Published:Updated:

திமுக தோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!

Vikatan Correspondent
திமுக தோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!
திமுக தோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!
திமுக தோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியடைந்துள்ள நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திமுகவில் கட்சித் தலைமையை கைப்பற்றுவது யார் என்பதில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி மகன்களான மு.க. அழகிரிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஸ்டாலினின் கையே ஓங்கியது.

இந்நிலையில் மதுரை திமுகவிலிருந்து தமது ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டது குறித்து கட்சித்தலைவர் கருணாநிதியை வீட்டில் சென்று சந்தித்து  கோபம் காட்டிய மு.க.  அழகிரியும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் திமுக 3 வது இடத்திற்கு தள்ளப்படும் என்று கூறிய அழகிரி, தேர்தலில் திமுக வேட்பாளர்களை தோற்கடிக்க மாற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய தமது ஆதரவாளர்களை பணித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தோல்வி குறித்த செய்திகள் வெளியானதும், மதுரையில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டாரம் குஷியடைந்தது.

இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. அழகிரி, " திமுக 5 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறினேன். அதற்காக நான் உங்களிடம் ( பத்திரிகையாளர்களிடம்) மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தற்போது 3 சுற்றுகள்தான் எண்ணப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்ட பின்னர் நான் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்" என்று சிரிப்பும், உற்சாகமுமாக கூறினார்.

 அழகிரியின் மகன் துரைதயாநிதியோ  தனது டுவிட்டர் தளத்தில் " தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் அள்ளுகிறது அதிமுக; இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்

அழகிரியை கட்சியிலிருந்து வெளியேற்றியபோது கருணாநிதியை கிண்டலடித்து துரைதயாநிதி டுவிட்டிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.