Published:Updated:

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

Published:Updated:
##~##

ருணாநிதி கொளுத்திப் போட்ட நெருப்பு, திகுதிகுவெனத் திசை எல்லாம் எரிகிறது! 

தனக்குப் பிறகு, ஸ்டாலின் தலைமை​யில்தான் கழகம் சுழல வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கும் கருணாநிதி, கட்சியின் மூத்த பிரமுகர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். ஆனால், தனது மகன் அழகிரியை மட்டும் அவரால் கட்டிப்போட முடியவில்லை. அதனால், ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படும்போதெல்லாம் அதை எதிர்த்து அழகிரி ஆத்திரப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எனக்குப் பின்னால் ஸ்டாலின்தான்’ என்று கருணாநிதி சொன்னதும், கொதித்துப்போன அழகிரி, 'தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல’ என்று அனலைக் கக்கி இருக்கிறார். வழக்கமாக இப்படி அழகிரியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினால், அவ ரைச் சமாதானப்படுத்த தயாளு அம்மாளைத் தூது அனுப்புவார் கருணாநிதி. ஆனால், இந்த முறை அப்படி இல்லாமல், 'தி.மு.க-வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று பேராசிரியர் ஏற்கெனவே முன்மொழிந்து விட்டார். எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் ஸ்டாலின் பெயரைத்தான் முன் மொழிவேன்’ என்று ஸ்டாலினைப் பரவசப்படுத்தி இருக்கிறார். அதோடு, 'கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்கருத்து சொல்பவர்களை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’ என்று அழகிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார். இந்த அறிவிப்புகள் வெளியானபோது மதுரையில் தனது வீட்டில் இந்தியா - பாகிஸ்தான் ஒன் டே கிரிக்கெட் மேட்ச்சை ரசித்துக்கொண்டு இருந்தார் அழகிரி.

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

கருணாநிதியின் அதிரடி அறிவிப்பு, அழகிரியின் ஆக்ரோஷம் குறித்துப் பேசிய அழகிரிக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர் ஒருவர், ''அழகிரி அண்ணன், விட்டுக்குடுத்துப் போகணும்னுதான் நினைக்கிறாரு. ஸ்டாலின் தரப்புதான் அடிக்கடி பிரச்னையைக் கிளப்பி அண்ணனை டென்ஷன் ஆக்குது. திரு மங்கலம் இடைத்தேர்தல் அபார வெற்றிக்குப் பிறகு, அண்ணனுக்குத் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

கொடுத்தாங்க. ஆனா, நாங்க மட் டும்தான் அண்ணனைக் கொண்டாடுறோம். தென் மண்டலத்தில் இருக்கிற கட்சிப் பொறுப்பாளர்களில் பெரும்பாலானவங்க அவரை மதிக்கிறது இல்லை. அதுக்குக் காரணம், அவர்களுக்கு மேலிடம் கொடுக்கும் தைரியம்தான். தென் மண்டலச் செயலாளர்னுதான் பேரு. ஆனா, ஒன்றிய செயலாளர் பதவிக்குக்கூட, தான் நினைக்கிற ஆளை அண்ணனால் நியமிக்க முடியலை.

தலைவர் பதவிக்கு வரணும்னோ, கட்சியைக் கைப்பற்றணும்னோ ஒருநாளும் அண்ணன் எங்க கிட்ட பேசினது இல்லை. தொடர்ந்து அவரை அவமானப்படுத்தியே அந்த யோசனைக்குக் கொண்டு வந்துட்டாங்க. 'தென் மண்டலத்தை அண்ணன் பார்த் துக்கட்டும்; அதில் தம்பி ஏதும் தலையிட வேண்டாம். சென்னையில் இருந்து கட்சி நிர்வாகத்தை தம்பி பார்த்துக்கட்டும்’- சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அழகிரி அண்ணன், காந்தி அக்கா, ஸ்டாலின் இவங்க மூணு பேரும் மதுரையில் உட்கார்ந்து பேசி இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க. அதையும் கெடுத்தது ஸ்டாலின்தான். சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக வேட்பாளர்களுக்குத் தலைமை கொடுத்த பணத்தில் பெரும் பகுதியைத் தென் மாவட்டச் செயலாளர் ஒருத்தர் அப்படியே அமுக் கிட்டார். கடலோர மாவட்டச் செயலாளர் ஒருத்தர் கட்சிக்கு சொந்தமான இடத்தை அபகரிச்சு வீடு கட்டிக்கிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்து நிறையப் பேர் போட்டி போட்டாங்க. அவங்க மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லி தலைமைக்கு அண்ணன் புகார் செஞ்சார். ஒருத்தர் மீதுகூட நடவடிக்கை இல்லை.

