Published:Updated:

வாக்கை நிறைவேற்றாத ஆ.ராசா!

மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து!கே.என்.நேரு கேலி...

வாக்கை நிறைவேற்றாத ஆ.ராசா!

மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து!கே.என்.நேரு கேலி...

Published:Updated:
##~##

திருச்சியில் தொடங்கினால் ஜெயம் என்ற தி.மு.க. சென்டிமென்ட்(!) காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 15-ம் தேதி திருச்சியில் நடந்தது. நகர் எங்கும் அலங்கார வளைவுகள், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், மின் விளக்கு அலங்காரங்கள், பிரமாண்ட பந்தல், தடபுடல் விருந்து என அசத்தி இருந்தனர்.

 'அ.தி.மு.க-வினர் திருமண அரங்குகளில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். நாம் அவர்களை மிஞ்சும் வகையில், ஒரு மினி மாநாடுபோல் நடத்த வேண்டும்’ என்று கட்சி மேலிடம் சொல்லி இருந்ததாம். அதனால், காஜாமலை ஏரியாவில் மூன்று ஏக்கர் பரப்பளவுகொண்ட இடத்தில் பந்தல் அமைத்து, செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் மாவட்டச் செய லாளரான நேரு. அரங்கம் முழுக்க ஆட்களை நிரப்புவதற்காக நேரு எடுத்த முயற்சிகள் அதிகம். தொண்டர்களை அழைத்து வரு​வதற்கு மாநகரக் கிளைக் கழகங்களுக்கும், புறநகர் ஒன்றியங்களுக்கும் வாகனங்​கள் அனுப்பப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக்கை நிறைவேற்றாத ஆ.ராசா!

பகுதிச் செயலாளரான காஜாமலை விஜய், மாநகரச் செயலாளர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார். இவரை ஓரங்கட்டுவதற்கு இப்போதைய மாநகர நிர்வாகிகள் சிலர், காஜாமலை கருப்பையா என்பவரைப் பயன்படுத்திக் கொண்டனர். ஸ்டாலின் வரும்போது வாணவேடிக்கை நடத்தித் தொண்டர்களைக் கொடியுடன் அணிவகுத்து நிற்கச்செய்து அசத்தினார் காஜாமலை கருப்பையா. அவர் ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளிக்க மேடை ஏற, அவரை காஜாமலை விஜய் குரூப் தடுத்து நிறுத்தியது. அதனால், மேடை அருகே ரசாபாசமான நிலை உருவானது. 'கருப்பையாவைப் பரிசு கொடுக்க அனுமதிக்கவில்லை என்றால், ஸ்டா லினை வழிமறித்து நியாயம் கேட்போம்’ என்று சிலர் மேடையின் ஓரத்தில் நின்று கோஷம் போட்ட பிறகே, கருப்பையாவை ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளிக்க அனுமதித்தனர். இதனால், கோபம் அடைந்த காஜா மலை விஜய், மேடையை விட்டுக் கீழே இறங்கி கிளம்பினார். அவரை, மாநகரச் செயலாளர் அன் பழகன் உள்ளிட்ட சிலர் சமாதானம் பேசி திரும்பவும் அழைத்து வந்தனர்.

யாரைச் சொன்னார் நேரு?

முதலில் பேசிய புதுக்கோட்டை கவிதைப்பித்தன், ''உள்ளூரில் போட்டியிடும் தி.மு.க-காரன் தோற்க வேண்டும் என்று சிலர் செயல்படுவதால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தோற்றோம். இப்படிச் செயல்படுகிறவர்களைக் களையெடுக்க வேண்டும்'' என்று பேசி, புதுக்கோட்டை அரசியலில் நிலவுகிற கோஷ்டிப் பூசலை மறைமுகமாக கோடிட்டுக் காட்டினார்.

அடுத்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, ''இந்த முறை புதுக்கோட்டையும் கந்தர்வக்கோட்​டையும் சிக்கல் தராதபடி பார்த்துக்கொள்கிறோம்'' என்று கவிதைப்பித்தனின் பேச்சுக்குப் பதில் சொன்னார்.  

நேரு பேசும்போது, ''தளபதிக்கு யாரெல்லாம் செயல்​வீரர்கள், யாரெல்லாம் வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்துபவர்கள் என்பது நன்றாகத் தெரியும்...'' எனக் குறிப்பிட்டு நிறுத்த, மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ், எம்.பி. சிவா ஆகியோர் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டனர்.

ஸ்டாலின் பேசும்போது, ''வீடுதோறும் சென்று மக்களைச் சந்தித்து இந்த அரசின் அவலங்​களை எடுத்துச்சொல்லும் பிரசாரத்தைத் தொண்டர்கள் இப்போதே தொடங்க வேண்டும். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு அச்சாரம். அதனால் கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், மக்களைச் சந்திக்கும் பணிகளை மேற்​கொள்ள வேண்டும்'' என்று தொண்டர்களை உசுப்பேற்றினார்.

வாக்கை நிறைவேற்றாத ஆ.ராசா!

தங்கச் சங்கிலி பந்தயம்!

அடுத்து கரூர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின், 16-ம் தேதி காலை முசிறியில் நடந்த பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். 'ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஜாமீனில் வந்த பிறகு மாவட்டத்தில் நடத்தப்படும் முதல் கூட்டம் என்பதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்தது.

கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றி பெற்றது. வரும் தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. எனக்கும் அண்ணன் நேருவுக்கும் ஒரு போட்டி வைத்துக்கொள்வோம். எங்கள் தொகுதியைவிட அண் ணன் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால், அவருக்கு 10 பவுன் தங்கச்சங்கிலி போடுகிறேன்'' என்றார்.

அடுத்துப் பேசிய கே.என்.நேரு, ''இந்தப் பஞ்சாயத்தைத் தளபதி அவர்கள்தான் தீர்த்துவைக்க வேண்டும். ராசா இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது, இதேபோல் பந்தயம் கட்டினார். அப்போது துறையூர் தொகுதியில் மட்டும் 35 ஆயிரம் வாக்குகள் பெற்றுக் கொடுத்தோம். ஆனால், அவர் அறிவித்தபடி 10 பவுன் தங்கச்சங்கிலி இன்று வரை தரவில்லை'' என்றார். உடனே ஆ.ராசா எழுந்து, ''இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெறச் செய்துவிட்டால், ஏற்கெனவே வழங்க​வேண்டிய 10 பவுனையும் சேர்த்து 20 பவுனாகக் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.

இந்தக் கலகலப்பான அன்புச் சண்டைக்குப் பிறகு மைக் பிடித்தார் ஸ்டாலின். ''திருச்சி, கரூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தை பெரம்பலூர் தொகுதி கூட்டம் வென்று இருக்​கிறது. இப்படி போட்டி போட்டுக்கொண்டு கழகத்​தினர் பணியாற்றுவது... ஒருவரையருவர் வெற்றி​கொள்ள வேண்டும் என்ற பொறாமையால் அல்ல. நாடாளு​மன்றத் தேர்தலில் கழகம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஒன்றரை ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியால் வேதனை அடைந்த தமிழக மக்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக சட்டமன்றத் தேர்தல் வராதா என்று ஏங்கு​வதை என்னால் உணர முடிகிறது. சுதந்திரப் போராட்டத்​தின்போது ஜவஹர்லால் நேருவிடம் காந்தி சொன்ன, 'டூ ஆர் டை’ என்ற வாசகத்தையே நான் சற்று மாற்றி, 'டூ அண்ட் டை’ என்கிறேன். செய்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்ற உறுதியோடு நாம் இருக்க வேண்டும். சிலர் என்னை வருங்கால முதல்வர் என்று குறிப்பிட்டனர். தலைவர் கலைஞர்தான் எப்போதும் முதல்வர். எனக்குப் பதவி முக்கியம் இல்லை. மக்கள் பணி செய்வதில் முதல்வனாக இருக்கவே ஆசைப்​படுகிறேன்'' என்று முடித்தார்.

அந்த மூன்று பேர்!

மாலை, பெரம்பலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராசா, ''நான் மூன்று பேருக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். முதலாவதாக கலைஞருக்கு, அடுத்ததாக என்னைச் சிறையில் வந்து பலமுறை பார்த்த தளபதியாருக்கும் அண்ணி துர்கா அவர்களுக்கும், கடைசியாக, நான் சிறையில் இருந்தபோது என்னை உங்களில் ஒருவனாக ஏற்று சிறைக்கே வந்த உங்களுக்கும் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்'' என கூட்டத்தைப் பார்த்துச் சொல்ல... தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ''ஒருவேளை இந்த மூவரும் இல்லை என்றால், நான் தற்கொலை செய்திருப்பேனோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது'' என்றார் உணர்ச்சி ததும்ப.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து ராசா அப்பழுக்கற்றவர் என நிரூபிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதனால் அவருக்குக் கவலை வேண்டாம்'' என்று ராசாவை ஆறுதல்படுத்திவிட்டு, ''நீதிமன்றம் உத்தரவிட்டும் எம்.பி. தம்பிதுரை, அமைச்சர் செந்தில்பாலாஜி, கோகுல இந்திராவின் கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்காத ஜெயலலிதாவுக்கு, தி.மு.க-காரர்கள் மீது அதிகப்பாசம். குறிப்பாக, நேரு மீது. அது என்ன பாசமோ... யாமறியேன் பாராபரமே. விரைவில், நேரு செஞ்சுரி அடிக்கப்போகிறார். அவர் மீது, நேற்றுகூட திருச்சியில் வரவேற்புப் பதாகை வைத்ததற்காக மூன்று வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன. இந்த வழக்குகளுக்கு எல்லாம் இந்தப் பனங்காட்டு நரி அஞ்சாது'' என்று சூளுரைத்தார்.

கூட்டத்துக்கு, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நெப்போலியன் வழக்கம்போல் ஆப்சென்ட்!

- அ.சாதிக்பாட்ஷா, சி.ஆனந்தகுமார்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், எம்.ராமசாமி