Published:Updated:

கட்சியிலுள்ள குறைபாடுகள் விரைவில் நீக்கப்படும்: கருணாநிதி

Vikatan Correspondent
கட்சியிலுள்ள குறைபாடுகள் விரைவில் நீக்கப்படும்: கருணாநிதி
கட்சியிலுள்ள குறைபாடுகள் விரைவில் நீக்கப்படும்: கருணாநிதி
கட்சியிலுள்ள குறைபாடுகள் விரைவில் நீக்கப்படும்: கருணாநிதி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வியை அடுத்து, கட்சியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில் சில அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, ராயப்பேட்டையில் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கருணாநிதி, "பேராசிரியர் க.அன்பழகன் பேசியபோது, இளமையில் எங்களுக்கு ஏற்பட்ட சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிட உணர்வுகள் இன்றளவும் தொடர்வதை உருக்கமாக  குறிப்பிட்டார். அதை எண்ணி எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு காலத்தில் இந்த நிலையை நாங்கள் எண்ணிப்பார்த்தது கிடையாது. இந்த வலிமை, திறன் யாரால் ஏற்பட்டது என்று நினைத்த நேரத்தில், எங்களை உருவாக்கிய அண்ணாவையும், அவரை உருவாக்கிய பெரியாரையும் நாங்கள் மறந்துவிட முடியாது. அந்த இருபெரும் தலைவர்கள் எங்களை ஆளாக்கினார்கள். அவர்களால் பரப்பப்பட்ட கொள்கை, லட்சியங்களை நாங்கள் மறந்துவிட்டால், அவர்களையே மறந்துவிட்டோம் என்பதை அறியாதவர்கள் நாங்கள் அல்ல. இயற்கையை தவிர வேறு யாராலும், எந்த கட்சி தலைவராலும் என்னையும், பேராசிரியர் க.அன்பழகனையும் பிரிக்க முடியாது.

பல கருத்துகள் இந்த விழாவில் கட்சி தலைவர்களால் கூறப்பட்டன. முக்கியமான கருத்து, என்னவிருந்தாலும் தோற்றுவிட்டோமே என்பதுதான். எப்படி தோற்றம் என்பது நமக்கு புரிகிற காரணத்தால் அதை தோல்வியாக கருதாமல், அடுத்து அடையப்போகும் வெற்றிக்கு முன்னறிவிப்பாக கருத வேண்டும். நாம் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அண்ணாவின் வழியிலே தோல்வியையும் வெற்றியாக கருதி பயணத்தை தொடருவோம் என்ற லட்சியத்துடன் செயல்படுவோம்.

பத்திரிகை உலகுக்கும், எங்களுக்கும் விரோதம் கிடையாது. நாங்கள் முரசொலி பத்திரிகை நடத்துகிறோம். தி.மு.க. முக்கிய தலைவர்கள் எல்லாம் பத்திரிகை உலகில் அனுபவம் பெற்றவர்கள்தான். எனக்குள்ள ஆதங்கம், இந்த இயக்கத்தை நசுக்கிவிட வேண்டும் என்று நினைக் கம் எதிர்தரப்புக்கு பத்திரிகைகள் இரையாகிவிட்டன. இது நியாயமா?. நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல. தி.மு.க. எதிர்காலத்தில் பத்திரிகை உலகத்தை தூக்கிவிடக்கூடிய இயக்கம்தான் என்ற எண்ணத்துடன் நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நாங்கள் தவறு செய்தால், அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்லுங்கள். ஜனநாயகம் தழைக்க நாங்கள் பாடுபடுவோம். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை.

ஏதோ உங்களால்தான் தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டுவிட்டது என்று கெஞ்சி கேட்பதாக கருதிவிடக்கூடாது. பத்திரிகைகாரன் என்ற முறையில் விளக்கம் அளிக்க எனக்கும் திறமை இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள நாங்களும், எங்களை வீழ்த்திவிட்டோம் என்று களிப்பில் உள்ள செய்தியாளர்களும் எதிர்காலத்தில் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.

இப்போது, தேர்தல் முடிவுகளால் என்ன ஏற்பட்டுவிட்டது என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நம்முடைய பழைய வரலாறுகளை மூடிமறைக்கத்தான் பயன்பட்டிருக்கின்றன. நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் ஏற்பட்ட மாற்றம் என்ன?. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமை செயலகம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை இந்த ஆட்சியாளர்கள் தடுத்தனர். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளது.

ஒரு நாடு வளம்பெற திட்டங்களை வரவேற்க வேண்டும். அதைத்தான் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது நாட்டு மக்களுக்கு அறிவித்தார். சேது சமுத்திர திட்டம் பல ஆண்டு காலமாக கேட்பாரற்று கிடக்கிறது. அதை நிறைவேற்ற முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அடுத்த ஆட்சியில் தொடருவதுதான் ஜனநாயகத்திற்கு ஏற்றது. தொல்காப்பிய பூங்கா, வீட்டுவசதி திட்டம், சென்னை - திருப்பதி அகல சாலை திட்டங்கள் விரோதமான திட்டங்களாக கருதப்பட்டு, அந்த திட்டங்கள் இன்று முடங்கி கிடப்பதற்கு என்ன காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது. தி.மு.க. ஆட்சியில், 2009- 2010ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 10.8 சதவீதமாக இருந்தது. 2010-2011ஆம் ஆண்டு 13.1 சதவீதமாக உயர்ந்தது. 2011- 2012ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 7.4 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்தது. 2012-2013ஆம் ஆண்டில் 4.14 சதவீதமாக குறைந்துள்ளது. இதை என்னவென்று சொல்வது. இந்த வளர்ச்சிக்காகவா எங்களை வேண்டாம் என்று எண்ணி வாக்களித்தீர்கள் என்று தமிழக மக்களை நான் கேட்கிறேன்.

சமுதாயத்தின் வளர்ச்சியாவது ஒழுங்காக இருக்கிறதா? என்று பார்த்தால், அதுவும் சொல்லக்கூடிய அளவு இல்லை. கொலைகள் மாத்திரம் இந்த ஆட்சியில் 3432 நடந்துள்ளது. கொள்ளைகள் 1368 இந்த 3 ஆண்டு காலத்தில் நடந்துள்ளது. செயின் திருட்டு 938, வழிப்பறி 925 நடந்துள்ளது. ஆனால், எங்கள் ஆட்சியில் விலைவாசியை குறைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அதற்காகத்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இன்னும் அம்மா பெயரில் என்னவெல்லாம் வரப்போகிறது என்று பார்ப்போம். அப்போதைய விலைவாசி என்ன, இப்போதுள்ள விலைவாசி என்ன என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தேர்தலில் நாம் தோற்றாலும் அதை வெற்றியாக கொண்டாடுகிறோம். அதுதான் தி.மு.க. தோல்வியிலும் வெற்றி காண்பவர்கள். வெற்றியில் இன்று ஆட்டம் போடுகிறவர்கள், தி.மு.க.வின் தோல்வியை கூறுபவர்கள் நாளைக்கு இந்த தி.மு.க.வும் வெற்றி பெற்றுவிட்டதாக என்று வாயை பிளக்கப்போகிறார்கள்.

தி.மு.க. கட்டுக்கோப்பான கட்சி. பழுதுபார்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகள் என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கின்றன. அவைகளை எல்லாம் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் ஆராய்ந்து அறிந்து அன்றைக்கே கூற முயன்றோம். பிறந்த நாள் விழா இருந்ததால், சற்று தாமதித்து பிறகு அறிவிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் அந்த முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பிறகு தி.மு.க. கூர்தீட்டிய வாளாக விளங்கும், பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கும்" என்று பேசினார்.