தென் மாவட்டங்களில் நடக்கும் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளுக்குக்கூட அண்ணனுக்குத் தகவல் அனுப்புவது இல்லை. யாருக்கும் பொறுப்பும் போட முடியாது... தப்பு செய்றவனைத் தண்டிக்கவும் முடியாது. அப்புறம் எதுக்கு தென் மண்டலச் செயலாளர் பதவி? இதைக் கேட்டாத்தான், ஸ்டாலினுக்குக் கோபம் வருது. 'எனக்கு உரிய மரி யாதையைக் கொடுத்துட்டு, ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டுங்க’னுதான் அண்ணன் கேட்கிறார். அண்ணன் தனக்குப் போட்டியா வந்துடுவாரோனு ஸ்டாலின் அதை முடக்கப் பார்க்கிறார். மதுரையில் மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் பகுதிச் செயலாளர் ஜெயராமனும் அண்ணன் கிழிச்ச கோட்டைத் தாண்டாம இருந்தவங்க. அவங்களை இப்ப அண் ணனுக்கு எதிராத் திருப்பி விட்டுட்டாங்க.

அண்ணனோட விசுவாசியான அவைத் தலைவர் இசக்கிமுத்துவைக் கட்சியில் இருந்து கட்டம் கட் டுறாங்க. ஸ்டாலினை வரவேற்கப் போகலைனு சொல்லி, மதுரையில் 17 பேருக்கு நோட்டீஸ் கொடுத்தாங்க. நாலு மாசத்துக்கு முந்தி அண்ணன் ஜப்பான் பயணம் முடிஞ்சு வந்தப்ப, 'அண்ணனுக்கு வரவேற்பு கொடுக்கணும் வாங்க’னு தென் மாவட்டச் செயலாளர்கள் அத்தனை பேருக்கும் தகவல் கொடுத்தோம். தேனி மூக்கையாவையும் மதுரை மூர்த் தியையும் தவிர மத்தவங்க வரலை. இதுக்கு எல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தாங்க?

மதுரைன்னா அழகிரி, அழகிரின்னா மதுரைனு இருந்த கட்சியின் கட்டுக்கோப்பைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிட்டாங்க. அதனால், கட்சி அறிவிக்கும் போராட்டங்களைக்கூட கோஷ்டி கோஷ்டியா நடத்தி மானத்தை வாங்குறாங்க. இந்த லட்சணத்துல 'எனக்கு பின்னால் ஸ்டாலின்’னு சொன்னா, கோபம் வருமா வராதா? அதான் 'தி.மு.க. சங்கர மடம் இல்லை’னு  அண்ணன் வேகப்பட்டுட்டார். தம்பி தலைவர்னா அண்ணனுக்கு என்ன பொறுப்பு தருவீங்க. தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர்னு அண்ணா சொல்லலை. அ.தி. மு.க-வில் எம்.ஜி.ஆர். சொல்லலை. ஆனா, அண்ணாவுக்குப் பிறகு நாவலர்தான் தி.மு.க. தலைவர்னு நாடே சொன்னது. கடைசியில் நடந்தது என்ன? பொதுக்குழு, செயற்குழு ஆதரவோடு கலைஞர் கட்சித் தலைவர் ஆகலையா? எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜானகி அம்மாதான் கட்சித் தலைவர்னு சீனியர்ஸ் எல்லாரும் சொன்னாங்க. கடைசியில், ஜெயலலிதா கைக்குக் கட்சி வரவில்லையா? இந்த வரலாறுகள் திரும்பாதுனு சட்டமா இருக்கு?'' என்று கேட்கிறார் அந்த சீனியர்.

