Published:Updated:

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

Published:Updated:
மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

''கலெக்டர்கள் மாநாட்டின் லைவ் ரிலே தாரும்!'' என்று கழுகார் வந்ததுமே கோரிக்கை வைத்தோம்.

 ''அது, நான் கடந்த இதழின்போதே கொடுத்த வாக்குறுதிதானே..?'' என்று ஆரம்பித்தார் கழுகார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 343 அறிவிப்புகளோடு கலெக்டர் - போலீஸ் அதிகாரி​கள் மாநாடு அமர்க்களமாக நடந்து முடிந்தது. வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த மாநாடு, இந்த ஆண்டு ஸ்பெஷலாக மூன்று நாட்கள் நடத்தப்பட்டன. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை எந்தக் கலெக்டரையும் மாற்ற மாட்டார்கள். தங்கள் மாவட்டத்தைப் பற்றி முழுமையான தயாரிப்போடு மாநாட்டுக்கு கலெக்டர்கள் வர வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படும். ஆனால், இந்த

மாநாட்டுக்கு முந்தைய நாள் திருநெல்வேலி கலெக்டர் செல்வராஜ் அதிரடியாக மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு வணிகவரித் துறை இணை கமிஷனராக இருந்த சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்த செல்வராஜுக்கு இது பெரிய அதிர்ச்சி. கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி விபத்தில் காயம் அடைய... அவருக்குப் பதிலாக ராஜேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்தி​கேயனும் மாநாட்டுக்கு முன்பு மாற்றப்பட்டு, விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டார்.''

''இங்கேதான் எதுவுமே நிரந்தரம் இல்லையே!''

''ஆனால் புதிதாக வந்தவர்களுக்குப் பரிசு கிடைத் ததுதான் ஆச்சர்யம். சென்னை மாநகராட்சி மற்றும் நெல்லை மாவட்டத்துக்கான சிறப்புப் பரிசுகளை, பதவியேற்று ஒரு நாள்கூட ஆகாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். இதைக் கிண்டலாக சில அதிகாரிகள் மாநாட்டி​லேயே பேசிக்கொண்டனர்!

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

மாநாட்டைத் தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா, 'தமிழ்நாடு அமைதிப் பூங்கா​வாகத் திகழ்கிறது. சட்டம் - ஒழுங்கு முழு​மையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லிக்​கொண்டிருந்தார். ஆனால், அன்று மட்டுமே சென்னையில் மூன்று கொலைகள் அரங்கேறின. சட்டம் - ஒழுங்கு, நில மோசடி வழக்குகள், கிரானைட் முறைகேடு, அரிசிக் கடத்தல் பற்றி எல்லாம் தன் தொடக்க உரையில் பேசினார் ஜெயலலிதா. சூரிய ஒளி மின்சாரம் பற்றிப் பேசிய முதல்வர் மின்வெட்டு என்ற ஒன்று இருப்பதை மறந்தும் ஞாபகப்படுத்தவில்லை. மாநாடு நடந்து ​கொண்டிருக்கும் நேரம் பார்த்து மின்வெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்துக்குத் தேதி குறித்த தி.மு.க. அதை நடத்தியும் முடித்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி, 'கலெக்டர் மாநாட்டில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல், இதுவரை தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள், கொள் ளைகள், செயின் பறிப்புகள் என்று புள்ளி​விவரம் போட்டுத் தாக்கினார்''

''மாநாட்டில் என்ன மாதிரியான விவாதங்​கள் நடந்ததாம்?''

''அரியலூர் கலெக்டர் செந்தில்குமார் பேசும்போது கொள்ளிடத்தில் கழிவு நீர் கலக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே முதல்வர் மாசுக் சுற்றுச்சூழல் துறை செயலாளரை விளக்கம் கொடுக்கச் சொன்னார். 'தேவர் ஜெயந்தி, இமானுவல் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் சில அமைப்பு​களும் நிதி வசூலிக்கின்றன. இதற்கு எதுவும் அறியாத அப்பாவிப் பள்ளி மாணவர்களையும் பயன்படுத்துகிறார்கள்’ என்று ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் சொன்னபோது, 'மாணவர்களை இப்படிப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இது உடனடியாகத் தடுக்க வேண்டும்’ என்று சொன்ன ஜெயலலிதா, அந்த மாவட்ட எஸ்.பி-யிடம் உடனே நடவடிக்கை எடுக்கவும் சொன்னார்.

