Published:Updated:

''கருப்பசாமிக்குப் பாடம் புகட்டுவார் அம்மா..''

விஜயகாந்த்தைத் தாக்கிய ஓ.பி.எஸ்.!

''கருப்பசாமிக்குப் பாடம் புகட்டுவார் அம்மா..''

விஜயகாந்த்தைத் தாக்கிய ஓ.பி.எஸ்.!

Published:Updated:
##~##

.தி.மு.க. தொண்டர்களின் இப்போதைய டாப் ஸ்பாட்... நாடாளு​மன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம். கடந்த 14-ம் தேதி, மத்திய சென்னை தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடந்தது. இதில், விஜயகாந்த்தை உரசிப் பார்த்தனர். 

முதலில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, ''கடந்த நாடாளு​​மன்றத் தேர்தலில் அம்மா,  மேடையில் இருக்கும் முகமது அலி ஜின்னா என்ற சாதாரணத் தொண்டனை மத்திய சென்னையில் நிறுத்தினார். ஆனால், அவரை எதிர்த்து கருணாநிதி குடும்பத்துக் கோமகன் போட்டி யிட்டார். அவர், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர். நாம் சொற்ப ஓட்டுகள் வித்தி யாசத்தில்தான் தோற்றோம். அன்றைக்கு ஆட்சி அதிகாரம் நம்மிடம் இல்லை. இப்போது அவர்களின் ஆட்டம் எடுபடாது. இப்போது, இந்த நாடே அம்மா அவர்கள் எப்போது பிரதமராக வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது'' என்று முறுக் கேற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கருப்பசாமிக்குப் பாடம் புகட்டுவார் அம்மா..''

அடுத்துப் பேசிய வீட்டு​வசதித் துறை அமைச்சர்வைத்திலிங்கம், ''அம்மாவின் எண்ணப்படி நடந் தால்​தான் மந்திரி, இல்லையென்றால் எந்திரி. அதுதான் இந்த செயல்வீரர் இயக்கத்தின் ஒரே இலக்கு. நாடாளு​மன்றத் தேர்தலில் அம்மாவைப் பிரத​மராக்கியே தீர வேண்டும். அத்வானியே சொல்லி இருக்கிறார். 'பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் வராது. மூன்றாவது ஒருவர்தான் பிரதமராக வருவார்’ என்று. முலாயம், மாயாவதியை நம்ப மக்கள் தயாராக இல்லை. தெலுங்கு தேசத்தை திரிணாமுல் எதிர்க்கிறது. மம்தா பானர்ஜி எடுத்தேன், கவிழ்த்தேன் பெண்மணி. நிதிஷ்குமாரை மோடி எதிர்க்கிறார். மோடி மதவாதக் கட்சியை சேர்ந்தவர் என்று மற்றவர்கள் எதிர்க்கிறார்கள். ஆகவே, எந்தத் தலைவருக்கும் பிரதமர் ஆகும் தகுதி இல்லை. 40 தொகுதிகளையும் நாம் வென்றுவிட் டால், தங்கத் தட்டில் வைத்து அம்மாவின் கையில் பிரதமர் பதவியைக் கொடுப்பார்கள். பி.ஜே.பி., கம்யூனிஸ்ட் என எல்லாக் கட்சிகளும் அம்மாவை ஆதரிக்கும். முலாயம், மாயாவதி, நவீன் பட்நாயக் போன்றவர்கள்கூட அம்மாவைப் பிரதமராக்கத் துடிப்பார்கள்'' என அதகளப்படுத்தினார்.

உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.பி.முனுசாமி, ''நம்முடைய கடமை 40 தொகுதிகளையும் வென்​றெடுத்து அம்மாவிடம் ஒப்படைப்பது. மீதியை அம்மா பார்த்துக்கொள்வார்கள். அரசியல் சித்தாந்தம் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடநாட்டுத் தலைவர்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார் அம்மா. வரும்

''கருப்பசாமிக்குப் பாடம் புகட்டுவார் அம்மா..''

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தேசியக் கட்சியும் 100 ஸீட்டுக்கு மேல் பெற வாய்ப்பு இல்லை. ஆகவே, மாநிலக் கட்சி​கள் ஒன்றிணைந்து அம்மா அவர் களைப் பிரதம வேட்பாளராக முன்மொழிவார்கள்'' என்றார்.

இறுதியாக மைக் பிடித்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ''எம்.ஜி.ஆர். 11 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். முதல்வர் ஜெயலலிதாவோ 12-வது ஆண்டாக முதல்வராக இருக்கிறார். யாரும் குறை சொல்ல முடியாத நல்லாட்சி நடத்துகிறார். நாடு சுதந்திரம் அடைந்த பின் 23 ஆண்டுகள் ஆட்சி நடத்திய ஒரே இயக்கம் அ.தி.மு.க-தான். யாரும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டை இது. அம்மா அவர்கள் யாருக்கும் உதிக்காத புதுப்புதுத் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் நிறைவேற்றி வருகிறார்கள். இதனால் அம்மாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைந்தும், அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. ஆனால், சில கருப்பசாமிகள்  தாங்கள் கூட்டணியில் இருந்ததால்தான் வெற்றி என்று கூறினர். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அம்மா தனித்துப் போட்டி என்றார். அனைத்து மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சிகளிலும் பெரும் வெற்றி கிடைத்தது. வாய்ச்சவடால் விட்டவர்கள் முன் தனது செல்வாக்கை நிரூபித்தார் அம்மா. அதேபோல இப்போதும் கருப்பசாமிக்குப் பாடம் புகட்டுவார். ஆட்சியில் இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னையைக் கண்டுகொள்ளாத கருணாநிதிக்கு, இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேசுவதற்கு யோக்கியதை கிடையாது. கருணாநிதி மத்தியில் 13 ஆண்டுகள் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால், தமிழர் நலனுக்காக எதையும் செய்யவில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற தமிழக ஜீவாதார உரிமைகளைக் காவு கொடுத்து விட்டார். அம்மா அவர்கள் பிரதமராக வந்தால்தான் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்து வைப்பார் என, டெல்லியில் உள்ள பத்திரிகைகளே சொல்கின்றன. மக்களிடம் குறைகளைக் கேட்டு, தீர்க்க நடவடிக்கை எடுத்தால்,  40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். நாளை நமதே... 40-ம் நமதே'' என்று உற்சாக டானிக் ஊட்டினார்.

அத்தனைக்கும் ஆசைப்படுகிறார்கள். மக்கள் ஆசை என்னவோ?  

- தி.கோபிவிஜய், படம்:வீ.நாகமணி