Published:Updated:

தலையங்கம் - வேதனை வேதங்கள்..!

தலையங்கம் - வேதனை வேதங்கள்..!

தலையங்கம் - வேதனை வேதங்கள்..!

ஜெய்ப்பூர் 'சிந்தனை அமர்வு' நிகழ்ச்சியில், 56 அம்சப் பிரகடனம் வெளியிட்டு உள்ளது ஆளும் காங்கிரஸ். அதில், பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக, மதச் சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க அறைகூவலாம் என்பது ஓர் அம்சம்; எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்களைக் கொன்றுபோட்ட பாகிஸ்தானியப் பிரிவினை சக்திகளுக்கு எதிராக பாரதப் பிரதமர் தன் வாயைத் திறப்பதற்கே எத்தனை நாள் ஆனது என்பதைத்தான் பார்த்தோமே!

 அனைத்து மட்டத்திலும் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் போராடுமாம்; 2ஜி உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த ஊழல்களை மக்கள் அதற்குள் மறந்திருப்பார்கள் என்று அசாத்திய நம்பிக்கை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கட்சிக்குள் உறவினர்களுக்குப் பதவிகளைப் பலர் வாங்கிக் குவிப்பது கவலையாக இருக்கிறதாம் காங்கிரஸுக்கு; கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தியை அதே மேடையில் அறிவித்தவர்கள், அன்னை சோனியாவிடம் அதற்கு அனுமதி கேட்கவில்லையோ?!

நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார ஏற்றம் உறுதி செய்யப்படும் என்று 'அக்கறை'யோடு ஓர் அறிவிப்பு; வறுமைக் கோடு அடையாளத்துக்கான வருமான வரம்பை மாற்றி அமைத்து... அதன் மூலம் பிச்சைக்காரர்களையும் நடுத்தர வர்க்கமாக உயர்த்திக் காட்டிய மோசடி மந்திரவாதிகளின் கைவசம், இதுபோன்ற இன்னும் பல மாயாஜாலத் திட்டங்கள் இருக்காதா என்ன!

இடைத்தரகர்களை ஒழிக்கப் பாடுபடுவோம் என்றும் கூசாமல் தீர்மானம்; இதன் செயல்திட்டத்தை நீரா ராடியா போன்ற 'லாபியிஸ்ட்'களிடமே கொடுத்தால் ஜோராக ஜமாய்த்துவிடலாம்!

அடுத்த தலைமுறைக்கு உயர்வு கொடுப்பதே தங்கள் லட்சியம் என்கிறது காங்கிரஸ். அவர்களின் சிந்தனையில் அடுத்த தலைமுறையாக அமர்ந்திருப்பது ராகுல் காந்தி ஒருவரே. தொலைநோக்குப் பார்வைகொண்டவர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் அவர்களின் தூரப் பார்வையில் தெரிவதோ,  அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே.

அதுசரி... சூடு சொரணை எல்லாம் பார்த்தால், சாத்தான்கள் வேதம் ஓத முடியுமா?