திருவண்ணாமலை கலெக்டர் விஜய்மாருதி, 'பௌர்ண​மியின்​​போது அருணாசலேஸ்வரர் கோயி​லுக்குக் கிரிவலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை மாவட்ட நிர்வாகத்தால் சமாளிக்க முடியவில்லை. செலவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கிரிவலம் நடக்கும் சமயத்தில் மட்டும் செலவுகளை அறநிலையத் துறை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டார். உடனே, ஜெயலலிதா செய்தி மற்றும் அறநிலையத் துறை செயலாளர் ராஜாராமைப் பதில் சொல்ல அழைத்தார். 'செலவை ஏற்றுக்கொள்ளத் தயார்’ என்று ராஜாராம் சொல்லி இருக்கிறார். உடனே, 'இனி கிரிவலத்தின்போது ஏற்படும் நிர்வாகச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்’ என்று முதல்வர் அறிவித்தார். அதன்பிறகு பேசிய திருவண்ணாமலை கலெக் டர், 'உடனே செய்துகொடுத்த முதல்வ​ருக்கு நன்றி. சித்ரா பௌர்ணமிக்கும் அரசு செய்து தர வேண்டும்’ என்று கேட்டதும் குறுக்​கிட்ட ஜெயலலிதா, 'பௌர்ணமியும் சித்ரா பௌர்ணமியும் ஒன்றுதான்’ என்றபோது அரங் கமே அதிர்ந்திருக்கிறது. கலெக்டர் சிரித்தபடியே 'ஸாரி’ சொல்லி இருக்கிறார்.''

''ஆன்மிகத்தில் அவரை மிஞ்ச முடியுமா என்ன?''

''போலீஸ் அதிகாரிகள்தான் ரொம்பவும் தயாராக வந்திருந்தனர். மாநாட்டுக்கு முன்பே டி.ஜி.பி. தலைமையில் தனியாக ஒரு கூட்டம் நடந்ததாம். அதன்பிறகு, மாநாட்டின் இடையே கிடைத்த ஒரு நாள் இடைவெளியில் இன்னொரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் காக்கிச் சட்டைகள். டி.ஜி.பி. ஆபீஸில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் ராஜகோபாலும் கலந்துகொண்டார். மாநாட்டில் என்னென்ன பேச வேண்டும் என்பதுபற்றி அந்த கூட்டத்தில் விவாதம் நடந்திருக்கிறது. 'யார் யார் என்ன பேச விரும்புகிறீர்கள்?’ என்று முதலில் கேட்டார் டி.ஜி.பி. ராமானுஜம். ஒரே விஷயம் ரிப்பீட் ஆகிவிடக் கூடாது என்று கட்டளை இட்டாராம். 'முதல்வர் குறிப்பாகக் கேட்டால் மட் டுமே மற்ற விஷயங்களைச் சொல்ல வேண்டும்’ என்றும் பேசப்பட்டதாம். இங்கே பேசப்பட்ட விஷயத்தைத் தவிர வேறு எதையும் மாநாட்டில் எந்த அதிகாரியும் பேசிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம் ராமானுஜம். மாநாட்டில் பங்கேற்பதற்காக டிராமா ரிகர்சல் நடத்தியதுபோல நடந்திருக்கிறது அந்தக் கூட்டம். ஹோம் ஒர்க் செய்த படியே மாநாட்டில் பேசினார்களாம்.''

''ம்!''

''சுற்றுச்சூழல் பராமரிப்பில் சிறப்பாகப் பணியாற்றியதற்கு, அதாவது 2.1 லட்சம் மரக்கன்றுகளை கிராமங்களிலும் அரசு அலுவலகங்களிலும் நட்டு இருக்கிறார் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன். அதற்காக தனியாக ஒரு பரிசும் கிடைத்தது. கடந்த ஆண்டு நடந்த கலெக்டர் மாநாட்டிலும் இவர் விருதுகளை வாங்கிக்கொண்டு போனார். அந்த அளவுக்கு முதல்வரின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறாராம். ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வரும்போதெல்லாம் ஜெயஸ்ரீயிடம் விரிவாகப் பேசுவாராம். 'அம்மாவின் ஆசிபெற்ற கலெக்டர்’ என்று இவரைக் காட்டுகிறார்கள்!'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினார்...

''சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் மீது சக்சேனா, ஐயப்பன் ஆகியோர் புகார் மனுக்களைக் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். 'காவலன்’, 'எந்திரன்’ போன்ற படங்கள் தொடர்பாக நடந்த பிரச்னைகளை நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். 'சன் பிக்சர்ஸ் தயாரித்த படங்களின் விநியோக உரிமையை நான்தான் விற்றுக் கொடுத் தேன். இதன்மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் சம்பாதித்தது. ஆனால், அதில் எனக்குத் தரவேண்டிய இரண்டு சதவிகிதம் கமிஷன் தொகை, 28 கோடி ரூபாயை இதுவரை தரவில்லை. அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரித்த சில படங்கள் எதிர்பார்த்த லாபம் சம்பாதிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் தொந்தரவு செய்கிறார்கள். இந்தத் தொகைகளை நான்  கேட்டதற்கு என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் மிரட்டுகின்றனர்’ என்று  ஐயப்பன் புகாரில் கூறியுள்ளாராம்.''

''போலீஸ்?''

''ஐயப்பன், சக்சேனா கொடுத்த புகார்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யும் வேலையில், இப்போது போலீஸ்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்காக கடந்த புதன்கிழமை ஐயப்பன், சக்சேனா இருவரையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கே வரவழைத்து விசாரித்து உள் ளனர். அவர்கள் சொன்ன விவரங்களை வைத்து பலரிடமும் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால், முறையான ஆதாரங்கள் கிடைப்பதுதான் சிக்கலாக இருக்கிறதாம்.''

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

''தி.மு.க. வட்டாரத்துத் தகவல்கள் உண்டா?''

''இல்லாமலா? பேராசிரியர் அன்பழகனின் 91-வது பிறந்த நாள் விழாவை ஒட்டிய சில தகவல்களைத் தருகிறேன். அவரது அண்ணா நகர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துவதை பல ஆண்டுகளாகவே வழக்கமாக வைத்துள்ளார் கருணாநிதி. இந்த முறை கிளம்பும்போது ஸ்டாலினை தன்னோடு வரச்சொன்னாராம். கோபாலபுரம் வந்து கருணாநிதியை அழைத்துக்கொண்டு ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் வந்ததைப் பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கங்களைப் போட்டுள்ளனர். 'தலைவர் கலைஞர் வாழ்க’ என்று சொன்னவர்கள், 'வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க’ என்றும் கோஷம் போட்டார்களாம். வழக்கமாக அன்பழகனுக்குக் கருணாநிதி மாலை அணிவிப்பார். பதிலுக்கு அன்பழகன், கருணாநிதிக்கு மாலை அணிவிப்பார். இந்தத் தடவை இரண்டு மாலைகள் வாங்கி வைத்திருந்த அன்பழகன், ஒன்றை கருணாநிதிக்குப் போட்டு இன்னொன்றை ஸ்டாலினுக்குப் போட்டுள்ளார். இதை எதிர்பாராத ஸ்டாலின், அதே மாலையை பிடிவாதமாகத் திருப்பி அன்பழகனுக்குப் போட்டுள்ளார்.''

''அப்படியா?''

''மாலையில் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் அன்பழகன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதற்காகத் தவங்கித் தவங்கி வந்தார் ஆற்காடு வீராசாமி. ஆனால், அவரை மேடையில் உட்கார அனுமதிக்கவில்லையாம். 'இனிமே எனக்கு மரியாதை கிடையாதா? என்னை வரக் கூடாதுன்னு சொல்றாங்களா?’ என்றபடி கீழே உட்கார்ந்தாராம் ஆற்​காட்டார்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன்,

சொ.பாலசுப்பிரமணியன்

 குஜராத் செல்லும் ஜெயலலிதா!

கடந்த இரண்டு முறையும் மோடி முதல்வர் பதவி ஏற்றபோது, அந்த விழாவில் கலந்து கொண்டார் ஜெயலலிதா. மோடி மீது ஜெயலலிதாவுக்கு உள்ள அரசியல் பாசம்தான் அதற்குக் காரணம். கடந்த ஆண்டு ஜெயலலிதா பதவி ஏற்ற விழாவில் மோடியும் கலந்து கொண்டார். இப்போது, மோடியின் பதவிஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக குஜராத் செல்லப் போகிறாராம் ஜெய லலிதா. முன்னேற்பாடுகள் செய்வதற்காக பாதுகாப்பு அதி காரிகள் குஜராத் சென்று இருக்கின்றனர். 