எதையும் செய்யத் துணிந்தவரான அழகிரி, 2001 சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதாகப் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவாளர்​களுக்காக அவர் போயஸ் கார்டனுக்குப் புறப்படத் தயாரானதாகக்கூட பேச்சுக்கள் கிளம்பின. கடைசியில், மதுரையில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தே தனது ஆதரவு ஆட்களை சுயேச்சையாக நிறுத்தி பி.டி.ஆர். உள் ளிட்டோரைத் தோற்கடித்தார்.

இதையெல்லாம் ஞாபகப்படுத்தும் அழகிரியின் அதிதீவிர விசுவாசிகள், ''தேவைப்பட்டால் அண்ணன் எந்த அஸ்திரத்தையும் எடுக்கத் தயங்க மாட்டார். மகன் துரையின் வழக்குப் பிரச் னைகளால் அண்ணன் அமைதியா இருந்தார். இப்போ அவருக்கு மறுபடியும் பழைய வேகம் வந்திருச்சு. ஸ்டாலினால் ஒரு மாதத்தில் செய்து முடிக்க முடியாததை, ஒரே வாரத்தில் செய்து முடிக்கிற மதிநுட்பம் அழகிரி அண்ணன்கிட்ட இருக்கு. கடைக்கோடிக் கட்சித் தொண்டனையும் மதிக்கத் தெரிந்தவர் என்பதால்தான் உண்மைத் தொண்டர்கள் அவர் பக்கம் நிற்கிறார்கள்.

வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., கருப்பசாமி பாண்டியன், செல்வகணபதி மாதிரியான கட்சி மாறிகளை நம்பிக் கட்சி நடத்த நினைக்கிறார் ஸ்டாலின். அண்ணன் தனது ஆதரவாளர்களைத் திரட்டி, தமிழகம் முழுக்க ஒருமுறை சூறாவளி சுற்றுப்பயணம் வந்தால் என்ன நடக்கும் என்று தலைமைக்குத் தெரியும்'' என்கிறார்கள்.

தம்பி தலைவர்னா... அண்ணனுக்கு என்ன தருவீங்க?

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளர் மிசா பாண்டியனிடம் தி.மு.க-வுக்குள் நடக்கும் விவகாரங்கள் பற்றிக் கேட்டோம். ''தலைவர் நூறு வயது கடந்தும் இதே இளமையோடு இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் எங்களோட ஆசை. அடுத்த தலைவரை அறிவிக்கிற அளவுக்கு அவர் ஒன்றும் முடங்கிப் படுத்துவிடவில்லை. 'தி.மு.க. சங்கர மடம் இல்லை’னு அப்பா சொன்னதைத்தான் மீண்டும் ஞாபகப்படுத்தி இருக்கிறார் அண்ணன் அழகிரி. நான் மதுரை துணை மேயர் ஆவேன்னு நினைத்திருப்பேனா, தேன்மொழி கோபிநாதன் மேயர் ஆவோம்னு கனவுலயாவது நினைச்சிருப்பாங்களா? கேபினெட் அமைச்சர் ஆவோம்னு அஞ்சு வருஷத்துக்கு முந்தி அழகிரி அண்ணனே நினைச்சிருப்பாரா? இவ்வளவு ஏன்... எந்தப் பாரம்பரியமும் இல்லாத டீ மாஸ்டர் ஓ.பி.எஸ். முதலமைச்சர் ஆகும்போது தி.மு.க. தலைவரின் பிள்ளை, தென் மண்டல அமைப்புச் செயலாளர், மத்திய அமைச்சர் இத்தனை தகுதிகளை வைத்திருக்கிற அழகிரி அண் ணன் தலைவராக வரணும்னு ஆசைப்படுறது தப்பா?'' என்று கேட்கிறார்.

