Published:Updated:

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

Published:Updated:
##~##

விரல்களை மடக்கி 'பாபா’ முத்திரை காட்டி​னார் கழுகார்.  புரிந்தே ரசித்தோம். 

''ரஜினி விசேஷத் தகவல்களோ?'' என்றபடி​ நமது நிருபரின் 'ஸ்பாட் ரிப்போர்ட்'டை கம்ப்யூட்டரில் ஓடவிட்டோம். மின்னல் வேகத்தில் படித்து விட்டு நிமிர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திடீரென போயஸ் கார்டனில் மேடை போடும் வேகம் எப்படி வந்ததாம்?''

''பிறந்த நாள் கொண்டாடுவதற்காக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி கேட்டனர் ரசிகர் மன்றத்தினர். கடைசி வரை இழுத்தடித்து, அதன் பிறகு தரவில்லை என்பது ரஜினியின் கோபமாம். 'தலைவர் நினைத்தால், போயஸ் கார்டனையே ஸ்தம்பிக்க வைத்து விடுவார்’ என்று மன்றத்து ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்ட பிறகுதான், பிறந்த நாளுக்கு முந்தின இரவு மேடை, சவுக்குத் தடுப்பு எல்லாம் போட்டு ரெடி பண்ணும்படி சொன்னாராம். அவரது ரசிகர்களை திரண்டு வரச்சொல்லி அழைப்புகள் பறந்தன. இந்தத் தகவல்கள் ஆட்சியாளர்களை எட்டியது. வள்ளுவர் கோட்டத்தில் பிறந்த நாள் விழா நடத்துவதற்கு அனுமதித்து இருந்தால், ரஜினி மௌனமாக இருந்திருப்பார். அவரைத் தேவையில்லாமல் சீண்டப்போக, டென்ஷன் ஆகிவிட்டார். போயஸ் கார்டன் ஏரியாவைத் திணறடித்து விட்டனர் ரஜினி ரசிகர்கள்?''

''ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்தானே இடம் கிடைத்தது?''

''ம்... பல வருடங்களுக்குப் பிறகு, அவரை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற ரசிகர்களில் சிலர் போட்ட கோஷங்கள் ரஜினியை உற்றுக் கவனிக்க வைத்தது. 'கரன்ட் கட் தொந்தரவு தாங்கலை தலைவா?' என்று சிலர் குரல் விட்டதைக் குறிப்பிட்டுக் கவனித்தார் ரஜினி. மக்களின் எண்ணம் முழுவதும் மின்சாரத் தட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்தார். அதனால்தான் ரசிகர் மன்ற முன்னணி நிர்வாகிகளிடம், 'பிறந்த நாள் நடக்கும் ராயப்பேட்டை மைதானத்தில் மின்சாரத்தை சிக்கனமாக யூஸ் பண்ணுங்கள். தெருக்களில் பிரமாண்ட விளக்குகளைக் கட்டி மின்சாரத்தை வேஸ்ட் பண்ணாதீர்கள். மைதானத்தில் 'ஃபோகஸ்' லைட்டுகளின் எண்ணிக்கையையும் குறையுங்கள்' என்று சீரியஸ் உத்தரவுகளைப் போட்டாராம் ரஜினி.''

''வி.ஐ.பி-க்கள் பாராட்டு எப்படியாம்?''

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

''மருமகன் தனுஷ் வரவில்லை என்பது சினிமா வட்டாரத்தில் முக்கியமான கிசுகிசு. எப்போது கேட்டாலும் தனுஷ் மும்பையில் இருக்கிறார் என்றே சொல்கிறார்களாம் வீட்டில். இரண்டு படங்களுக்​கான வேலை அங்கு நடக்கிறதாம். அதனால் அவர் வரவில்லையாம். 'அவர் வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றிருக்கலாமே’ என்று ரசிகர் மன்றத்தினர் சொல்கிறார்கள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வந்திருந்தார். இரண்டு மணி நேரங்களுக்கு மேல் அவர் அங்கே இருந்துள்ளார். சிவாஜி 3டி படம் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்களாம். கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் போனில் வாழ்த்துச் சொன்னார்கள். போனில் நிறையப் பேர் வாழ்த்தினார்களாம். ஆனால், நேரில் வந்து பெரிய வி.ஐ.பி-க்கள் வாழ்த்து சொல்லவில்லையாம். 'ரஜினி வீட்டில் இருப்பார் என்றே தெரியாது. அதனால் நாங்கள் போகவில்லை’ என்று பலரும் சமாளித்தார்​களாம்'' என்றபடி சப்ஜெக்ட் மாறினார் கழுகார்!  

''மின் வெட்டுப் பிரச்னையை தி.மு.க. கையில் எடுக்கிறது. தலைமைக் கழகத்துக்கு வரும் கடிதங்கள், ஸ்டாலின் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும்போது கட்சிக்காரர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்துமே மின்வெட்டு பற்றியே இருந்ததாம். எனவே, இதுபோன்ற மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்துச் செயல்பட்டால் மட்டும்தான் கட்சியை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள முடியும் என்று கருணாநிதியிடம் ஸ்டாலின் சொன்னாராம். அதன் அடிப்படையில், அவசர அவசரமாக 13-ம் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டப்பட்டது. மின் வெட்டைக் கண்டித்து 18-ம் தேதி மாநிலத்தின் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கப்போகிறார்களாம். கூட்டம் நடத்துவதற்கான நோக்கத்தைச் சொல்லிவிட்டு தீர்மானத்தை ஸ்டாலின் வாசிப்பார் என்று கருணாநிதி சொன்னார். உடனே, ஸ்டாலின் எழுந்து வரிசையாக தீர்மானங்களை வாசித்துள்ளார். அப்போது, லேசான கைதட்டல்கள் எழுந்தது. உடனே குறுக்கிட்ட கருணாநிதி, 'மெதுவாகக் கைதட்டினால் என்ன அர்த்தம். தீர்மானத்தை ஆதரிப்பதாக இருந்தால் பலமாகத் தட்டுங்கள்’ என்றதும் அரங்கம் அதிர்ந்தது.''

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

''ம்!''

''அதன்பிறகு என்ன மாதிரியான போராட்​டம் நடத்துவது என்று ஆலோசனை கேட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் நேரு, 'ஆர்ப்பாட்டம் நடத்தலாம்’ என்றாராம். 'மருத்துவ​மனைகளில்கூட மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள்’ என்றாராம் சங்கரி நாராயணன். 'தஞ்சை மாவட்டம் காவிரி நீர் இல்லாமல் அவஸ்தைப்படுகிறது’ என்று மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் சொல்லி இருக்கிறார். குஷ்புவைப் பேச அழைத்தார்களாம். 'ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக நாம் கட்சியை வளர்த்தால்தான் இளைய தலைமுறையினரின் நட்பைப் பெற முடியும்’ என்றாராம். அதன்பிறகு அன்பழகன் பேசுவார், கருணாநிதி பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க... கருணாநிதி மறுத்து​விட்டாராம்.!''

''ஏனாம்?''

''கருணாநிதி ஏதோ பிடிமானம் இல்லாமல் இருக்கிறார் என்று கட்சிப் பிரமுகர்களே பேசிக்​கொள்கிறார்கள். நாடாளுமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் என்று அறிவித்து ஒவ்வொரு தொகுதியாகச் செல்ல ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின். இதில், கருணாநிதிக்கு உடன்பாடு இல்லையாம். தன்னிச்சையாக ஸ்டாலின் செயல்படுவதாக கருணாநிதி நினைக்கிறாராம். இந்தச் செயற்குழு ஏற்பாடு, ஆர்ப்பாட்ட அறிவிப்பு அனைத்தும் ஸ்டாலின் முயற்சியால் செய்யப்பட்டதாம். அதனால்தான் அவர் பேசுவதற்கு ஆர்வம் காட்ட​வில்லையாம்.''

''அழகிரியும் வந்ததாகத் தெரியவில்லையே?''

''அறிவாலயத்தில் இருந்து அழைத்துள்ளனர். 'வரவில்லை’ என்று சொல்லி விட்டாராம் அழகிரி. 'அவங்க எல்லோரும் மேல உட்கார்ந்திருப்பாங்க.... நான் கீழே உட்கார்ந்து கேட்கணுமா?’ என்று கருணா​நிதி முன்பே கமென்ட் அடித்தவர் அல்லவா? மதுரை மிசா பாண்டியன் இல்லத் திருமணத்தில் பேசிய பேச்சு அழகிரியின் கோபத்தை வெளிக்காட்டியது. 'எனது எதிரிகளை இயற்கை பார்த்துக்கொள்ளும்’ என்று அழகிரி பேசியதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களைச் சொல்கிறார்கள். 'ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறாராம் அழகிரி. எனவே, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எந்தக் கூட்டத்துக்கும் அழகிரி வரமாட்டாராம்!'' என்ற கழுகார் கொஞ்சம் தாமதித்து மீண்டும் ஆரம்பித்தார்!

''கலாநிதி மாறன் மீதான புகார் ஒன்று பூதாகர​மாகக் கிளம்பி இருக்கிறது. 'எந்திரன்’, 'காவலன்’, 'சுறா’ திரைப்படங்கள்தான் புகார்களுக்குக் காரணம். தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் கொடுத்​துள்ள புகாரில், 'ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்’ படத்துக்​கான விநியோக உரிமையைத் தருவதாகக் கூறி கலாநிதி மாறன் என்னிடம் ஆறே முக்கால் கோடி ரூபாய் வாங்கினார். ஆனால், விநியோக உரிமையை எனக்குத் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ரமேஷ், கண்ணன், செம்பியன் ஆகியோரை வைத்து என்னைக் கொலை செய்து​விடுவதாக கலாநிதி மாறன் மிரட்டுகிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் அயனாவரத்தில் உள்ள கோபிகிருஷ்ணா தியேட்டர் உரிமையாளர் நரேஷ் கொடுத்துள்ள புகாரில், 'என்னுடைய தியேட்​டருக்குக் 'காவலன்’ படத்தைத் தருவதாகக் கூறி கலாநிதி மாறன் இரண்டே முக்கால் கோடி ரூபாய் பெற்றார். ஆனால், இதுவரை படத்தைத் தரவில்லை. பணத்தைத் திருப்பிக்கேட்டால் மிரட்டுகிறார்கள்’ என்று புகார் தெரிவித்துள்ளார்.

எப்போதும் இதுபோன்ற புகார்கள் வரும்போது, காவல் துறையினரே செய்தியாளர்களுக்குத் தெரிவிப்பார்கள். ஆனால். இந்தப் புகார் வந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் போலீஸ் ஆர்வம் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. இப்போது​தான், 'அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, பண மோசடி’ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதே சமயம் எதிர்த் தரப்பு, நீதிமன்றத்தை அணுகி காவல் துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை வாங்கி இருக்கிறது. நீதிபதி ஏ.ஆறுமுகச்சாமி, 'வரும் 18-ம் தேதி வரை, யாரையும் கைது செய்யவோ, விசா​ரணைக்கு அழைக்கவோ கூடாது’ என்று உத்தர​விட்டுள்ளார்''

''நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.வின் கொள்கைகளை முழங்க ஆரம்பித்து விட்டாரா?''

''மயிலை மாங்கொல்லையில் கடந்த 12-ம் தேதி பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தனர். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முதலில் கூட்டம் பேசுங்கள் என்பது கட்டளையாம். முதலில் சென்னை அடுத்து திருவள்ளூர் என்று கிளம்ப இருக்​கிறார். இதற்காக ஆளும் கட்சி சார்பில் புதிய கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்களாம்!''

''அப்படியா?''

''இதைக் கேள்விப்பட்ட ம.தி.மு.க. வட்டாரம் ஒரு தகவலைச் சொல்கிறது. 'கடந்த மே மாதம் எங்களது பொதுச்செயலாளரை சந்தித்த சம்பத், புதிய கார் ஒன்றைக் கேட்டார். அதனடிப்படையில் முதலில் 7 லட்சமும் அடுத்து 6 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கும் வைகோ கொடுத்தார். இதுவரை கட்சிக்காக வாங்கிய வாகனங்கள் அனைத்தும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில்தான் வாங்கப்பட்டன. முதன்முதலாக இந்தக் கார் சம்பத் பெயரில் வாங்கிக்கொள்ள வைகோ அனுமதித்தார். அதில்தான் அவர் கரூர் மாநாட்டுக்கு வந்தார். இப்படிப்பட்ட வைகோவைத்தான் ஆறு மாதங்களாக என்னைப் புறக்கணித்தார் என்று சம்பத் பேச ஆரம்பித்துள்ளார்’ என்று சொல்கிறார்கள். மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டத்தில் பேசிய சம்பத், அதிகமாக கருணாநிதியைத்தான் திட்டித் தீர்த்தார். இது ம.தி.மு.க. வட்டாரத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார் ஒரு கணம் திரும்பி, ''மந்திரிகள் இரண்டு பேர் மீது முதல்வர் அதிகப்படியான கோபத்தில் இருக்கிறார். இருவருமே சொந்தத் தம்பிகளால் சிக்கலை எதிர்கொண்டவர்கள். அநேகமாக இருவரது தலையும் உருளலாம்'' என்றபடி விட்டார் ஜூட்!

படம்: சு.குமரேசன்

 வால் நுழைந்தது!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை விரும்பாத மாநிலங்களை வற்புறுத்த மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. தமிழக முதல்வரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், சென்னைக்கு அருகே திருவேற்காடு நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட குடோனில் மூன்றரை ஏக்கர் இடத்தை வால்மாட் பெயரில் ஒரு கம்பெனி வாடகைக்கு வாங்கியுள்ளது. இந்தத் தகவல், நம் வணிகர் அமைப்புகளுக்கு இப்போது தெரியவரவே, எதிர்ப்புக்கொடி தூக்கி இருக்கிறார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த குடோன் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் இன்னமும் அனுமதி வாங்கவில்லையாம். இந்தப் பிரச்னை குறித்து, திருவேற்காடு நகராட்சி மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் குடோனைக் கட்டி வருபவர், அதை வாங்கவில்லையாம். நான்காவது முறையாக பதிவுத் தபாலில் நோட்டீஸ் அனுப்பியும் திருப்பி அனுப்பி​விட்டாராம். ஆனால், கட்டுமான வேலைகள் மட்டும் தொடர்ந்து ஜோராக நடக்கிறதாம். குடோன் கட்டுபவரின் உறவினர்​கள் ஆளும் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

 வயசு கூடுமா?

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!
மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!

குரூப் 1 அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அதில், பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 என்றும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 35 என்றும் பி.சி., எம்.பி.சி-க்கு 40 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 45 என்றும் உயர்த்துவதற்கு முதல்வருக்குக் கோரிக்கை வைத்துள் ளனர். கேரளா, குஜராத், ஹரியானா, அஸ்ஸாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் வயது வரம்பு இதைவிட அதிகமாம். விரைவில், சாதகமான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 சென்னையே இல்லை!

20 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆசிரியர்களை அதிகாலை 5 மணிக்கே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு வரவழைத்து இருந்தனர். ஆனால், பகல் 12 மணிக்கு மேல்தான் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த 20 ஆயிரம் ஆசிரியர்களில் ஒருவருக்குக்கூட சென்னையில் வேலை கொடுக்கப்படவில்லையாம். பட்டதாரி ஆசிரியர் பணிக் கலந்தாய்வில் சென்னை மாவட்டத்தில் ஆசிரியர் பணிஇடம் காலி இல்லை என்று சொல்லி விட்டார்களாம்.

 முதல்வருக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்க இருக்கிறது. அண்ணா சாலை, காயிதே மில்லத் கல்லூரியில் பல ஆண்டுகளாக நடந்த புத்தகக் கண்காட்சி, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடந்தது. இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்துவதற்கு பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாவை அழைக்கத் திட்டமிட்டு, அவருக்கு முறையான கடிதத்தை அனுப்பிவைத்து விட்டுக் காத்திருக்கிறது பதிப்பாளர்கள் சங்கம்.

மிஸ்டர் கழுகு: கப்சிப் கருணாநிதி ஆப்சென்ட் அழகிரி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism