Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''
##~##

ழுகார் உள்ளே நுழைந்ததும் ஃபார்ம் லிஸ்ட்டை மெதுவாக நோட்டமிட்டார். ''தி.மு.க. செய்திகளாக இருக்கிறதே! ஏதாவது ஸ்பெஷலா?'' என்று கேட்டார். பதில் சொல்லாமல் சிரித்தோம். ''உம்மிடமும் அதைத்தானே அதிகம் எதிர்பார்க்கிறோம்!'' என் றோம். தலையாட்டியபடியே திரைமறைவுக் காட்சிகள் அனைத்தையும் மெள்ள அவிழ்க்க ஆரம்பித்தார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''கடந்த 3-ம் தேதியில் இருந்தே தி.மு.க-வில் மேகம் கருக்க ஆரம்பித்துவிட்டது. அதை சென்ற இதழிலேயே நான் உமக்குக் கோடிட்டுக் காட்டி இருந்தேன். 'இந்தச் சமுதாய மேன்மைக்​காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் இங்கே அமர்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.’ இதுதான் கடந்த 3-ம் தேதி அண்ணா அறி வாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கருணாநிதி சொன்னது. ஸ்டாலின் தன்னுடன் மேடையில் இருந்தால், அவருக்கு உற்சாகம் ஊட்டுவது மாதிரி கருணாநிதி சில டானிக் வார்த்தைகளைச் சொல்வது வழக்கம்தான். அப்படி ஒரு சம்பவம் இது என்றுதான் பலரும் அமைதியாக இருந்​தனர். 'இந்த மாதிரி தலைவர் எத்தனையோ  முறை சொல்லிவிட்டார். அதுமாதிரிதான் இதுவும்’ என்று முன்னாள் அமைச்சர்களுக்குள் பேச்சு எழுந்து அடங்கியது. ஆனால், ஸ்டாலின் இதை அப்படிக் கருதவில்லையாம். 'தலைவர் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டார்’ என்றே அவர் நினைத்தாராம். மறுநாள் வெளியான அனைத்து தினப்பத்திரிகைகளும் கருணாநிதி சொன்ன வார்த்தைகளுக்கு கண்ணும் காதும்வைத்து செய்திகளை வெளியிட்டது. அதைப் பார்த்தும் அழகிரி அமைதியாகத்தான் இருந்துள்ளார். ஆனால், அன்றைய தினம் வெளியான முரசொலி இதைத் துணைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுதான் கருணாநிதியின் உள்ளக்கிடக்கையை மறைக்காமல் சொன்னது!''

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

''அப்படியா?''

''ஸ்டாலினை வெளிப்படையாகவோ மறைமுக​மாகவோ கருணாநிதி பாராட்டிப் பேசிய எத்த​னையோ சம்பவங்கள் உண்டு. அப்போது எல்லாம் அதைத் தலைப்புச் செய்தியாக மற்ற நாளிதழ்கள் வெளியிட்டாலும், கட்சியின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையான முரசொலி, தலைப்பு ஆக்காது. அதில் தலைப்பாக வந்தால், தீர்ப்பாக ஆகும் என்பதால் தவிர்ப்பார்கள். ஆனால் 3-ம் தேதி கருணாநிதி சொன்னதை, 'சமுதாய மேன்மைக்காக - எழுச்சிக்காக என்னைத் தொடர்ந்து தம்பி மு.க.ஸ்டாலின் பாடுபடுவார்’ என்று துணைத் தலைப்பாக வெளியிட்டனர். அதாவது, கருணாநிதி தன்னு​டைய காய் நகர்த்தலைத் தொடங்கிவிட்டார், அதை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறார்.''

''சொல்லும்!''

''முரசொலியின் பேனரைப் பார்த்துக் கொந்தளித்த அழகிரி, வீட்டுக்குள் இருந்து கர்ஜிக்க ஆரம்பித்தார். முன்பு எல்லாம் அவருக்கு ஒரு கோபம், வருத்தம், மனஸ்தாபம் என்றால், உடனே தயாளு அம்மாளுக்குத்தான் போன் செய்வார். இவர் மனதில் உள்ளதைக் கொட்டுவார். அதை கருணாநிதியிடம் கொண்டுபோவார் தயாளு. ஆத்திரம் அடங்கும். அமைதியாவார்கள். ஆனால், சமீப காலமாக தயாளு அம்மாள் உடல் நலன் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் அவரைத் தொடர்புகொள்ள முடியாது. போனில் பேசும் உடல் வலிமையில் அவர் இல்லை. எனவே, கருணா நிதியின் மூத்த மகள் செல்வியிடம் கோபமாய் பேசி இருக்கிறார் அழகிரி. அவர் சொன்ன ஒரே சமாதானம், 'எதுவாக இருந்தாலும் அப்பாவிடமோ, அம்மாவிடமோ பேசு. என்னால் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது’ என்பதுதான். செல்வி இந்த விஷயத்தில் கழன்று கொண்டதும் நேரடியாகச் சென்னைக்கு வந்து கருணாநிதியைக் கோபாலபுரத்தில் முற்றுகையிடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு அழகிரி வந்தார். விமானத்தைப் பிடித்தார். வந்து இறங்கினார். சென்னை விமான நிலையத்தில் வழக்கம்போல சவால் விட்டார். 'தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று தலைவரே சொல்லி இருக்கிறார். அதைத்தான் சமீபத்தில் ஸ்டாலினும் சொல்லி இருக்கிறாரே’ என்று பதில் கேள்வியைக் கேட்டுவிட்டு, கருணாநிதியின் புரோகிராம்களை தெரிந்து கொண்டார்...''

''ம்!''

''அழகிரி, தலைநகருக்குள் வந்துவிட்டார் என்றதும் கருணாநிதியின் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. அவரைச் சந்திப்பது சரியல்ல என்ற முடிவுக்கு கருணாநிதி வந்தார். அழகிரி​யின் முதல் செட்-பேக் இதுதான். என்ன நடந்தாலும் அழகிரியை அழைத்து ஏதாவது சாக்குப்போக்கு சமாதானம் செய்துவிடுவதுதான் கருணாநிதியின் வழக்கம். அழகிரியும் அமைதியாகிச் சென்று விடுவார். ஆனால், முதன்முதலாக அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தார் கருணாநிதி. கோபாலபுரம் வந்து கருணாநிதியைப் பார்க்கலாம் என்று அழகிரி கிளம்பியபோது, முரசொலி அலுவலகத்துக்குப் பறந்தது அவருடைய கார். சமீபகாலமாக முரசொலி அலுவலகத்துக்குக் கருணாநிதி அதிகம் செல்வது இல்லை. எழுதிக்கொடுப்பதும் புரூஃப் பார்ப்பதும் வீட்டில் இருந்தபடிதான். அங்கு இருந்து சி.ஐ.டி. காலனி வீட்டுக்குப் போய்விட்டார். அழகிரி, சி.ஐ.டி. காலனி வீட்டில் போய் பார்க்க முடியாது. பார்த்தாலும், நினைத்தை மனம் போன போக்கில் கேட்கவும் முடியாது. மாலை நேரத்திலாவது கருணா நிதியைச் சந்திக்கலாம் என்று காத்திருந்தார். ஆனால் கருணாநிதியின் கார், அன்பழகனின் அண்ணா நகர் வீட்டை நோக்கிச் சென்றது. அன்பழகனின் மனைவி சமீபத்தில்தான் இறந்தார். அதன்பிறகு, ஒருவார காலமாக அன்பழகன் அறிவாலயம் வர வில்லை. 'அதனால் அவரைப் பார்க்க தலைவர் போய் விட்டார்’ என்று காரணம் சொன்னார்கள் சிலர். '6-ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம் நடக்கிறது. அதற்கு பேராசிரியர் கட்டாயம் வர வேண்டும் என்று அழைக்கப் போனார்’ என்று சொன்னார்கள் சிலர். என்ன காரணம் சொன்னாலும் அழகிரியை அவர் சந்திக்க விரும்பவில்லை என்றே தெரியவந்தது. 4-ம் தேதி கருணாநிதியைச் சந்தித்து விடலாம் என்ற நம்பிக்கையில் 5-ம் தேதி காலையில் மதுரைக்கு விமான டிக்கெட் வாங்கி வைத்திருந்தார் அழகிரி. அதை, அன்றைய இரவே கேன்சல் செய்யச் சொல்லிவிட்டார். ஆனால், 5-ம் தேதி அழகிரிக்கான நெருக்கடி இன்னும் அதிகமானது.''

''என்ன?''