மதுரையில் உள்ள ஸ்டாலின் விசுவாசிகளோ, ''ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே ஆக்​ஷன் ஹீரோவாக இருப்பவர் அழகிரி. 'செக்கு மாடு உழைக்குது. விருதா மாடு (பால் மாடு) வீட்டுலருந்தே திங்குது’னு கிராமத்துப் பக்கம் சொல்வாங்க. ஸ்டாலின் - அழகிரி கதை அப்படித்​தான் இருக்கு. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுறுசுறுப்பாய் சுற்றிக்கொண்டே இருக்கிறார் ஸ்டாலின். தென் மாவட்ட அமைப்புச் செயலாளராக இருப்பவர், கடந்த ஒன்றரை வருடங்களில் தென் மாவட்டங்களில் எத்தனை பொதுக் கூட்டங்களில் பேசினார், எத்தனை இடங்களில் ஊழியர் கூட்டங்களை நடத் தினார்னு லிஸ்ட் கொடுக்க முடியுமா? 'அழகிரி சொல்ல நினைக்கிற கருத்துக்களை செயற்குழு, பொதுக்குழுவில் வந்து பேசச் சொல்லுங்​கய்யா’னுதானே தலைவர் சொல்றார்? ஏன் அங்கே வந்து பேச மாட்டேங்கிறார்? 'பதவியை ராஜினாமா பண்ணிருவேன்’னு சொல்​லிச் சொல்லி இன்னும் எத்தனை நாளைக்கு அரசியல் பண்ணப்போறார்?

ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி என்றதும் 'தி.மு.க. சங்கர மடம் இல்லை’னு கொதிக்கிறாரே... மாவட்​டச் செயலாளர்களால் தேர்வு செய்யப்பட வேண்டிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் இவரை நியமனம் செய்தபோது மட்டும் கட்சி சங்கர மடமாகத் தெரியலையா? நெல் லையில் கருப்பசாமிபாண்டியனுக்கு எதிராக மாலைராஜா, குமரியில் சுரேஷ்ராஜனுக்கு எதிராக நாகர்கோவில் நகரச் செயலாளர் மகேஷ், தூத்துக்குடியில் என்.பெரியசாமிக்கு எதிராக அனிதா ராதாகிருஷ்ணன், கட்சியின் மூத்த மாவட்டச் செயலாளரான ராமநாதபுரம் சுப.தங்கவேலனுக்கு எதிராக ரித்தீஷ் என ஊருக்கு ஊர் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக ஆட்களைக் கொம்பு சீவிவிடவா இவருக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தாங்க? இப்பவும் பாருங்க, விஜயகாந்த் கட்சியோட கூட்டணி அமைக்கிறதுக்காக தள பதி முயற்சி எடுத்துட்டு இருக்கார். அதைக் கெடுக்கிறதுக்கு, 'விஜயகாந்த் வழக்குக்குப் பயந்து ஓடுறார்’னு விமர்சனம் செய்கிறார். 'அதே வழக் குக்குப் பயந்துதானே உங்க புள்ள ஓடினார்’னு விஜயகாந்த் திருப்பிக் கேட்டா, என்ன பதில் சொல்வார்?'' என்று கொந்தளிக்கிறார்கள்.

எந்தக் கோஷ்டியிலும் சேராதவர்களோ, ''அண்ணனும் தம்பியும் ஒண்ணா இருக்கணும்னு நாங்க ஆசைப்படுறோம். ஆனா, ரெண்டு பேருக்கும் பக்கத்துல இருக்கும் சிலரால்தான் விரிசல் பெரிசாகிட்டே போகுது. அதை இருவரும் உணர்ந்தாலே, பாதிப் பிரச்னைகள் சரியாகி விடும்'' என்கிறார்கள்.

'கட்சியின் தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், பேராசிரியர் ஒப்புதலுடன் இப்படியரு முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக ஒன்றரை மாதத்துக்கு முன்பே அழகிரிக்குத் தகவல் வந்ததாம். அப்போது அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர், இப்போது தகிக்கிறாராம். பொரு ளாளர் பதவிக்காக ஏற்கெனவே டிமாண்ட் வைத் திருந்தவர் இனி, தலைவர் பதவிக்கே போட்டிக்கு வருவார்’ என்கிறது அழகிரி வட்டாரம்.

அண்ணனைத் தவிர்த்துவிட்டு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது அழகிரி மண்டலம்.

- குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி