பிரீமியம் ஸ்டோரி

எலிகள் வெளியே வரட்டும்!!!!

தலையங்கம்

த்தனையோ பிரச்னைகளின்போது எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புக் குரலால் நாடாளுமன்றம் முடங்கியது உண்டு. 'அமளி துமளி... அவை முடக்கம்’ என்ற செய்தியால், மக்களின் கோபம் எதிர்க் கட்சிகளின் பக்கம் திரும்பும். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு நிமிட நடப்புக்கும் தங்கள் வரிப் பணம் எந்த அளவுக்குச் செலவாகிறது என மக்கள் கோபம்கொள்வதும் இயற்கை.

ஆனால், 'ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், யார் யாருக்கு எவ்வளவு பங்குஉள்ளது என்று தெரிந்துகொள்ள, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்' என்று எதிர்க் கட்சிகள் நடத்திவரும் யுத்தத்தில், இரு அவைகளும் முடங்கிக்கிடந்தாலும், ஆளும் காங்கிரஸ் கூட்டணி மீதுதான் மக்களின் கோபம்!

'கூட்டுக் குழு என்ற புகையைப் போட்டால்தான், எலிகள் அத்தனையும்வெளியே வரும்’ என்பதே மக்கள் கருத்து. மடியில் கனம் இல்லாவிட்டால்,ஏன் இந்தப் பயம் கலந்த பிடிவாதம்?  

'நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க அனுமதித்தால், அதையே அரசியல் லாபம் தேடும் பிரசாரமாக எதிர்க் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்’ என்று ஆள்வோர் கூறியுள்ள காரணம், நகைப்புக்கு உரியது! 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் எந்தத் தவறுமே நடக்கவில்லை என்றால், 'இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். கூட்டுக் குழு தாராளமாக விசாரிக்கட்டும். அதன் பிறகாவது, உங்கள் கூச்சல் அடங்கினால் சரி' என்று கூறுவதுதானே ஆளும் கூட்டணிக்குச் சாதகமாக இருக்க முடியும்?

அதைவிடுத்து, 'கணக்கு தணிக்கைக் குழுவின் அறிக்கை இருக்கிறதே... அதன் மீது வாதாடத் தயார்; நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கண்காணிக்கிறதே... எங்கள் வசமுள்ள விவரங்களை அங்கே கொடுப்போம்; சி.பி.ஐ. விசாரிக்கிறதே... அதற்கு முழு ஒத்துழைப்பு தருவோம்' என்று ஆள்வோர் கூறுவது, அவர்கள் மீதான களங்கப் பார்வையை அகற்றிவிடாது!

எனவே, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வழிவிடுவது ஒன்றுதான், உலகமே உற்று நோக்கும் இந்த மாபெரும் முறைக்கேட்டுப் புகாரில் உண்மையான அக்னிப் பிரவேசமாக அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு