Published:Updated:

ஸ்டாலின் கையில் சேலம்

மாம்பழ நகரமும் கனிந்தது...

ஸ்டாலின் கையில் சேலம்

மாம்பழ நகரமும் கனிந்தது...

Published:Updated:
##~##

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்று சேலம் தி.மு.க-வின் செயல்பாடுகளை இரண்டாகப் பிரித்து ​விடலாம். வீரபாண்டியார் மாவட்டம் என்று சொல்லப்பட்ட சேலத்தில், இப்போது ஸ்டாலின் கை ஓங்கி விட்டதை, அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதிப்​படுத்தி இருக்கின்றன. 

வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திறப்பு விழாவுக்கு அழகிரிதான் வருவார் என்பது அரசல்​புரசல் பேச் சாக இருந்தது. காரணம், ஆறுமுகம் அழகிரியின் விசுவாசி. ஆறுமுகத்தின் குடும்பத்தில் ஒருவருக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, அவரது மகள் மகேஸ்வரி, கருணா​நிதி வீடுவரை சென்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்பிறகு, படத் திறப்பு விழா சம்பந்தமாகப் பேசுவதற்கு கருணாநிதியைச் சந்திக்க சென்றிருக்​கிறார், ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா. அப்போது, 'என்னோட அக்கா நாங்க சொன்​னதைக் கேட்காம உங்களைப் பார்த்து பதவி கேட்க வந்துட்டாங்க. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்​கிறேன் தலைவரே. எனக்குக் கட்சிதான் முக்கியம். நீங்க யாருக்குப் பொறுப்பு கொடுத்தாலும் நான் செயல்படத் தயாரா இருக்கேன்’ என்று சொன்​னாராம். அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்ட கருணாநிதி, 'தளபதியைப் பார்த்து படத்திறப்பு விழாவுக்குக் கூப்பிடு’ என்று சொல்லி இருக்கிறார். அதன்பிறகு​தான் அழகிரியைச் சந்திக்கும் முயற்சியைக் கைவிட்டு, ஸ்டாலினைச் சந்தித்து அழைப்பு விடுத்து இருக்கிறார் ராஜா.

ஸ்டாலின் கையில் சேலம்

விழாவுக்கு, ஸ்டாலின் வருகிறார் என்று தெரிந்ததும், வீரபாண்டி ஆறுமுகத்​தின் குடும்பத்தில் மீண்டும் சூறாவளி. 'நம் குடும்​பத்தில் ஒருத்தருக்குப் பதவி கொடுக்காமல், அவர் எப்படி விழாவுக்கு வரலாம்? அவர் வரும்போது நாங்கள் நிச்சயம் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்’ என்று பொங்கி இருக்கிறார் மகேஸ்வரி. அதுவரை பொறுமையாக இருந்த ராஜா, 'உனக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்பா இருந்தவரை எதுவும் பேசக் கூடா துனு நான் அமைதியா இருந்தேன். எனக்குப் பதவி வேணும்னா, நான் கேட்டுக்கிறேன். நீ வாயை மூடிட்டு அமைதியா இருந்தாப் போதும்’ என்று பொங்கி விட்டாராம். அதன்பிறகே, மகேஸ்வரி அமைதியானதாகச் சொல்​கிறார்கள் வீரபாண்டி குடும் பத்துடன் தொடர்பில் இருப்பவர்கள்.

ஸ்டாலின் கையில் சேலம்

விழாவுக்கு வந்த ஸ்டாலினை வரவேற்று ஊரெங்கும் ராஜாவும், அவரது ஆதரவாளர்கள் மட்டுமே ஃப்ளெக்ஸ் வைத்திருந்தனர். எதிர்க் கோஷ்டிகள் யாரும் பேருக்​​காகக்கூட ஃப்ளெக்ஸ் வைக்க​வில்லை.

கடும் பர பரப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி இரவு, சேலம் ஜவஹர் மில் திடலில் வீரபாண்டி ஆறுமுகத்தின் படத் திறப்பு விழா நடந்தது.

''என்னுடைய அப்பா மீது பாசம் வைத்திருக்கும் தொண்டர்கள் உங்கள் அத்தனை பேரின் பாதங்​களையும் தொட்டு வணங்குகிறேன்'' என்று பேச  ஆரம்பித்த ராஜாவுக்கு அழுகை பொங்கியது. அடக்க முடியாமல் தடுமாறினார். நீண்ட நேர அழுகைக்குப் பின் தட்டுத்தடுமாறிப் பேசி முடித்தார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்தைத் திறந்து​வைத்து ஸ்டாலின் பேசும்போது, ''அண்ணனைப் பற்றிப் பேசுவது என்றால் எதைப் பேசுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. கட்சிக்கு நிதி திரட்டுவதில் மாவட்டச் செயலாளர்களுக்கு இடை யில் போட்டி ஏற்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் வீரபாண்டியார்தான் முதலாவதாக வரு வார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என எந்தக் கூட்டம் நடந்தாலும் வீரபாண்டியார்தான் கூட் டத்தைத் தொடங்கி வைப்பார்.

இந்த மாதம் செயற்குழு கூட்டம் நடந்தது. இரங்கல் தீர்மானங்களை எப்போதும் தலைவர் கலைஞர்தான் வாசிப்பார். ஆனால் இந்த முறை, அவர் வாசிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. காரில் போகும்போது, 'ஏன் நீங்கள் தீர்மானம் வாசிக்கவில்லை?’ என்று கேட்டேன். 'வீர​பாண்டிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்க எனக்குத் தைரியம் இல்லை. அவர் இல்லாமல் நான் என்ன பேசுவது?’ என்று கண் கலங்கி விட்டார்.

வீரபாண்டியார் அமைச்சராக இருந்தபோது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். நான் அறையில் இருக்கிறேனா என்பதை அவரது உதவியாளரை அனுப்பிப் பார்த்துவிட்டு வரச் சொல்வார். உதவியாளர் வந்து பார்த்துவிட்டுப் போனதும் வீரபாண்டியார் என் அறைக்கு வருவார். சில திட்டங்களை நிறைவேற்றச் சொல்லிக் கேட்பார். நான் முடியாது என்று சொன்னால், 'ஏன் முடியாது? முடியாதுன்னு சொல்றதுக்கு எதுக்கு அதிகாரிகள்?’ என்று கடிந்து கொள்வார். இதனால் பல சமயங்களில், அவர் என் அறைக்கு வருவதற்கு முன்பே, நான் அவரது அறைக்குச் சென்று விடுவேன்.

அவர் பார்த்து வளர்ந்த பிள்ளை நான். நானும் அவரும் நிறைய விவாதிப்போம். நிறைய கோபித்துக்​கொள்வோம். தலைவர்தான் எங்கள் இருவரையும் அழைத்துச் சமாதானம் செய்வார்'' என்று நெகிழ்ச் சியுடன் பழைய சம்பவங்களை ஸ்டாலின் விவரித் தது பலரையும் கண்கலங்க வைத்தது. இருந்தாலும் விழா மேடையில் ஆறுமுகம் குடும்பத்துக்குப் பதவிகள் தருவது பற்றி ஸ்டாலின் எந்த  உறுதியும் அளிக்கவில்லை!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன், எம். விஜயகுமார்