்களில் கொஞ்சம் இங்கே...

 கே.விநாயகம்: ''நான் ஒரு ஆண் சிறுத்தையைத் தந்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். ஒரு பெண் சிறுத்தையைக் கொடுத்திருக்கிறார். இந்த இரண்டும் குடும்பம் நடத்தி குட்டிகளைப் பெற்றுள்ளன. சிறுத்தை கூண்டில் 'அன்பளிப்பு எம்.ஜி.ஆர்.’ என்று மட்டும் எழுதிவைத்திருக்கிறார்கள். என் பெயரை எடுத்துவிட்டார்கள்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமைச்சர் கோவிந்தசாமி: ''அந்த ஆண் சிறுத்தையால் இப்போது நடக்க முடியவில்லை. அதற்குத் தீனி வாங்கிக் கொடுக்க விநாயகம் தன் சம்பளத்தில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும்!''

முதல்வர் அண்ணாதுரை: ''சம்பந்திகள் தனியாகக் கூடிப் பேசிக்கொண்டால் நலமாக இருக்கும்!'' (30.3.1968)

கே.வினாயகம்: ''மெரினா கடற்கரையின் ஒரு பகுதியில் 'லவ்வர்ஸ் பார்க்’ ஒன்று இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல் காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?''

முதல்வர் கருணாநிதி: ''இந்த விஷயத்தில் வினாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்!'' (14.3.1969)

சட்டமன்றச் சரவெடிகள்!

என்.கிட்டப்பா:  ''தஞ்சையில் சில ஆண்டு களுக்கு முன்பு விமானதளம் அமைப்பதற்குச் சில லட்சங்கள் செலவழிக்கப்பட்ட பிறகும்கூட திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது. இதனை அரசு உடனே நிறைவேற்றுமா?''

முதல்வர் கருணாநிதி: ''கிட்டப்பாவுக்கு எனது பதில். அது இப்போது கிட்டாதப்பா!'' (19.6.1971)

லத்தீப்: ''கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலை விடுவதுபற்றி ஆலோசிக்குமா?''

முதல்வர் கருணாநிதி: ''ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை’ கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது!'' (8.12.1971)

ஆற்காடு வீராசாமி: ''கள்ளக்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களைக் கண்டுபிடிக்க, சி.ஐ.டி. போலீஸ் பிரிவில் பெண்களை நியமிக்க அரசு பரிசீலிக்குமா?''

முதல்வர் கருணாநிதி: ''சி.ஐ.டி. பிரிவில் போடலாம். ஆனால், எந்த அளவுக்கு ரகசியத்தைக் காப்பாற்றுவார்கள் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்!'' (13.3.1972)

தேவராசன்: ''பேருந்துகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க ஜப்பானில் ஓட்டுநர்களின் இருக்கைக்கு முன் அவர்களுடைய குடும்பத்தினரின் படத்தை வைத்திருக்கிறார்கள். அந்த முறையை நாமும் கையாண்டால், அவர்களின் மனைவி, மக்களின் படத்தைப் பார்க்கும்போது விபத்து இல்லாமல் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா?''

அமைச்சர் ச.ராமச்சந்திரன்: ''குடும்பத்தினர் படத்தை முன்னால் மாட்டினால் விபத்துகள் குறையுமா... அதிகமாகுமா என்பது அவரவருடைய குடும்பத்தின் நிலைமையைப் பொறுத்துதான் அமையும்!'' (13.3.1973)

சி.ஆறுமுகம்: ''அரசின் இந்த எண்ணெயில் சமையல் செய்யும்போது நுரைத்துக்கொண்டு வந்து பெண்கள் மீது விழக்கூடிய நிலைமை இருக்கிறது. இதைத் தடுக்க அரசு முன்வருமா?''

சபாநாயகர் முனு ஆதி: ''உறுப்பினருக்கு இதிலே அனுபவமோ?''

சி.ஆறுமுகம்: ''இந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும்!''

அமைச்சர் எட்மண்ட்: ''நுரை வருவதைத் தடுப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை!'' (27.8.1977)

என்.கிட்டப்பா: ''அவையில் உள்ள கடிகாரங்களில் ஒரு கடிகாரம் 1.31 என்று நேரம் காட்டுகிறது. இன்னொன்று 1.36 என்று காட்டுகிறது. இதில் எது சரி?''

துணை சபாநாயகர் ச.திருநாவுக்கரசு: ''அவையில் மூன்று கடிகாரங்கள் உள்ளன. இரண்டு கடிகாரங்கள் 1.31 என்று காட்டுகிறது. மெஜாரிட்டியை எடுத்துக்கொள்ளலாம்!'' (5.2.1979)

ஏ.ஆர்.மாரிமுத்து: ''வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கும் முடி முளைக்கும் என்றவுடன், தொழிலாளர் துறை அமைச்சர் தன்னுடைய தலையில் உள்ள இந்த வழுக்கை போகுமா என்று சுட்டிக்காட்டுகிறார். அமைச்சரை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வீர்களா?''

அமைச்சர் ராகவானந்தம்: ''எனக்கு வயது 63. அதனால் வழுக்கைத் தலையாகவே இருக்க விரும்புகிறேன்.''

ஆர்.சௌந்தரராஜன்: ''அமைச்சர் இங்கே இப்படிச் சொன்னாலும் என்னிடத்தில் தனியாக அந்த எண்ணெய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிச்சயம் அந்த எண்ணெய் அவருக்குத் தரப்படும்.'' (15.3.1979)

பி.ஈஸ்வர மூர்த்தி: ''மணிமுத்தாறு நீர் மின் திட்டத்தைத் தொடங்குவதால், வால் இல்லாக் குரங்குகள் எங்கேயும் ஓடிவிடாது. எனவே, திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்!''

அமைச்சர் ச.ராமச்சந்திரன்: ''மின்சாரத்தை எப்படி வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம். அபூர்வக் குரங்குகளை நாம் உற்பத்தி செய்ய முடியாது!'' (4.2.1981)

துரைமுருகன்: (ஒரு புத்தகத்தை அவையில் காட்டி) ''முதல் வகுப்பு மாணவர்கள் சின்னக் குழந்தைகள். இந்தப் புத்தகத்தில் 'ஆ’வென வாயைப் பிளந்துகொண்டு சிங்கம் இருக்கிறது. இதைப் பையன் படிப்பானா? போட்டுவிட்டு ஓடிப்போய்விடுவான்!''

அமைச்சர் அரங்கநாயகம்: ''ஒன்றாம் வகுப்பிலேயே ஒழுங்காகக் கற்றிருந்தால், புத்தகத்தில் உள்ள புலியைப் பார்த்து சிங்கம் என்று சொல்கிற தவறை துரைமுருகன் செய்திருக்க மாட்டார்!'' (6.2.1981)

மு.கருணாநிதி: ''திருப்பத்தூர் இடைத்தேர்தல்குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் வந்தால், அதுகுறித்து அ.தி.மு.க. முடிவு எடுக்கும் என்று முதல்வர் சொன்னார். அதேபோல், இந்திரா காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கடிதம் எதிர்பார்த்துத்தான் முடிவு எடுப்பார்களா?''

முதல்வர் எம்.ஜி.ஆர்: ''தி.மு.க. தலைவர் கருணாநிதியின் போக்கு எப்படியோ, அதை அனுசரித்து எங்களின் முடிவு இருக்கும்!'' (18.2.1982)

ப.பொன்னுரங்கம்: ''அவையில் ஆளும் கட்சியின் பக்கம் விளக்குகள் எரிகின்றன. எங்கள் பக்கம் எரியவில்லை. பாரபட்சம் ஏதாவது இருக்கிறதா?''

சபாநாயகர் ராஜாராம்: ''மின்சாரத்துக்கு ஆளும் கட்சி எது என்று தெரியாது!''

அமைச்சர் ச.ராமசச்ந்திரன்: ''ஒருவேளை அவரவர்களுடைய நல்வினை, தீவினைப்படி வருகிறது என நினைக்கிறேன்!'' (22.3.1982)

க.அன்பழகன்: ''மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன் ஆட்சியில் ஒரு தவறு நடந்தது. அவன் தவறை உணர்ந்தபோது உயிரைவிட்டான் என்ற உன்னதமான வரலாறு அவனுக்கு இருக்கிறது!''

என்.சங்கரய்யா: ''இப்போது அந்த ஸ்டாண்டைக் கடைப்பிடிப்பது என்றால், ரொம்ப உயிர்களை விட வேண்டி இருக்கும்!'' (28.3.1983)

வி.பி.துரைசாமி: ''ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு இருக் கிறது?''

முதல்வர் கருணாநிதி: ''அசையும் சொத்து, அங்கே வந்துபோகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்!'' (24.4.1990)