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

''அன்றைய தினம் கனிமொழியின் பிறந்த நாள். இதுவரை அவரது பிறந்த நாள் அவ்வளவு ஆர்ப்​

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

பாட்டமாக கொண்டாடப்பட்டது இல்லை. குடும்பத்தினர் வாழ்த்து மட்டும் இருக்கும். எங்காவது நலத்திட்ட உதவிகள் செய்யப்படும். கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாளுக்கு திரண்டு வருவதைப்போல யாரையும் வர அனுமதிக்க மாட் டார்கள். ஆனால், இம்முறை காலையிலேயே கூட்டம் திரள ஆரம்பித்தது. வழக்கத்துக்கு மாறாக, கட்சி முக்கியஸ்தர்கள் சி.ஐ.டி. காலனி வீட்டை நோக்கி வர ஆரம்பித்தனர். ஸ்டாலின் அங்கு மையம் கொண்டுள்ளார் என்று தெரிந்ததுமே எல்லா கார்களும் தூசி துடைக்கப்பட்டு, கனிமொழி வீட்டை நோக்கி ஊர்ந்து வர ஆரம்பித்தன.''

''கனிமொழிக்கும் ஸ்டாலினுக்குமே கொஞ்சம் மனஸ்தாபங்கள் இருந்ததாக செய்திகள் வந்ததே?''

''யாரோ சிலர் இரண்டு பேருக்கும் மாற்றிமாற்றி சில தகவல்களைத் தந்து மனஸ்தாபத்தை விதைத்​துள்ளனர். அதை அண்ணனும் தங்கையும் புரிந்து கொண்டார்களாம். கருணாநிதியின் 3-ம் தேதி பேச்சைப் பார்த்தும் ஸ்டாலினுக்கு போனில் பாராட்டுச் சொன்னதில் கனிமொழியும் உண்டாம். அதை முழுமையாகப் புரிந்துகொண்ட ஸ்டாலின், கனிமொழியின் வீடு தேடி வந்து வாழ்த்துச் சொன்னார். ஸ்டாலின் அந்த வீட்டுக்குள் வரும்போது, கருணாநிதி அங்கு இருந்து கிளம்பி வாசலுக்கு வந்திருந்தார். ஸ்டாலினைப் பார்த்ததும் அவருடனேயே மறுபடியும் உள்ளே வந்து இரு வரையும் தனக்கு முன்னால் நிறுத்தி அன்புப் பரிசுகளை வழங்க வைத்துள்ளார் கருணாநிதி. உடனே புறப்பட்ட ஸ்டாலினிடம் பரிவாகப் பேசிய ராஜாத்தி அம்மாள் சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்ல, அவரும் அந்த ஆசையை நிறைவேற்ற... குணச்சித்திரக் காட்சியாக அமைந்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள மனம் இல்லாதவராக அழகிரி எங்கோ உட்கார்ந்து புழுங்கிக்கொண்டு இருந்தார்.''

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

''அழகிரி, அங்காவது வந்து வாழ்த்தி இருக்க​லாமே?''

''கனிமொழிக்கு அவர் போன் செய்து வாழ்த்து கூறியதாகவும், 'வீட்டுக்கு வாங்கண்ணே!’ என்று இவர் கூப்பிட்டதாகவும், 'அங்க வர்ற மனநிலையில் நான் இல்லை’ என்று அழகிரி சொன்னதாகவும் சொல்கிறார்கள். காலை, மதிய நேரத்தில் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்றதும், மாலையில் விமானம் பிடித்து திருச்சி போய், அங்கு இருந்து மதுரைக்குப் போய்விட்டார் அழகிரி. கனிமொழி பிறந்த நாள், மறுநாள் 6-ம் தேதி நடக்க இருந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றுக்காக தி.மு.க. முன்னணியினர் முன்னாள் அமைச்சர்கள் சென்னையில் வந்து குவிய ஆரம்பித்தனர். கருணாநிதி - அழகிரி விவகாரங்கள் அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே பலரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.''

''மறுநாள் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது எதிரொலித்ததா?''

''மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பது தேர்தல் நிதி வசூலிப்பதற்காக நடத்தப்பட்டது. பெரிய மாவட்டம் என்றால் இரண்டு கோடியும் சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு கோடியும் நிதி தர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. முதலாவதாக உட்கார்ந்திருந்த கே.என்.நேருதான் முதலில் மைக் பிடித்துள்ளார். 'தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதற்கு நாங்கள் கட்டுப்படத் தயாராக இருக்கிறோம். நம்முடைய அணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும். தே.மு.தி.க-வை இணைப்பதா இல்லையா என்பதை தலைவர் முடிவுக்கு விட்டுவிடுகிறோம். ஆனால், அது பலமான கூட்டணியாக அமைய வேண்டும். நம்மை செல்லாக்​காசு என்று சொல்பவர்களைப்பற்றி எல்லாம் தலைவர் கவலைப்பட வேண்டியது இல்லை’ என்று அவர் பேசி இருக்கிறார். 'கோடிக்கணக்கான பணத்தை ஆளும்கட்சி திரட்டி வருகிறது. நாம் தொண்டர்கள் மூலமாக பொதுமக்களிடம் வசூ​லித்துக் கொண்டுவந்து கொட்டுவோம்’ என்று சிலர் வாக்குறுதி கொடுத்து உள்ளனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பேசும்போது, 'நம்முடைய முன்னாள் அமைச்சர்கள் வசம் நிறையப் பணம் இருக்கிறது. அவர்கள் தேர்தல் செலவுகளைச் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாராம். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி பேசும்போது சர்ச்சை ஆகி இருக்கிறது.''

''அது என்ன?''

''மூர்த்தி பேசும்போது, 'அழகிரியும் ஸ்டாலினும் இணைந்து செயல்பட்டால் வெற்றியைப் பெறலாம்’ என்று பொதுவாகச் சொல்லி இருக்கிறார். 'மதுரை​யில் இருக்கிறவங்க இங்க ஒண்ணு பேசுறீங்க. அங்க ஒண்ணு பண்றீங்க? தலைமை ஒரு முடிவு எடுத்து அறிவிச்சா, அதுக்கு எதிராவே பேட்டி கொடுப்பீங்களா?’ என்று கருணாநிதி கேட்க... மூர்த்திக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரிய வில்லை. 'நான் எந்தப் பேட்டியும் கொடுக்​கலை தலைவரே’ என்று அவர் சொல்லி இருக்கிறார். அழகிரியின் பெயரைக் குறிப்பிடாத கருணாநிதி, 'தலைமைக்கு எதிரா யார் பேசினாலும் கட்டம் கட்டிடுவோம்’ என்றாராம். உடனே ஸ்டாலின், 'மதுரைக்கு அதுக்குள்ள யாரையோ வேட்பாளராகப் போடப்போறதா பேட்டி கொடுத்து இருக்கிறதைப் பார்த்தீங்களா?’ என்று கேட்க... மூர்த்தி அமைதி​யாகவே இருந்துள்ளார். அதன்பிறகு, அது சம்பந்தமான விவாதம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கூட்டம் முடிந்ததும் நடந்த பிரஸ்மீட், கருணாநிதியை மடை திறந்த வெள்ளமாகக் கொட்ட வைத்துவிட்டது!''

''ஸ்டாலின் சம்பந்தமான கேள்விகளுக்கு கருணா​நிதியும் தயாராக இருந்ததுபோல் தெரிகிறதே?''

''யாரோ ஒரு நிருபர், காவிரி டெல்டா பற்றி கேட் டார். 'இன்னைக்கு அது சப்ஜெக்ட் இல்லையே’ என்றார் கருணாநிதி. அப்படியானால் அவர் சப்ஜெக்ட் என்று நினைத்தது இந்த விவகாரத்தைத்​தான். 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். தலைவராகவோ பொதுச் செயலாளராகவோ ஒருவர் போட்டியிட வேண் டுமானால், அதை பொதுக் குழுவில் முன்மொழிந்து, பெரும்பான்மையோர் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலே வருமேயானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன். ஏனென்றால் இது, பொதுச் செயலாளர் பேராசிரியர் முன்மொழிந்தது. அதை நான் வழிமொழிவதாகத்தான் அர்த்தம்’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் கருணாநிதி. இது ஏதோ அவசரப்பட்டுச் சொன்னது அல்ல. தீர்மான​கரமாகச் சொன்னது என்பதற்கு ஆதாரம், மறுநாள் வெளியான முரசொலியில் இதையே தலைப்பாகப் போட்டு பேட்டியை வெளியிட கருணாநிதி சம்மதம் தெரிவித்ததுதான்.''

''தீர்மானமாக இதை கருணாநிதி சொல்லத் தூண்டியது எது?''

''ஸ்டாலின்தான் தனக்கு அடுத்தத் தலைவர் என்று கருணாநிதி முடிவெடுத்துவைத்து இருந்தாலும், அதை இன்னும் சொல்லிக் காலம் கடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கு அச்சாரம் போடும் சம்பவம்கூட கனி மொழி பிறந்த நாள் விழா அன்றுதான் நடந்தது.''

''அது என்ன?''

''கனிமொழியை வாழ்த்துவதற்கு ஸ்டா​லின் வருவதற்கு முன், கருணாநிதி வந் தார் என்று சொன்னேன் அல்லவா? அப்போது கனிமொழி வீட்டில் தயாநிதி மாறன், ஆ.ராசா, எ.வ.வேலு, கே.பி.ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர். இதில், கே.பி.ராமலிங்கத்தைப் பார்த்ததும் கருணாநிதிக்கு அழகிரியின் ஞாபகம் வந் தது. அவர்தான் அழகிரிக்கு நெருக்க​மானவர். 'என்னய்யா உங்க ஆளு பத்திரிகைகளுக்குத் தீனி போட்டுக்கிட்டு இருக்காரு... சும்மா இருக்க முடியலையா? தலைமையை எதிர்த்துப் பேட்டி கொடுத்துக்கிட்டே இருப்பாரா?’ என்று சத்தமாகக் கேட்டுள்ளார். கே.பி.ராமலிங்கத்துக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சிரித்தபடி அமைதியாக இருந்துள்ளார். உடனே கருணாநிதிக்கு அருகில் வந்த தயாநிதி மாறன், 'நீங்க சும்மா... கமா போட்டுக்கிட்டே இருக்காதீங்க தாத்தா... ஃபுல்ஸ்டாப் வைங்க தாத்தா’ என்று சொல்லி இருக்கிறார். உடன் இருந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்துள்ளனர். 'நான் எதுக்கு இழுக்கணும். அடுத்த தேர்தல் வரட்டும்... நானே ஸ்டாலின் பேரை முன்மொழியிறேன்... போதுமா?’ என்றாராம். அதுதான் அந்தரங்கத்தில் இருந்து அரங்கத்திலும் ஒலித்து விட்டது'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

அட்டை மற்றும் படங்கள்:

வீ.நாகமணி , சொ.பாலசுப்ரமணியன்

 'டெல்லி அரசியல்ல கவனம் செலுத்தும்மா!’

 ராசியான நிறமா அல்லது ஜோசியரின் ஆலோசனையா என்று தெரியவில்லை. அன்று சி.ஐ.டி. காலனி குடும்பம் முழுவதும் நீல நிறத்தில் காட்சி அளித்தது. கனிமொழி நீல நிறப் பட்டு அணிந்து இருந்தார். ராசாத்தி அம்மாளும் அதே கலர். கனிமொழியின் கணவர் அரவிந்தன் நீல நிற ஜிப்பா. மகன் ஆதித்யன் நீல நிற டி-சர்ட்... என எங்கும் நீல மயம். வீட்டுக்கு வெளியே போடப்பட்டு இருந்த பந்தலின் அலங்காரத்திலும் ஜொலிஜொலித்தது ஸ்கை புளுதான். காலையில் முதல் ஆளாக வந்து மகளுக்கு கேக் ஊட்டி வாழ்த்திய கருணாநிதி, 'டெல்லி அரசியலில் கவனம் செலுத்தும்மா’ என்று ஆசி வழங்கினாராம்.  

மிஸ்டர் கழுகு: ''சும்மா... கமா போடாதீங்க தாத்தா!''

கனிமொழி பிறந்த நாள் அன்று மாலை திருவொற்றியூரில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி விழா நடக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி  அறிவித்து இருந்தார். இதில் கனிமொழியும் கலந்துகொள்வதாக முதலில் முடிவாகி இருந்தது. அன்று மாலையில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.  அண்ணனும் தங்கையும் ஒரே நாளில் ஒரே மாவட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும் என்று நினைத்த கனி மொழி, 'உங்க நலத்திட்ட உதவியை காலையிலேயே முடிச்சிடுங்க. நான் வரலை. நிர்வாகிகள் அண்ணன் கூட் டத்துக்குப் போகட்டும்’ என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்!

 இந்த வருஷம் 100... அடுத்த வருஷம் 1000?

ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு பச்சரிசி, சர்க்கரையோடு பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக 100 ரூபாய் வழங்க உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர். அடுத்த ஆண்டு பொங்கல் சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கும். ''பொங்கல் பொருட்களுக்காகப் பணம் கொடுக்கிறோம் என்று சொல்லி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அரசாங்கப் பணத்தை அள்ளிக்கொடுத்து வாக்காளர்களை வசீகரிக்கவே இந்த ஆண்டு இப்படி முன்னோட்டம் காட்டி இருக்கிறார்கள்'' என்ற புலம்பல் தி.மு.க. வட்டாரத்தில் கிளம்பி இருக்கிறது!