Published:Updated:

கும்கியே... துப்பாக்கியே... விஸ்வரூபமே..!

கே.கே.மகேஷ்ஓவியம் : கண்ணா

##~##

ருகிற 30-ம் தேதி அழகிரிக்கு 62-வது பிறந்த நாள். விழாக்களின் நகரான மதுரையில், மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஓர் 'அதிர்வை’ உண்டு பண்ணும் விழா என்றால் அது 'அனா’ பிறந்த நாள் விழாதான். அடிக்கொரு ஃப்ளெக்ஸ் போர்டு, தடுக்கி விழுந்தால் ஒரு வாழை மரம் என்று மதுரை வீதிகளின் அகலம் தற்காலிகமாக குறைக்கப்படும். விளம்பரம் என்ற பெயரில் சாலையோரச் சுவர்கள் எல்லாம் வண்ணமயமாக்கப்படும். நீர்மோர்ப் பந்தல் போல வீதி எல்லாம் நலத்திட்ட உதவிகள் நடக்கும். வயிறு முட்டப் பிரியாணி சாப்பிட்ட திருப்தியுடன், ரெண்டு கைகளும் கொள்ளாத அளவுக்கு எவர்சில்வர் பாத்திரங்களைச் சுமந்துகொண்டு திரிவார்கள் மக்கள்.  'எங்கே ஏறி எங்கே இறங்கினாலும் ஃப்ரீ’ என்று பஸ்கள் உலா வரும். முளைப்பாரி, பால்குடம் எனப் பக்தர்கள் புடைசூழ, அழகிரி 'சாமி’ வீதி உலாவும் (அண்ணனின் 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ சிலை.). மதுரை அணிகள் மட்டுமே பங்கு பெறும் 'அகில இந்திய அளவிலான’ கிரிக்கெட், கபடிப் போட்டிகள் நடத்தப்படும். ஆனால், இவை எல்லாம்  தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் சமயம் மட்டுமே நடக்கும் ஜபர்தஸ்துகள். இப்போது தி.மு.க. எதிர்க் கட்சி... அதுவும் கட்சிக்குள் அண்ணனுக்குக் கட்டம் சரியில்லை. ஆக, இந்த வருஷம் விழா களைகட்டுமா?  

 ''உண்மையில் இந்த வருஷம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொஞ்சம் மந்தமாதான் இருக்கு!' என்கிறார்கள். காரணம், அண்ணன் அணியில் இருந்து தம்பி அணிக்குத் தாவிய நிர்வாகிகளின் எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணாகிவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கும்கியே... துப்பாக்கியே... விஸ்வரூபமே..!

'ஏன் இவ்வளவு சுணக்கம்?’ என்று அழகிரியின் 'போர்ப் படைத் தளபதி’யான பி.எம்.மன்னனிடம் கேட்டோம். ''தம்பி, மதுரையில ஒரு சுவர் விடாம நாங்க தி.மு.க. விளம்பரங்களை வரைஞ்சிட்டதால, அ.தி.மு.க-காரனுக்கு அசிங்கமாப் போச்சு. ஆளும் கட்சியா இருந்துக்கிட்டு, அந்தம்மா பிறந்த நாளைக்கு விளம்பரம் எழுதலைன்னா, பதவி போயிருமேங் கிற பயத்துல, கட்சிக்காரங்களப் பூராவும் கூப்பிட்டுச் சத்தம் போட்டுஇருக்காரு நம்ம மங்குனி அமைச்சர் செல்லூர் ராஜு. எல்லாத்துக்கும் பணம் குடுத்து தி.மு.க-வை மிஞ்சிக்காட்டணும்னு சொல்லியிருக்காரு. ஆனா, உணர்வுப்பூர்வமா வேலை பார்க்கிறதுக்கும் காசுக்கு மாரடிக்கிறதுக்கும் வித்தியா சம் இருக்கும்ல. தி.மு.க-காரனோட போட்டி போட்டு ஜெயிக்க முடியாதுனு போலீஸைவெச்சுப் பயமுறுத்துறாங்க. அண்ணன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு இருக்கணும்னு சொன்னதால, சுவர் விளம்பரம், ஃப்ளெக்ஸ் வழங்க அனுமதி கேட்டு கோர்ட்டில் வழக்குப் போட்டோம். நமக்குச் சாதகமாத்தான் உத்தரவு வந்திருக்கு. அண்ணன் பிறந்த நாள் வழக்கம்போல, அமர்க்களமா நடக்கும். முந்தைய நாள் ராவோடு ராவா மதுரையையே கறுப்பு-சிவப்பா மாத்திருவோம். முடிஞ்சா தடுத்துப் பார்க்கட்டும்!'' என்றவரிடம் இந்த ஆண்டு ஏற்பாடுகளில் என்ன விசேஷம் என்று கேட்டேன்.

''பெருசா செய்யணும்னுதான் நினைக்கோம். ஆனா, ஒரு ரேடியா கட்டுறதுக்கே போலீஸ்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருக்கே. ஆனா, அதுக்காகச் சொணங்கிட முடியுமா? ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி பிளான் பண்ணியிருக்கோம். 30 ஆயிரம் பேருக்கு வேட்டி, 30 ஆயிரம் பேருக்கு சேலை. 20 ஆயிரம் பேருக்கு எமர்ஜென்ஸி லைட்டு, மேற்கொண்டு 10 ஆயிரம் பேருக்கு கொசு பேட் (சிரிக்கிறார்)... 90 ஆயிரம் ஆச்சா? மீதி 10 ஆயிரம் பேருக்கு தையல் மெஷின், ஊனமுற்றோர் வண்டி, இஸ்திரிப் பெட்டி, எவர்சில்வர் பாத்திரம் கொடுக்கிறோம். இது தவிர, வழக்கம்போல 15 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 உண்டு. இந்த விழா எல்லாம் மதுரைக்கு மத்தியில ராஜா முத்தையா மன்றத்துல நடக்குது, போன வருஷம் மாதிரி புறநகர்ல கிடையாது. அ.தி.மு.க-காரங்க சுதாரிக்கிறதுக்கு முன்னாடியே மன்றத்தை புக் பண்ணிட்டோம். விழாவுல அண்ணன், அண்ணி, துரை தயாநிதி உள்பட குடும்பத்தினர் எல்லாரும் கலந்துக்கிடுறாங்க. இப்ப மதுரை அமைதியா இருக்கலாம். கடைசி ரெண்டு நாள்ல பாருங்க நம்ம அதகளத்தை!' என்றார் சிரித்துக்கொண்டே.

உண்மைதான், கடந்த ஆண்டு போதி தர்மரே என்று போஸ்டர் போட்டவர்கள், இப்போது டிரெண்டுக்கு ஏற்றாற் போல, கும்கியே, துப்பாக்கியே, விஸ்வரூபமே, 'சி.எம். ஆஃப் மதுரை’ போன்ற வாசகங்களுடன் ஏராளமான போஸ்டர்களை அச்சுக்குக் கொடுத்துவிட்டார்களாம்.

பொதுவாக, அழகிரி முழு மனமகிழ்ச்சியோடு இருக்கிற தருணங்களில்தான் பிறந்த நாள் விழா பிரமாண்டமாக இருக்கும். ஆனால், மகன் மீதான வழக்கு, கட்சியில் கலைஞருடன் பிணக்கு என மன உளைச்சலில் இருப்பதால், பிறந்த நாள் விழாவில் அழகிரியே ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால், விழா சிறப்பாக நடக்கவில்லை என்றால், 'அழகிரி அவ்வளவுதான்’ என்று பேச்சு கிளம்பி விடுமே?