Published:Updated:

ஜெயிக்கப்போவது யாரு?

பி.ஜே.பி. தலைமைக்கு மும்முனைப் போட்டி

ஜெயிக்கப்போவது யாரு?

பி.ஜே.பி. தலைமைக்கு மும்முனைப் போட்டி

Published:Updated:
##~##

காவிக் கட்சியில் கசமுசா ஆரம்பித்து​விட்டது. தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவராக அடுத்து யார் வரப்போகிறார்கள் என்பதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம்! 

கிளை, ஒன்றியம், நகரம், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிந்து, மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைமைப் பதவி சுஷ்மா ஸ்வராஜுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத் தலைமையிலும் மாற்றம் வருமா என்பதுதான் பலரது கேள்வி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனசங்கம் என்று இருந்ததுதான், 1980-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியாக மாற்றம் அடைந்​தது. கட்சியின் தேசியத் தலைவராக அடல் பிகாரி வாஜ்பாய் பொறுப்பேற்றார். அப்போது கே.நாராயணராவ், தமிழகத் தலைவர் ஆனார். தொடர்ந்து, கே.என்.லட்சுமணன், வி.விஜயராகவலு, டாக்டர் என்.எஸ்.சந்திரபோஸ், கே.என்.லட்சுமணன், டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி, சி.பி.ராதா​கிருஷ்ணன், இல.கணேசன் போன்​றவர்கள் தமிழகத் தலைவர்களாக இருந்தனர். இப்போது, பொன்.ராதா​கிருஷ்ணன், மாநிலத் தலைவராக இருக்கிறார்.

ஜெயிக்கப்போவது யாரு?

இந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியோடு அவருடைய மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிகிறது. எனவே, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான வேலைகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட் டன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்து, 10 ஆயிரம் கிளைகள், 400 ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்கள் முடிந்து விட்டன. 42 மாவட்டத் தலைவர்கள் தேர்தலும் முடிந்து விட் டது. 234 மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வாகிவிட்டனர். இனி, மாநிலத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வேலை மட்டும்தான் பாக்கி. அந்தப் போட்டிதான் இப்போது சுறுசுறுப்பு அடைந்து இருக்கிறது.

தலைவர் ரேஸில் இப்போதைய தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினரும்

ஜெயிக்கப்போவது யாரு?

முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன், மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவரும் கோவை முன்னாள் எம்.பி-யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, திருப்பூர் எம்.பி. தொகுதியைக் குறி வைத்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், 'தலைவராகிவிட்டால் தொகுதி வேலைகளில் கவனம் செலுத்த முடியாது’ என்பதால், இப்போது தலைவர் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இல.கணேசனையும் ஹெச்.ராஜாவையும் சமாதானப்படுத்தி, மீண்டும் போட்டியின்றி பொன்.ராதாகிருஷ்ணனைக் கொண்டுவர பி.ஜே.பி. டெல்லி தலைமை விரும்பு​வதாகக் தகவல் பரபரக்​கிறது.

இது உண்மைதானா என்று தேர்தல் பணியில் இருக்கும் தமிழக பி.ஜே.பி. அமைப்புப் பொதுச் செயலாளர் மோகன்ராஜுலுவிடம் பேசி னோம். ''மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தலைவரைத் தேர்வு செய்வார்கள். போட்டி இருந்தால் ஓட்டெடுப்பு நடக்கும். இல்லையென்றால் ஒருமனதாகத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். புதுச் சேரியிலும் கிளை, தொகுதி மற்றும் ஐந்து மாவட்டத் தலைவர்களுக்கான தேர்தல் முடிந்து விட்டது. டிசம்பர் இறுதிக்குள் புதுவைக்கும் தலைவர் தேர்வு செய்யப்படுவார். மாநிலத் தலைவர்கள் தேர்தல்கள் முடிந்த பிறகு, அகில இந்தியத் தலைவர் தேர்தல் குறித்து டெல்லியில் இருந்து அறிவிப்பு வெளியாகும். டெல்லியில் இருந்து தலைவர் தேர்தல் குறித்து எந்தத் தகவலும் வரவில்லை'' என்றார்.

பி.ஜே.பி. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''இப்போது புதிய தலைவர் தேவை இல்லை என்று நினைக்கிறோம். சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல், ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினார். போலீஸார் முன்கூட்டியே கைது செய்துவிடக்கூடாது என்பதற்காக, முந்தைய நாளே படகு மூலம் கடலுக்குள் சென்றுவிட்டார். போராட்டம் நடக்கும் அன்று, கடலுக்குள் இருந்து நீந்திய​படி வெளியே வந்து கலந்து​கொண் டார்.

கடந்த சட்ட​மன்றத் தேர்தல் அலையில் சொல்லிக்​கொள்ளும்​படி வெற்றி எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், நாகர்கோவில், குளச்சல் போன்ற தொகுதி​களில் கடும் போட்டியை ஏற்படுத்தினோம். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பி.ஜே.பி. பிடித்துள்ளது. நாகர்கோவில், மேட்டுப்பாளையம் நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கிறோம். 29 பேருராட்சிகளையும், 800-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளையும் வென்று இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, கட்சியின் உயிரோட்டத்தையே காட்டுகிறது.

மூன்று ஆண்டுகள் மட்டுமே ஒருவருக்குப் பதவி என்பதை இந்த ஆண்டுதான் தளர்த்தி உள்ளனர். அதனால், பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக் கிறது. விரைவில், நாடாளுமன்றத் தேர்தல் வர இருப் பதால், புதிதாக ஒருவரைத் தலைவராக்க கட்சி மேலிடம் விரும்பாது'' என்றனர்.

ஆனால் இல.கணேசன், ஹெச்.ராஜாவுக்கு டெல்லியில் பெரிய தலைகள் பலர் நெருக்கமாக இருப்பதால், போட்டி நடக்கவும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது!

- எஸ்.முத்துகிருஷ்ணன்