
தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். 'இந்தியப் பிரஜைகளுக்கான மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் அரசாங்கம் செலுத்தும்’ என்ற முடிவின் மூலம் நல்லதொரு மாறுதலுக்கு வித்திட்டிருக்கிறது மத்திய அரசு. 'உங்கள் பணம் - உங்கள் கையில்’ என்ற கோஷத்தோடு அறிமுகமாகும் இந்தத் திட்டத்தின் பின்னால் 'கை' கட்சியின் தேர்தல் லாபக் கணக்கு இருக்கிறது என்று எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.
அரசால் அறிவிக்கப்படும் எந்தவொரு நல உதவித் திட்டத்தின் பலனும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் வழியிலேயே உறிஞ்சப்பட்டு, வெறும் சக்கை மட்டுமே பயனாளிகளைப் போய்ச் சேரும் கொடுமையைப் பல இடங்களில் பார்க்கிறோம். எனவே, அரசு கஜானாவில் இருந்து நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கும் புதிய திட்டத்தை ஓட்டைகள் இன்றி அமல்படுத்தினால், 'வழிப்பறி' பெருமளவில் தவிர்க்கப்படும். பிழைப்புக்காக வெளியிடங்களுக்கு அடிக்கடி இடம் பெயரும் உழைப்பாளி வர்க்கத்துக்கும் இந்தத் திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருப்பினும், இதைச் செறிவாக நடைமுறைப்படுத்த ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை விவரங்கள் அடங்கிய 'ஆதார்’ அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துரிதமாக்க வேண்டும். கூடவே, செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. எந்தெந்த அரசுத் துறைகளின் உதவிப் பணம், யார் யார் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என்பதை உடனுக்குடன் இணையதளம் மூலம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பாமர மக்களுக்கு இணைய அறிமுகம் இல்லாமல் போனாலும், எதிர்க் கட்சிகளும் சமூக சேவை அமைப்புகளும் இந்தத் தகவல்களைக் கண்காணித்து... பயனாளிகளுக்குப் பக்க துணையாக இருக்க இது உதவும்.
நல்லதை வரவேற்போம்... வெளிப்படும் குறைகளைப் படிப்படியாகச் செம்மைப்படுத்திக் கொள்வோம். மாற்றங்களுக்குத் தயாராகும் சமூகம்தான் முன்னேற்றம் காணும்.