Published:Updated:

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

Published:Updated:
##~##

இந்தியாவே எதிர்பார்க்கும் மாநிலத் தேர்தல் குஜராத்!

 குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி விறு​விறுப்பாக நடந்திருக்கிறது. இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் 17-ம் தேதி நடக்க இருக்கிறது.  இப்போது களநிலவரம் எப்படி இருக்கிறது என்று, பி.ஜே.பி-க்குத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக குஜராத் சென்றுள்ள தமிழக பி.ஜே.பி-யின் முன்னாள் தலைவர் சி.பி.ராதா​கிருஷ் ணனிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுநாள் வரை. மோடி ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சிகள்தான் அவரது  வெற்றிக்குக் காரணம்

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

என்று நினைத்து இருந்தேன். ஆனால், அதற்கு இரண்டா​வது இடம்தான். முதல் இடத்தில் சட்டம் ஒழுங்குதான் இருக்கிறது. அந்த அளவுக்கு அமைதியான மாநிலமாக குஜராத் திகழ்கிறது. தனிப்பட்ட கொலை​களும் திருட்டும்கூட மிகக்குறைவு. வங்காள தேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குஜராத்துக்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இருக்கிறார்கள். என்றாலும், உடனடியாக அவர்களைக் கண்டுபிடித்துத் தண்டித்து வெளியேற்றுகிறார்கள். இங்கு நிலவும் அமைதி​யான சூழலால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் குஜராத்தை தங்கள் சொந்த மாநிலமாகவே உணர்கிறார்கள்.

தண்ணீர்த் தேவைக்கு அண்டை மாநிலங்களைத்தான் நம்பி இருக்கிறது குஜராத் என்றாலும், அவற்றை பிரச்னை இன்றி பெறுகிறார்கள். இப்போது, குஜராத்தில் ஓடும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மோடி கையில் எடுத்து இருக்கிறார். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி இருக்கிறார்கள். அதனால், விவசாயம் மேம்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியோடு விவசாயத்​தையும் இணைத்த புதிய சிந்தனைதான் அவருக்கு வெற்றியைத் தந்துள்ளது.

நான் இங்கு பிரசாரத்துக்காக வந்து எட்டு நாட்களே ஆகிறது. இதுவரை மின் வெட்டே ஏற்படவில்லை. இங்கும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன், மின் பற்றாக்குறை நிலவியது. அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல், புதிய திட்டங்களைத் தீட்டி உடனே அந்தப் பிரச்னையைத் தீர்த்தார்.

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

நர்மதை கால்வாய் மீது சூரிய மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்படி பல்வேறு திட்டங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், இன்றைக்கு பக்கத்து மாநிலங்​களுக்கு உபரி மின்சாரத்தைக் கொடுக்கும் அளவுக்கு குஜராத் உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் மின்வெட்டு இப்படியே இருக்குமானால், தொழில் முனைவோர் பலரும் குஜராத்துக்கு வந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு ஐந்து ஆண்டு​களில் 50 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும், 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விவசாயக் கடன்களுக்கான வட்டி முழுமையாக ரத்து என்று பல்வேறு அதிரடித் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார். மோடி சொன்னதைச் செய்வார் என்று குஜராத் மக்கள் நம்புகிறார்கள்.

மோடி, சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை காங்கிரஸ் உருவாக்க முயல்கிறது. மோடி முதல்வராக வந்ததில் இருந்து குஜராத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. முன்பு அடிக்கடி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் அகமதாபாத்தில், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறைகூட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

மோடிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

நரேந்திர மோடி போட்டியிடும் மணிநகர் தொகுதியில் அவரை எதிர்த்து ஸ்வேதா பட் என்ற காங்கிரஸ் வேட்பாளர் நிற்கிறார். அவர் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி. குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளித்தவர்தான் சஞ்சீவ் பட். அப்போதே அவருக்கும் காங்கிரஸுக்கும் ஏதோ மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினோம். இப்போது, அவர் மனைவிக்கு ஸீட் கொடுத்ததன் மூலம் அதை காங்கி​ரஸார் உறுதிப்படுத்தி விட்டனர்.

மோடியின் தீர்க்கமான செயல்பாடுகளால், அவர்தான் அடுத்த பிரதமர் என்று பி.ஜே.பி. பிரசாரம் செய்கிறது. குஜராத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசென்ற மோடி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைமை ஏற்கும் காலம் விரைவில் வரும். குஜராத்தில் பி.ஜே.பி. அமோக வெற்றிபெறும்'' என்றார்.

காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனிடம் பேசினோம். ''தேர்தல் பிரசாரத்தின் ஆரம்ப கட் டத்தில் மோடி மாயை இருந்தது உண்மைதான். ஆனால், அன்னை சோனியா, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பிரசாரத்​துக்குப் பிறகு காங்கிரஸ் பக்கம் மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. குஜராத் கலவரத்தில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்று உண்மை நிலையை சாட்சியம் அளித்தமைக்காக ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் பழிவாங்கப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்த மாநில அரசு, அவர் மீது தேவையில்லாத புகார் சுமத்தி கைது செய்தனர். அந்த அநீதியை மாநில மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே அவருடைய மனைவி ஸ்வேதா பட்டை மோடிக்கு எதிராக நிறுத்தி இருக்கிறோம். அவர் நிச்சயம் மோடிக்கு தகுந்த பாடம் கற்பிப்பார். சிறு பான்மையினரது வாக்குகளை மோடியால் பெறவே முடியாது. குஜராத் முன்னேறிவிட்டது என்று இங்கு சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அதை, குஜராத் மக்கள் நம்ப மாட்டார்கள்'' என்றார். 20-ம் தேதி ரிசல்ட் தெரிந்துவிடும். அதில்தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நிலவரமே அடங்கி உள்ளது!

  - ஆர்.லோகநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism