Published:Updated:

நாற்பது தனியே!

அவசரப்பட்ட ஜெ... குஷியில் கருணாநிதி

நாற்பது தனியே!

அவசரப்பட்ட ஜெ... குஷியில் கருணாநிதி

Published:Updated:
நாற்பது தனியே!
##~##

வானகரத்தில் இருந்து கழுகார் வந்து சேரும்போது, சூரியன் உச்சியில் இருந்தது. 'தனித்துப் போட்டி’ என்று ஜெயலலிதா கொடுத்திருக்கும் திடீர் ஷாக் குறித்து கழுகார் விசாரித்து வந்திருப்பார் போலும். வந்ததும் கொட்ட ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆண்டுதோறும் நடந்தாக வேண்டிய வழக்கமான சடங்குதான் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவை அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதை, இந்தியாவே கவனத்தில் கொள்ளவேண்டிய விஷய மாக மாற்றிவிட்டார் ஜெயலலிதா. 'நாடாளு​மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி’ என்று அவர் கிளப்பிய அதிர்வலை, எதிர்வரும் வாரங்களில் நிச்சயம் சூட்டைக் கிளப்பும். வழக்கமாக நடக்கும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்தான் இந்த முறையும் பொதுக்குழு கூடியது. நுழைவு வாயில் முகப்பு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. செங்கோட்டையிலும் அ.தி.மு.க. கொடி பறக்கும் என்பதை பறைசாற்றும் விதமாக நாடா ளுமன்ற முகப்பின் மாதிரியாக நுழைவு வாயிலை அமைத்து இருந்தனர்.''

''ஜோராகத்தான் ஆரம்​பித்தனர் என்று சொல்லும்!''

''அனுமதிக் கடிதம் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே விடப்பட்டனர். அதைமீறி உள்ளே நுழையக் கூட்டம் முண்டியடித்தது. காம்பவுண்ட் சுவரில் எகிறிக் குதித்து உள்ளே நுழைந்தனர் சிலர். ஜெயலலிதாவின் கார் நுழைந்த கேட்டில் பெரும் கூட்டம் நின்றுகொண்டு இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்தக் கூட்டம் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே திமிற, அவர்களை காக்கிச் சட்டைகள் தடுக்க, பலரும் கீழே சரிந்து விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் கிடக்க... 'காப்பாத்துங்க’ என்று பலரும் கதற ஆரம்பித்தனர். ஒரு வழியாக, ஒவ்வொருவரையும் வெளியே இழுத்துப் போட்டது போலீஸ். ஆங்காங்கே செருப்புகள் கிடக்க போர்க்களம் போலக் காட்சி அளித்தது ஏரியா. கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் பத்துப் பதினைந்து பேர் நிலைமை சிக்கலாகி இருக்கும்!''

''ம்!''

நாற்பது தனியே!

''கடந்த ஆண்டு பொதுக்குழு நடந்த நேரத்தில்​தான் சசிகலா அண்ட் கோ-வை கட்சியில் இருந்து கட்டம் கட்டியிருந்தார் ஜெயலலிதா. அதனால் அப்போது சசிகலா பொதுக் குழுவுக்கு வர முடியாமல் போனது. இந்தமுறை அவர் வருவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போதும் அவர் ஆப்சென்ட். முதலில் செயற்குழு தொடங்கியது. மூன்றாவது நிமிடத்தில் (!) செயற்குழு முடிந்து, பொதுக்குழு கூடியது. முதலில் தீர்மானம் வாசிக்கும் படலம். மொத்தம் 25 தீர்மானங்களில் 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் 'அம்மா’ பாராட்டுகள்தான். அடுத்து இரங்கல் தீர்மானம். இந்தியாவே கண்ணீர்விடும் டெல்லி மாணவிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற யாருக்குமே ஞாபகம் இல்லை. அந்த மாணவிக்குத் தீர்மானம் நிறைவேற்றினால் தமிழகத்தில் முட்லூர் சந்தியா, விழுப்புரம் ப்ரியா, தூத்துக்குடி புனிதா ஆகியோருக்கும் நிறைவேற்ற வேண்டி வரலாம் என்பதால், தவிர்த்திருக்கலாம். தீர்மானங்களைப் படித்து முடித்ததும், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் வரவு செலவுக் கணக்கைப் படித்து விட்டுப் பேச ஆரம்பித்தார்...''

''என்ன பேசினாராம்?''

''உள்ளே இருந்தவர்கள் சொன்னதில் முக்கிய மானதை மட்டும் சொல்கிறேன். 'நாணயத்​துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அரசியலில் சிலர் நாணயம் இல்லாமல் இருக்கிறார்கள். செல்லு படியான நாணயம்தான் அம்மா. செல்லாத நாணயம் கருணாநிதி. சென்னையில் ஜெமினி சர்க்கஸ் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் வரும் கோமாளியை விட கருணாநிதி பெரிய கோமாளியாக இருக்கிறார். செல்லாத நாணயத்தோடு கறுப்பான நாணயம் கூட்டுசேரப் போகிறதாம். தேர்தலில் அந்தக் கூட்டணி சந்தி சிரிக்கப்போகிறது. தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் அம்மா பேசியபோது மணி அடித்து அவமானப்படுத்தி விட்டனர். அடுத்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தை அம்மா தலைமை ஏற்று நடத்துவார். அதற்கான காலம் வருகிறது. மக்கள் அவர்களுக்கு மணி அடிப்பார்கள். இந்தியாவின் தலைமையை யார் ஆளப்போகிறார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். இந்தியாவைத் தாய்நாடு என்று சொல்வார்கள். அம்மா தலைமையேற்ற பிறகுதான் உண்மையிலேயே இந்தியா நம் தாய்நாடாகும்’ என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுத்தார் ஓ.பி.

இந்தக் கூட்டத்தின் ஹைலைட் புதிய வரவான நாஞ்சில் சம்பத். 'எத்தனை முறை சுட்டாலும் தகதகவென மின்னும் தங்கத்தைப்போல் தகத் தகாயத் தலைவியாக அரசியலில் அம்மா வீற்றிருக்​கிறார். தலை கவிழாத தஞ்சை கோபுரம் அம்மா. டெல்லியிலும் அம்மாவின் ஆதிக்கத்தைச் செலுத்துவோம். அதற்காக வில்லை எடுப்போம். கணையைத் தொடுப்போம். வெற்றியைப் பறிப்போம். வரலாற்று அதிசயத்தை நிகழ்த்த ஆயத்தமாவோம்’ என முழங்கியதை ஜெயலலிதா ரொம்பவே ரசித்தார். வழக்கம்போல் பொதுக்குழுவில் பேசும் நிலைய வித்வான்களான வளர்மதி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் இப்போதும் முழங்கினர். அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்​போது கூட்டணி அரசியல் பற்றி ஒரு விஷயத்தை புட்டு வைத்தார்...''

''அது என்ன?''

''வைத்திலிங்கம் சொல்லும் கணக்கு இதுதான். 'ஆறு மாநிலங்கள்தான் இந்தியாவின் பிரதமரைத் தீர்​மானிக்கின்றன. உத்தரப் பிரதேசம் 80, மகாராஷ்டிரா 48, ஆந்திரா 42, மேற்கு வங்காளம் 42, தமிழ்நாடு, புதுச்சேரி இணைந்து 40, பீகார் 40 - இந்த மாநிலங்களில் மட்டும் 292 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றினாலே, அடுத்த ஆட்சியை அமைத்துவிட முடியும். மம்தாவை இடதுசாரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இடதுசாரிகளை மம்தா ஏற்றுக்கொள்ள மாட்டார். மோடியை நிதிஷ§க்குப் பிடிக்காது. மோடிக்கு நிதிஷைப் பிடிக்காது. மாயவதியை முலாயம் ஏற்றுக்கொள்ள மாட்டார். மாயாவதியும் முலா யமை ஏற்க மாட்டார். ஆனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவர் அம்மாதான். பி.ஜே.பி. நிதிஷ், இடதுசாரிகள், ஜெகன்மோகன் போன்ற கூட்டணிக்கு அம்மா தலைமை ஏற்பார்’ என்று புதுக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். மோடி மீது ஜெயலலிதாவுக்குத் தனிப்பாசம் உண்டு. ஆனால், மோடிக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே நடக்கும் அரசியல் மோதலை வைத்திலிங்கம் பொதுக்குழுவில் தைரியமாகப் போட்டு உடைத்தது பலருக்கும் ஆச்சர்யம்.''

நாற்பது தனியே!

''ஜெயலலிதா ரியாக்ஷன் என்ன?''

''ஏதோ யோசித்தவராகவே அவர் அமர்ந்திருந்தார். மைக் பிடித்ததும் அவரது பேச்சு வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது. தடாலடியாகப் போட்டு உடைக்கும் ஜெயலலிதா, யோசித்து யோசித்துப் பேசினார். 'அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இதில் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக 25 ஆண்டுகள். இது எனக்கே வியப்பாக இருக்கிறது. நான் கட்சிக்கு வந்தபோது கட்சியின் வைப்பு நிதி ஒரு லட்சம்கூட இல்லை. இப்போது 118 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அப்போது, 17 லட்சம் உறுப் பினர்கள். இப்போது ஒன்றரைக் கோடிக்கும் மேல். இது வளர்ச்சி இல்லையா? மின்வெட்டுப் பிரச்னைக்கு காரணம் கருணாநிதிதான் என்பதையும், அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதை வாக்குகளாக மாற்றுங்கள்’ என்று பீடிகை போட்டுவிட்டு, 'அளப்பரிய சாத னைகள் எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். உலக வரலாற்றைப் படைக்கும் வாய்ப்பு ஒரு முறைதான் நிகழும். அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த வாய்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் மூலம் வருகிறது. இதை விட்டுவிட்டால், மீண்டும் அந்த வாய்ப்பு நமக்கு வாய்க்காமல் போகலாம். நமது பாதையை வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் யாரையும் சார்ந்து இருக்க முடியாது. அதற்கான நிலைமை இப் போது உருவாக்கப்பட்டு விட்டது. மற்ற கட்சிகள் யாரையாவது சார்ந்து இருக்கலாம். நம்மைப் பொறுத்தவரை யாரையும் சார்ந்து இருக்க முடியாது. நான் யாரையும் சார்ந்து இருந்தது இல்லை. யாருடைய துணையும் இல்லாமல்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். யாரையும் சார்ந்து இருக்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை. நானே தனித்துப் போராடித்தான் முன்னுக்கு வந்தேன். அதை என் திறமை என்று சொல்ல மாட்டேன். விதி. என் தலையெழுத்து எப்படியோ, அப்படி நடந்திருக்கிறது’ என்று சொந்த வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் இணைத்துப் பேசினார். உண்மையில், உறுப்பினர்கள் அனைவருக்குமே இவரது பேச்சு குழப்பமாகவே தெரிந்தது.''

''சரிதான்...''

''கடைசியில் அனைவருக்கும் அதிர்ச்சியான ஸ்டேட்மென்ட்டை விடுத்தார். 'அகில இந்திய அளவில் காங்கிரஸ், பி.ஜே.பி. என இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. இரண்டும் தனித்தனியாகக் கூட்டணியை நடத்தி வருகின்றன. இதனால் நமது இயக்கம் தனித்து நின்றாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இந்த இரண்டு கட்சிகளும் காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன. இதனால், நாம் பி.ஜே.பி. அல்லது காங்கிரஸைச் சார்ந்து இருக்க முடியாது. தமிழகத்தின் உரிமையைக் காக்க தனியாகப் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மத்தியில் நமது அதிகாரத்தைச் செலுத்த முடியும். அதற்காக நீங்கள் அயராது பாடுபடுங்கள்’ என்று அவர் சொன்னபோது கைதட்டல் அதிர்ந்தது. ஆனால், பலரும் அதன் பிறகுதான் உஷாராகி யோசித்திருப்பார்கள்.

கட்சியின் இயலாமையை இப்படி ஜெயலலிதா வெளிப்படையாக உடைப்பார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. சட்டசபைத் தேர்தல் நெருக்கத்தில் நடந்த பொதுக்குழுவில்கூட, 'சில கட்சிகள் நம்மிடம் பேசி வருகின்றன. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்’ என்று சிக்னல் காட்டிப் பேசினார் ஜெயலலிதா. கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவிலும், 'அனைந்திந்திய என்ற கட்சியின் பெயருக்கு வலுசேர்க்கும் வகையில் செங் கோட்டையிலும் நாம் கோலோச்சுவோம்’ என்றார். ஆனால், இந்த முறை அவசரப்பட்டிருக்கிறார். இப்படி அவசரப்பட்டதற்கு என்ன காரணம் என பட்டிமன்றமே நடக்கிறது.''

''கருணாநிதி ரியாக்ஷன்?''

''ஜெயலலிதா இப்படி அறிவித்த தகவல் கிடைத்தபோது கருணாநிதி, அறிவாலயத்தில் இருந்தார். ஜெயலலிதாவின் பேச்சு சொல்லப்பட்டதும், 'கன்ஃபார்ம் நியூஸ் வரட்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் டி.வி-களில் ஃப்ளாஷ் செய்தி ஓட ஆரம்பித்ததும் சிரித்துள்ளார். 'லாஜிக் இல்லாத ஸ்டேட்மென்ட்’ என்பது அவரது கணிப்பாம். 'அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு தி.மு.க. ஒரு வலுவான கூட்டணியை அமைத்தால், லக்கி பிரைஸ் அடித்தது மாதிரி இருக்கும்’ என்பதுதான் அவரது நினைப்பாம். இதைச்சுற்றி உள்ளவர்களிடம் பலமாகச் சொல்லி விட்டுத்தான் கிளம்பினாராம். கொஞ்சம் முரண்டு பிடிக்கும் தே.மு.தி.க-வும் ஜெயலிதாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு தங்களை நோக்கி நெருங்கும் என்றும் தி.மு.க. தலைமை நினைக்கிறதாம். 'வலுவான கூட்டணியை அமைத்தால், 2004 நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்டை அடையலாம்’ என்று தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் சொல்ல ஆரம்பித்தாராம். தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது!'' என்று சிரித்தார் கழுகார்.

நாற்பது தனியே!

''தலைமைச் செயலாளர் பதவியை ஷீலா பாலகிருஷ்ணன் கைப்பற்றி விட்டாரே?''

''எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்த நியமனம். சில வாரங்களுக்கு முன், இதுபற்றி நான் உமக்குச் சொன்னபோது, 'ஷீலாவின் பெயர் அவ்வளவு முக்கியமாகப் பரிசீலிக்கப்படவில்லை’ என்றுதான் சொல்லி இருந்தேன். ஆனால் அவர்தான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். திருவனந்தபுரத்துக்காரரான இவர் நெல்லையைச் சேர்ந்த பாலகிருஷ்ணனைத் திருமணம் செய்தவர். அவரும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் சென்னையில் உள்ள தொழில் முனைவோர் வளர்ச்சி மையத்தின் இயக்குனராக உள்ளார். பாலகிருஷ்ணன்தான் தமிழகத்தில் உள்ள 282 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் மூத்தவர்; முதல் இடத்தில் இருக்கிறார். 2-வது இடத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் பெயர் உள்ளது. இருவருமே 1976-ம் ஆண்டு கேடர் அதிகாரிகள். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் 12 பேர் உள்ளனர். இவர்களில் ராகேஸ் ககர், மிருதயுஞ் சாரங்கி, எம்.எஃப்.ஃபரூக்கி ஆகியோர் மத்திய அரசுப் பணியில் உள்ளனர். எம்.ஷீலாப் பிரியா, முதல்வரின் முதன்மைச் செயலாளராக உள்ளார். முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றபோதே, தலைமைச் செயலாளராக அல்லது முதல்வரின் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தி.மு.க-வுக்கு நெருக்கமானவர் என்று சிலர் திரியைக் கொளுத்திப் போட்டதால், அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஒரு வருடம் ஜூனியரான தேபேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலாளர் ஆனார்.''

''நீட்டிப்பு கிடைக்கும் என்று நினைத்தாரே சாரங்கி?''

''அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கச்சேரி கடந்த மூன்று மாதங்களாகவே கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக இருந்தது.  டி.எஸ்.ஸ்ரீதர்தான் அடுத்த தலைமைச் செயலாளர் என்று சொல்லப்பட்டது. அவரை உயர் கல்வித் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி வருவாய் நிர்வாகத் துறை கமிஷனராக மாற்றியபோதே, அவருக்கு தலைமைச் செயலாளராகும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது. முதல்வரின் முதல் செயலாளராக உள்ள ஷீலா பிரியாவுக்கும் தலைமைச் செயலாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் ஷீலா பாலகிருஷ்ணனைக் கொண்டுவருவதற்கு பலமான லாபி வேலை செய்துள்ளது.''

''சொல்லும்.''

''தலைமைச் செயலாளராக வருபவர் தங்களது கைக்கு அடக்கமாக இருந்தால் நல்லது என்று முதல்வரைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள் சிலர் நினைத்​தார்களாம். அவர்கள்தான் இவர் பெயரை முன்மொழிந்தார்களாம். 'பரபரப்பு எதிலும் சிக்கிக் கொள்ளாதவர் ஷீலா. அதனால்தான் அவரை அந்த அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்’ என்கிறது கோட்டை வட்டாரம். ஷீலா பால​கிருஷ்ணன் இதுவரை முக்கியமான சென்சிட்டிவ் துறைகளின் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாதவர் என்றும் கோட்டை வட்டார அதிகாரிகள் கூறு கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரின் பணிச்செயல்பாடு திருப்தி இல்லை என்று அன்றைய அமைச்சர் புகார் சொல்ல... உடனே, அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார். 2002 முதல் 2006 வரை தனது செயலாளராக இருந்தவர் என்ற அறிமுகத்தின் அடிப்படையில் அவரைத் தலைமைச் செயலாளராக நியமிக்க ஒப்புக்கொண்டாராம் முதல்வர்.''

''ம்!''

''தனக்கு எப்படியும் பணி நீட்டிப்பு கிடைக்கும் என்று சாரங்கி எதிர்பார்த்தார். . 'ஏற்கெனவே டி.ஜி.பி- யும் பதவி நீட்டிப்பில் இருப்பதால் தலைமைச் செயலாளரும் அந்த அடிப்படையில் அமைய வேண்டாம்’ என்று முதல்வர் நினைத்தாராம். சாரங்கிக்குப் புதிய பதவியாக, தமிழக அரசின் ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலை வர் பதவி கடந்த 10 மாதங்களாகவே காலியாக இருக்கிறது. அதில்தான் அவரை நியமிப்பார்கள் என்று நினைத்தனர். அந்த எதிர்பார்ப்பையும் மீறி இந்தப்பதவி தரப்பட்டுள்ளது. சாரங்கியின், இரண்டாவது இன்னிங்ஸ் விரைவில் தொடங்கும் என்கிறது கோட்டை வட்டாரம்.''

''பார்க்கலாம்!''

''வறட்சியில் இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் விளம்பரங்கள் மட்டும் புசுபுசுவென வளர்கின்றன. தினமும், ஆளும் கட்சியை ஆதரித்து விவசாயிகளின் பெயரில் வாழ்த்து விளம்பரங்களைப் பின்னி எடுக்கிறார்கள். 'விளைச்சல் இல்லை என்று வீதியில் நின்று போராடுபவர்களுக்கு விளம்பரம் கொடுக்க மட்டும் ஏது காசு?’ என்ற சந்தேகம்தான் பலருக்கும். 'காவிரி நீருக்காக சட்டப்போர் நடத்தி, வென்று மத்திய அரசிதழில் இடம்பிடித்த அம்மாவுக்கு நன்றி’, 'காவிரியை மீட்ட அம்மாவுக்கு நன்றி!’ என்று பாராட்டித் தள்ளுகின்றன இந்த விளம்பரங்கள். 'பயிர் காத்து படுகை விவசாயிகளின் உயிர் காத்து தலைக்காவிரியை தமிழகம் மீட்டுவரும் காவிரித் தாயே!’ என்கிறது இன்னொரு போஸ்டர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாரன் பெயரோடு 27-ம் தேதி ஒரு நாளிதழில் அரைப்பக்க விளம்பரம் இடம் பிடித்திருந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டால், 'இந்த விளம்பரத்தை நாங்கள் கொடுக்கவில்லை’ என்று சொல்லி அதிர்ச்சி அடைய வைக்கிறார். 'இந்த விளம்பரத்துக்கும் எங்களுக்கும் எந்த சம் பந்தமும் கிடையாது. மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர் ஒருவர்தான் தன் சொந்தச் செலவில் இந்த விளம்பரங்களைக் கொடுக்கிறார். இன்னும் நிறைய அமைப்புகளின் பெயரில் விளம்பரம் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு வரப்போகிறதாம். இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்’ என்கிறாராம்.''

''விரக்தி நேரத்தில் இந்த விளம்பரம் தேவை​யா?''

''குருங்குளத்துக்காரர்கள் சார்பில் வந்த விளம்பரத்​தையும் அந்த அமைப்பினர் மறுக்கிறார்கள். இது தொடர்பாக அமைச்சரைத் தொடர்புகொண்டு கேட்டால், 'விளம்பரங்களை நான் கொடுக்கவில்லை அந்தந்த அமைப்பினர்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்கிறாராம். யார் கொடுத்தது என்றே தெரியாமல் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் மட்டும் வந்து தஞ்சை மக்களைக் குழப்ப ஆரம்பித்துள்ளது.''

''தண்ணீர் கேட்டால் விளம்பரம் தருகிறார் களோ?'' என்ற கிண்டலை ரசித்தபடி பறந்தார் கழுகார்!

படங்கள்: பொன்.காசிராஜன்

தயாராகுது மதுர!

நாற்பது தனியே!

வழக்கமாக மதுரை குலுங்க குலுங்கப் பிறந்த நாள் கொண்டாடுவார் அழகிரி. இந்த ஆண்டு முன்கூட்டியே ராஜா முத்தையா மன்றத்தில் இடத்தை புக் செய்து விட்டனர். கடைசி நேரத்தில் என்னாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஜனவரி 30-ம் தேதி நடக்கும் இந்த விழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே விளம்பரங்களை தூள் பறத்தத் தொடங்கி விட்டனர் அழகிரி விசுவாசிகள். பொது இடங்களில் வைக்கப்பட்ட விளம்பரங்களை காவல் துறையும் மாநகராட்சி நிர்வாகமும் போட்டி போட்டு அழித்து வருவதால், அவர்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். அதனால், அவர்களின் முகத்தில் கரியைப் பூசும்வண்ணம் வார்டுக்கு வார்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஏரியாவாசிகளுக்குப் பிரியாணி வழங்கி அழகிரி பிறந்த நாளை அசத்திக்காட்ட வேண்டும் என்று அசுர வேகத்தில் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

எஸ்.பி-க்கள் மாற்றம் எதனால்?

நாற்பது தனியே!

திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் சேவியர் தன்ராஜ். இவரைத் திடீரென மாற்றி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இவர், மன்னார்குடியில் உள்ள சசிகலா கோஷ்டியினருக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர். அ.தி.மு.க. ஆட்சியின்போது, திருவாரூர் மாவட்டத்துக்கு எஸ்.பி-யாக வருபவர்கள் முதலில் மன்னார்குடிக்குப் போய் திவாகரனுக்கு முதல் மரியாதை செலுத்துவது வழக்கம். அதைச் செய்ய மறுத்தார் சேவியர் தன்ராஜ். அதனால், வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர். பிறகு, சசிகலா கோஷ்டியினர் மீது ஜெயலலிதா கோபம் காட்டியபோது, சேவியர் தன்ராஜுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து கேள்விப்பட்டு, உடனே அவரை திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமித்தார். திவாகரன் குடும்பத்தினரை போலீஸ் ஸ்டேஷன் வரை வரவழைத்து திவாகரனைச் சரண் அடைய வைத்தவரும் இந்த சேவியர் தன்ராஜ்தான். அப்படிப்பட்டவரை திடீரென இப்போது மாற்றியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. மறுபடியும் திவாகரன் கை ஓங்குவதுதான் இதன் அறிகுறி என்கிறார்கள்.

அடுத்தது, காஞ்சிபுரம் எஸ்.பி-யாக இருந்த மனோகரன் மாற்றப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் அரசியல் பிரமுகர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படை கும்பல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாராளமாகப் புழக்கத்தில் இருப்பது போலீஸ் மேலிடத்துக்குப் போனது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பிரபல ரவுடி ஒருவரை என்கவுன்டர் செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் நாள் குறித்தனர். ஆனால், அதற்கு மனோகரன் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். அதனால்தான் மனோகரன் மாற்றமாம்.

விழுப்புரம் எஸ்.பி-யாக இருந்த பாஸ்கரனைத் தூக்கி சென்னையில் டம்மியான இடத்துக்குப் போட்டு விட்டனர். ''விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் கரைபுரண்டு ஓடுவதாக வடக்கு மண்டல ஐ.ஜி-யான கண்ணப்பனுக்குத் தகவல் எட்டியது. மேலும், விழுப்புரத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து திருட்டுத்தனமாக மது கடத்தி வரப்படுவதும் அதிகரித்து விட்டதாம். இதேபோல், மணல் கடத்தலும் தாறுமாறாக நடக்கிறது. இந்த சட்டவிரோதச் செயல்களைச் செய்யும் பிரபலங்களிடம் மாமூல் வசூலிக்கும் ஏஜென்டுகளும் மாவட்டத்தில் பெருகி விட் டார்களாம். இவர்களை ஒழிக்க வேண்டிய எஸ்.பி. ஏனோ துரிதமாகச் செயல்படவில்லையாம். இவைதான் பாஸ்கரனை மாற்றியதற்குக் காரணம்'' என்கிறார்கள். அதேநேரத்தில், குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகளின் பினாமி பெயர்களில்  சில டாங்கர் லாரிகள் தமிழகத்தில் வலம் வருவதாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் போலீஸ் மேலிடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம்!

ஆட்ட ராஜா!

ஆளும் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அரசின் செய்தித் துறை ஆட்கள் வர மாட்டார்கள். ஆனால், அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பத்திரிகையாளர்களை அழைத்து வந்தது தலைமைச் செயலக பி.ஆர்.ஓ. ராஜாதான். கட்சியின் நிகழ்ச்சிக்கு அரசு ஊழியரைப் பயன்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. பொதுக்குழுவில் வாரப் பத்திரிகைகளை அனுமதிக்க முடியாது என்று சொல்லியே வார இதழ் பத்திரிகையாளர்களை வெளியேற்றினார் ராஜா. ஆனால், அவருக்கு வேண்டப்பட்ட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். என்னதான் லாஜிக்கோ?

"கருணாநிதி தயாரா?"

நாற்பது தனியே!

2012-ம் ஆண்டின் இறுதி நாள், தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான நாளாக தனது சுவடை பதித்துச் சென்று விட்டது. அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் நடந்த அதே தினத்தில், பா.ம.க-வின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் காமராஜர் அரங்கத்தில் கூடியது.

மேடையில் அமர்ந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மேடையில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லாததைச் சுட்டிக் காட்டினார். உடனே, புதிதாக ஓர் இருக்கை போடப் பட்டு, மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த மகளிர் அணித் தலைவி நிருபமா ராசாவை மேடையில் அமர வைத்தனர்.

காடுவெட்டி குரு பேசும்போது, ''தர்மபுரி விவகாரத்தில் கூட்டுச் சேர்ந்துள்ள தி.மு.க. தலைவர்கள், கம்யூனிஸ்ட்கள், கி.வீரமணி மற்றும் அடையாளம் தெரியாத லெட்டர் பேடு கட்சிக்காரர்கள் எல்லாம் நம்மைத் தனிமைப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால், இப்போது அவர்கள்தான் தனிமைப்பட்டு நிற்கிறார்கள்.

சாதி இல்லை என்று பேசும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த பிருந்தா காரத்தைப் பார்த்து நான் கேட்கிறேன். உங்களது பெயர் பிருந்தா. காரத் என்பது உங்கள் சாதிதானே? நாட்டின் முதல் குடிமகன் பிரணாப் முகர்ஜி. அவருடைய பெயரில் உள்ள முகர்ஜி என்பதும் சாதிதானே? ஏதோ இந்தியா முழுவதும் சாதி ஒழிந்து விட்டது போலவும் நாங்கள் மட்டும்தான் சாதியைத் தூக்கிப் பிடிப்பது போலவும் கம்யூனிஸ்ட்கள் பேசுகிறார்கள். இவர்களின் இரட்டை வேடம் இனி பலிக்காது'' என்றார் காரமாக.

கூட்டத்தின் முடிவில் பேசிய டாக்டர் ராமதாஸ், ''கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு பெரிய கட்சிகளுக்கும், தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயாரா என்று சவால் விட்டுக் கொண்டே இருக் கிறேன். ஆனால், இதுவரை எனது சவாலை ஏற்க அவர்கள் துணியவில்லை. இப்போது அ.தி.மு.க. மட்டும் எனது சவாலை ஏற்றுக் கொண்டுள்ளது. தி.மு.க-வும் இதை ஏற்று, தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி எது என்பது தெரியவரும்'' என்றார்.