Published:Updated:

"விஜயகாந்தை ஆதரித்தது சரிதான்!"

ஜி.ஆர்.தடாலடிபாரதி தம்பிபடங்கள் : ஆ.முத்துக்குமார்

##~##

டுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து முதல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஜெயலலிதா. ''40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்'' என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பை அ.தி.மு.க. பேச்சாளர்களை முந்திக்கொண்டு வழி மொழிந்து இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் தா.பாண்டியன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கள், வரப்போகும் தேர்தலில் யாருடன் இணைவார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம்.

 ''ஜெயலலிதாவின் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை சி.பி.எம். எப்படிப் பார்க்கிறது?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை, கட்சியின் மத்தியக் குழுதான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், நாங்கள் இன்னும் அதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தோம் என்றபோதிலும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாகச் செயல்பட்டு வருகிறோம். இப்போது அவர்களின் தேர்தல் உத்தியை அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது நாங்களும் இதைப் பற்றி விவாதித்து அறிவிப்போம்.''

"விஜயகாந்தை ஆதரித்தது சரிதான்!"

''ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க-வின் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை வரவேற்று இருக்கிறாரே?''

''அது அவர்களின் தேர்தல் உத்தியாக இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது.''

'' 'தேர்தல் உத்தி’, 'கொள்கை வேறு... கூட்டணி வேறு’ என்றெல்லாம் சொல்கிறீர்களே? எனில், கூட்டணி என்பது கொள்கைகளைச் செயல்படுத்த இல்லையா? வெறும் சந்தர்ப்பவாதம்தானா?''

''மற்ற கட்சிகளைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் தொகுதி உடன்பாடு என்பது ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்தது. மேற்கு வங்காளத்திலும் திரிபுராவிலும் 'இடது முன்னணி’ இருக்கிறது. கேரளாவில் 'இடது ஜனநாயக முன்னணி’ இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் நாங்கள் அமைத்துக்கொண்டது அணி அல்ல. அது அந்த நேரத்து அரசியல் சூழலையும், எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதையும் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் நலனே அடிப்படை எனும்போது, அதை எப்படிச் சந்தர்ப்பவாதம் என்று சொல்ல முடியும்?''

''புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தே.மு.தி.க-வை ஆதரித்தீர்கள். இப்போது விஜயகாந்த், தி.மு.க. கூட்டணியை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறார். விஜயகாந்தை ஆதரித்தது தவறு என்று இப்போது நினைக்கிறீர்களா?''

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சி.பி.ஐ., தே.மு.தி.க. எல்லாம் ஒன்றாக இணைந்து போட்டியிட்டோம். பிறகு, அ.தி.மு.க. அரசின் சில கொள்கைகள் மக்க ளுக்கு எதிரானவையாக இருந்த தால், விமர்சித்து செயல்படத் துவங்கினோம். தே.மு.தி.க-வும் அப்படிப்பட்ட விஷயங்களை எதிர்த்தது. அப்போது இடைத் தேர்தல் வந்தது. அன்றுள்ள சூழலைக் கணக்கில்கொண்டு தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என முடிவு எடுத்து, தே.மு.தி.க-வை ஆதரித்தோம். அன்றைய சூழலில் அது சரியான முடிவுதான். அதற்காக வருத்தப்படத் தேவை இல்லை.''

''கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம்-மின் நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா?''

''ஜப்பான் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, கூடங் குளம் மக்களிடம் பெரிய அளவிலான அச்சம் உருவாகிவிட்டது. அதைப் போக்க ஒரு சுயேச்சையான நிபுணர் குழு ஆராய்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. அணு உலையே வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.''

''ஆனால், அந்த மக்கள் 'எங்களுக்குப் பயமாக இருக்கிறது. எப்படியேனும் எங்கள் அச்சத்தைப் போக்குங்கள்’ என்று கேட்கவில்லையே... 'அணு உலையே வேண்டாம்’ என்கிறார்களே?''

''நான் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத்தான் சொல்ல முடியும்.''

''ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்கும் இப்போதைக்குமான அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

''பதவியேற்று ஒன்றரை ஆண்டுக் காலத்தில் ஜெயலலிதா பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார். விலையில்லா அரிசித் திட்டம் உள்பட பல மக்கள் நலத் திட்டங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டு விஷயத்தில் தி.மு.க. மக்களுக்குத் துரோகம் செய்தது. ஆனால், அ.தி.மு.க. தனது எதிர்ப்பில் உறுதியாக இருந்தது. பயங்கவாதத் தடுப்புச் சட்டம், பொது விநியோக முறையில் மானிய விலை பொருட்களுக்குப் பதிலாக நேரடியாகப் பணத்தைத் தருவது போன்றவற்றை ஜெயலலிதா கடுமையாக எதிர்க்கிறார். இவற்றை நாங்கள் வரவேற்கிறோம்!''