கப்பலில் நித்தி!

அக்கா வைஷ்ணவிக்கு நிச்சயதார்த்தப் பேச்சு, தங்கை கஸ்தூரி வருகை, தம்பிரானுக்குப் பட்டம் சூட்டு விழா என மதுரை ஆதீன மடத்தில் மளமளவென மங்களகரமான காரியங்கள் நடக்கின்றன. 'நடப்பதெல்லாம் நடக்கட்டும். எனது வேலையைக் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டுவேன்’ என்று சொல்லிவிட்டு சிங்கப்பூருக்குப் பயணமாகி விட்ட நித்தி, அங்கே வெளிநாட்டுப் பக்தர்களுக்குக் கப்பலில் வைத்து யோகப் பயிற்சிகள் அளித்துக்கொண்டு இருக்கிறாராம்!

 வால்மார்ட்டுக்கு செக்!

சென்னை அருகே திருவேற்காடு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்குப்பம் பகுதியில் ஏழு ஏக்கரில் சரக்கு குடோன் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருவதாகவும் அதில், மூன்றரை ஏக்கரில் வால்மார்ட் குடோன் தயாராகி வருவது பற்றியும் சொல்லி இருந்தோம். 'இந்தக் குடோன் கட்டுமானப் பணிக்கான அனுமதியை சி.எம்.டி.ஏ-வும் திருவேற்காடு நகராட்சியும் வழங்கவில்லை. அவர்களின் எச்சரிக்கை நோட்டீஸை மதிக்காமலேயே கடந்த நான்கு மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடக்கிறது’ என்று சுட்டிக்காட்டி இருந்தோம். இதைஅடுத்து, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று கட்டுமான வேலையை தடுத்து நிறுத்தி விட்டனர்.

 'இனிமேல் பாட வேண்டாம்!’

'கண்ணோடு காண்பதெல்லாம்...’ என்ற பாடல் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர், கர்நாடக இசைப் பாடகியான நித்யஸ்ரீ. அவருடைய கணவர் மகா​தேவனின் தற்கொலை, இசை உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோட்டூர்புரம் பாலம் அருகே காரை நிறுத்திய மகாதேவன், யாருடனோ போனில் பேசியபடியே ஆற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.

மிஸ்டர் கழுகு: அன்பழகன் வீட்டு வாசலில்...

'டிசம்பர் சீஸன் துவங்குவதற்கு முன்பே, 'இனிமேல் பாட வேண்டாம்’ என்று மகாதேவன் நித்யஸ்ரீயை தடுத்து வந்தார். அதுதான் இருவருக்கும் மன வருத்​தத்தை ஏற்படுத்தியது’ என்றும் 'மகாதேவனின் அம்மா சமீபத்தில் இறந்து விட்டார். அதில் இருந்தே இவர் மன வருத்தத்தோடு இருந்தார். அவரது தற்கொலைக்கு இந்தத் துக்கமும் ஒரு காரணம்’ என்றும் சிலர் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை பிரிந்து இருந்தவர்கள் சமீபத்தில்தான் ஒன்று ​சேர்ந்தார்களாம்.

 சென்னையில் ஏற்கெனவே அதிகம்!

தகுதித் தேர்வு மூலம் பாஸான பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என்று மொத்தம் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 13-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். அதில், சென்னையில் ஓர் ஆசிரியருக்குக்கூட வேலை கொடுக்கவில்லை என்று கழுகார் சொல்லி இருந்தார். சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகள்தான் 90 சதவிகிதம் உள்ளனவாம். இதற்குத் தனியாக ஆள் எடுப்பு நடக்க இருக்கிறதாம். மேலும், மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனராம். எனவே, ஆசிரியர்கள் பணியிடம் காலி இல்லையாம். மேலும், தேவையின் அடிப்படையில் பிற மாவட்டங்களில் எங்கெல்லாம் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவை இருந்ததோ... அந்தப் பள்ளிகளுக்கே முன்னுரிமை கொடுத்ததாக அதிகாரிகள் விளக்கம் சொல் கிறார்கள்!