
பெற்ற தாய்க்குச் சமமாக அனைத்துப் பெண்களையும் நினைக்கும் தேசத்தில்தான், பசிக்கு இரையாக்கப் பார்க்கும் பாவிகளும் இருக்கிறார்கள். கூடவே, கலாசாரப் பார்வை என்ற பெயரில், இதற்குப் பெண்களின் மீதே பழியை இடம் மாற்றும் 'பழைமைவாதப் புத்திசாலி'களும் உலவுகிறார்கள். என்னவெல்லாம் தற்காப்பு முறைகளைப் பெண்கள் இனி மேற்கொள்ளலாம் என்ற அறிவுரைகள் என்னவோ அவசியம்தான். அதேசமயம், வக்கிரப் புத்திக்காரர்களுக்கு எங்கு இருந்து தூண்டுதல் உண்டாகிறது என்பதுகுறித்த விரிவான விவாதம் அதைவிட அவசியம்.
டெல்லியில் மட்டும் அல்ல... அண்மைக் காலத்தில் அடுத்தடுத்து தமிழகத்தில் அரங்கேறி உள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்களில் வெறியைத் தூண்டிய முதல் 'பொறி' - மது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வகையில், மது விற்பனையில் சாதனை படைத்து மார் தட்டிக்கொள்ளும் தமிழக அரசின் பொறுப்பு இந்த விஷயத்தில் கூடுதலாகவே இருக்கிறது. 'அரசுக்கான அடிப்படை வருவாய்... இலவசங்களை அளிப்பதற்கான நிதி ஆதாரம்' என்று சொல்லிச் சொல்லியே இன்னும் எத்தனை காலம்தான் நரகத்தின் வாசலை அரசு அகலத் திறந்துவைக்கப்போகிறது? இரவு - பகல் பாராமல் பொது இடங்களில் அரங்கேறும் அடுக்கடுக்கான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு மட்டும் அல்ல... பூந்தோட்டமாக இருக்க வேண்டிய குடும்பங்களுக்குள் வீசும் புயலுக்கும் மதுதானே முக்கியத் தூண்டுதல்!
ஊக்கத்தோடு சிந்தித்தால், வருமானத்துக்கு ஆயிரம் வழிகள் தெரியும்... மாறாக, மது விற்பனைதான் இதற்கு முதல் வழி என்று அரசு நினைத்தால், அது உடம்பில் ஓடும் ரத்தத்தை விற்று, ஒரு வாய்ச் சோறு தின்பதற்குச் சமம். மாநில அரசுகள் இதைச் செய்யத் தயங்கும்பட்சத்தில், மத்திய அரசே ஒரு சிறப்புச் சட்டம் இயற்ற முன்வர வேண்டும். போதைப் பிசாசின் பற்களை உடைக்கும் மனசாட்சி மிக்க முடிவை எடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மாபெரும் அளவில் மக்களின் வரவேற்பு கிடைக்கும்!