Published:Updated:

குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா

குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா
குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா

குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா

குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா

சென்னை: தான் ஆட்சியில் இருக்கும்போது, தீவிரவாதத்தை ஒழிக்காத கருணாநிதி, ரயில் குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி, 1997ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய கருணாநிதி, தனது மைனாரிட்டி ஆட்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது, அதனை வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு காவல் துறையை சீரழித்த கருணாநிதி, அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி, 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், மனம் போன போக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது என்றும், ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கூறி இருக்கிறார், எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் 'armchair critic' என்ற ஒரு சொல்வடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளாமல், சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த 34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட போலீஸ் பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், 1.5.2014 அன்று பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் பெங்களூரு&கவுகாத்தி விரைவு ரயில், 1.30 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தவுடன், எஸ்&4 மற்றும் எஸ்&5 ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து, ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையத்திற்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் போது, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்வார்கள். அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் வண்டி புறப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆராயப்படுகின்றன. முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று திரு. கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது. எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த விபத்து குறித்து கருணாநிதியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு