Published:Updated:

மே 1: நமக்காக உழைக்கும் உழைப்பாளர்கள்!!!

விகடன் விமர்சனக்குழு
மே 1: நமக்காக உழைக்கும் உழைப்பாளர்கள்!!!
மே 1: நமக்காக உழைக்கும் உழைப்பாளர்கள்!!!

- ச.ஸ்ரீராம்: படங்கள்: பா.ஓவியா

மே 1 தொழிலாளர்கள் தினம் - காலையில் எழுந்து அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பி ஏசி ரூமில் பைல்களுக்கும், கணினிகளுக்கும் இடையே போராடி டார்கெட்டை முடித்து மேனேஜரிடம் திட்டு வாங்காமல் இயந்திரமாய் உழைப்பவர்களும் உழைப்பாளிகள் தான். இவர்களை தாண்டி நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் தன் வாழக்கையை ஒருநாள் ஓட்டுவதற்கே போராடும் மனிதர்கள், நாம் செய்யும் செயல்களுக்காக உழைக்கும் மனிதர்களை போகிற போக்கில் நாம் சந்தித்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறோம்.அவர்கள் வாழக்கைமுறை மிகவும் சுவாரஸ்யமானது.

மே 1: நமக்காக உழைக்கும் உழைப்பாளர்கள்!!!

நாம் ஒருநாளில் சந்திக்கும் இந்த மனிதர்களின் உழைப்பு அளப்பறியது. காலையில் எழுந்தவுடனே நாம் அருந்தும் தேநீருக்கு பின்னால் தேயிலை தோட்டத்தில் வேலைபார்ப்பவர்கள் தொடங்கி பால் பாக்கெட் போடும் சிறுவன் வரை பலரது உழைப்பு மறைந்துள்ளது.அடுத்தாக நாம் வாங்கும் எடை அதிகமான பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தவுடன் அதில் ஏதாவது சேதாரம் உள்ளதா என பார்க்கிறோமே தவிர அதை கஷ்டபட்டு கொண்டுவந்து சேர்த்த வயதான பெரியவரை நாம் என்றுமே பார்த்ததில்லை.மாலை நேரங்களில் பொழுதைபோக்க நாம் செல்லும் பீச்களிலும்,பார்க்களிலும் நம் கண்ணுக்கு தெரிந்தே பல தொழிலாளர்கள் நமக்காக உழைத்து வருகின்றனர்.நாம் வாங்கி உண்ணும் பொருட்களை தயாரித்து வெயில் என்றும் பார்க்காமல் தங்கள் வேலையை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கும் மனிதர்களை நாம் யாரும் நினைவில் வைப்பதுமில்லை. அவர்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் என்றும் யாரும் இல்லை.ஆனாலும் தினமும் தங்களுக்கான புதிய வாடிக்கையாளர்களை தேடி பயணிக்கின்றனர். ஒரே இடத்தில் நமக்கு நிகரான போட்டியாளர்கள் இருந்தால் அவர்களது பலம், பலவீனம் அறிந்து அவர்களோடு போட்டியிடுவோம், ஆனால் இவர்களை போலவே தொழில் செய்யும் 100 பேர் அங்கு இருந்தாலும் அவர்களின் தன்நம்பிக்கையை நம்பி களமிறங்கும் இவர்களுக்கு முன்னால் மிகப்பெரிய நிறுவனங்கள் வகுக்கும் உத்திகளும் தோற்றுப்போகும்.

நாம் பயணிக்கும் ரயில் மற்றும் பஸ் பயணங்களில் நம்மை தேடி வந்து புத்தகங்கள், பேனாக்கள் விற்பவர்களை நாம் பார்த்திருப்போம் அரைமணிநேர பயணத்தில் நின்றுவிடும் பேருந்திலோ அல்லது இரயிலிலோ தான் இந்த தொழிலாளர்களின் வாழக்கை ஆரம்பமாகிறது.முக்கியமான இடங்களில் மாலை நேரத்தில் புத்தகம், வண்ண ஸ்டிக்கர்களை விற்கும் சிறுவர்களை பார்க்க முடியும் காலையில் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு மாலையில் இந்த வேலையை பார்க்கும் இந்த இளம் உழைப்பாளிகளை பார்க்கும் போது இந்த உழைப்பின் பின்னணியில் உள்ள படிப்பு தான் நம் கண்முன் நிற்கிறது.இவற்றை விடவும் தினமும் நம் தெருவில் உள்ள சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்பவர்களை பார்த்து முகம் சுழித்து செல்பவர்களால் ஒரு நிமிடம்கூட அந்த வேலையை செய்ய முடியாது. தனது பொருளாதார சூழ்நிலைக்காக பீடி தொழிற்சாலைகளுக்கும், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் வேலைக்கு செல்பவர்கள் தங்கள் உடல் பாதிக்கப்பட்டாலும் தங்கள் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணத்தில் தான் வேலைக்கு செல்கிறார்கள்.விடியற்காலையில் சந்தைகளிலும் மார்க்கெட்டுகளிலும் காய்கறி மூட்டைகள் வந்து இறங்கும் முன்னரே காத்திருந்து லோடுகளை இறக்கி ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு சேர்த்து விட்டுதான் தங்கள் காலை உணவை பற்றி சிந்திக்கவே தொடங்குபவர்களை பார்த்திருக்கிறோம், ஆனால் அவர்கள் உழைத்தால் மட்டுமே நம்மால் உண்ண முடியும் என்று சிந்தித்துபார்க்க சில சமயங்களில் தவறிவிடுகிறோம்.

மாதசம்பளம், குடும்பம், அழகான வீடு என்ற வாழ்க்கையில் வாழ்ந்துவரும் நமக்காக உழக்கும் இந்தமனிதர்களின் உழைப்பு இல்லையெனில் நம்மால் எந்த ஒரு காரியத்தையும்  யோசிக்க முடியாது, அவர்களில் சிலருக்கு வீடு கிடையாது, நல்ல உணவு கிடைக்காது தினக்கூலிகளாக வேலை பார்க்கும் இவர்களுக்கு ஒரு நாளை கழிக்க 28 ரூபாய் மட்டும் போதும் என்பது எழுத்து வடிவிலான புள்ளியியல் விவரமாக இருப்பது தான் ஆச்சர்யம். நம்மை போல உழைத்து நமக்காகவும் உழைக்கும் இவர்களுக்கு இந்த நாள் மட்டும் உழைப்பாளர் தினம் இல்லை!! ஒவ்வொரு நாளுமே இவர்களுக்கு உழைப்பாளர் தினம் தான்!! ஒவ்வொரு நாளும் இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்!!