Published:Updated:

மிஸ்டர் கழுகு: 30 வருஷம் பின்னோக்கி...!

மிஸ்டர் கழுகு: 30 வருஷம் பின்னோக்கி...!

பிரீமியம் ஸ்டோரி

ழுகாருக்குப் போன் போட்டோம். ''சலூனில் இருக்கிறேன், ட்ரிம்

##~##
பண்ணிட்டு வருகி​றேன்...'' என்று இணைப்பைத் துண்டித்தவர், ஒரு மணிநேரத்தில் ப்ரெஷ்ஷாக தரிசனம் கொடுத்தார்!

 அவர் உள்ளே நுழையும்போது, 'ஆறு மனமே ஆறு.... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு?’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, ''டைமிங் சாங்...'' என்றபடி சொல்ல ஆரம்பித்தார்.

''தமிழக பி.ஜே.பி. பிரமுகர் இல.கணேசனின் 66-வது பிறந்த நாளைக்கு வாழ்த்துச் சொல்ல அவரது வீட்டுக்கே முதல்வர் கருணாநிதி சென்றது, அரசியல் அரங்கில் பலத்த அதிர்ச்சியைக் கிளப்பி​யுள்ளது. முதல்வர் வரப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் இல.கணேசனே முதலில் நம்ப​வில்லை. 'வழக்கமாக போனில்தானே வாழ்த்துச் சொல்வார்’ என்றே நினைத்தார். 60 வயது மணி​விழாவுக்கோ 80 வயது பவளவிழாவுக்கோ போயிருந்தால் முக்கியமானதாக இருந்திருக்கும். ஆனால் 66-க்கு எல்லாம் கருணாநிதி வாழ்த்தப் போனதன் பின்னணி அரசியல்தான்!''

''அப்படி என்னவாம்?''

''ஸ்பெக்ட்ரத்தை வைத்து காங்கிரஸ் மட்டும்தான் குடைச்சலைக் கொடுக்குமா? கருணாநிதிக்குத் தெரி​

மிஸ்டர் கழுகு: 30 வருஷம் பின்னோக்கி...!

யாதா அந்தக் கலை? 'பி.ஜே.பி. தலைவர் வீட்டுக்கு கருணாநிதி போய்விட்டார்’ என்றதும் மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் அலைந்த அலைச்சல் இருக்​கிறதே... அதுதான் கருணாநிதி கிளப்ப நினைத்த சூட்சுமம்! 'காங்கிரஸைக் கைகழுவி, பி.ஜே.பி-யுடன் ஐக்கியமாகக் கருணாநிதி தயாராகி விட்டார்’ என்று ஒரு குரூப் பேச ஆரம்பித்தது. இல.கணேசன் வீட்டில் இருந்த கருணாநிதி, அங்கு இருந்தபடியே அத்வானிக்கு போன் செய்து பேசியதாகவும் ஒரு தகவல் றெக்கை கட்டியது. 'நான் எதற்கும் தயார்! காங்கிரஸ் கை கழுவ நினைத்தால் பாரதிய ஜனதா ஒன்றும் எனக்குப் பரம்பரை விரோதி அல்ல’ என்பதை டெல்லிக்குக் காட்டுவதற்குத்தான் இதைப் பயன்படுத்திக் கொண்டாராம் கருணாநிதி. அடுத்து...''

''என்ன இழுக்கிறீர்... மேற்கொண்டு சொல்லும்...'' என்றபடி சமோசாவை நீட்டினோம்.

ஒரு சமோசாவைக் கையில் எடுத்து சாப்பிட்டு முடித்த​வர், ''தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்து சிறை பிடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கைத் தூதரகம் முன்னால் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியதன் பின்னணியும் இதுமாதிரியான குடைச்சல் என்றே

மிஸ்டர் கழுகு: 30 வருஷம் பின்னோக்கி...!

காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறதாம். 106 மீனவர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததும், 'கருணாநிதி ஏன் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்? மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி, இலங்கைத் தூதரகம் மற்றும் இந்தியத் துறைமுகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியா?’ என்று உள்ளூரக் கோபப்பட்டார்களாம். ஆ.ராசா கைது தொடங்கி, 90 ஸீட்டுகள் பேரம் பேசுவது வரைக்குமான கோபத்துக்கு ரியாக்ஷனாகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்று நினைக்கிறதாம் சோனியா தரப்பு...''

''ஆ.ராசாவுக்கு எதிராக பிரதமர் பேட்டி அளித்த​தும் ஒரு முக்கியக் காரணமாக இருக்குமே?''

''புதன்கிழமை அன்று பத்திரிகையாளர்களுக்குப் பிரதமர் பேட்டி அளித்தார். அதற்கு முந்தைய நாள் இரவு சோனியா - பிரதமர் சந்திப்பு நடந்திருக்கிறது. பேட்டியில் முக்கியமான விஷயமே, 'ஸ்பெக்ட்ரம்தான் இருக்கும் என்பதால், என்ன வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்’ என்பது வரைக்கும் பிரதமருக்கு வகுப்பு எடுக்கப்பட்டதாம். 'ஆ.ராசாவின் முடிவு அனைத்தும் தன்னிச்சையானது. எனக்கு எதுவும் தெரியாது’ என்று பிரதமர் தீர்க்கமாகச் சொல்ல நினைத்ததன் பின்னணி​யாக ஒரு சம்பவத்தை டெல்லியில் சொல்கிறார்கள்.

விண்வெளித் துறையை முன்வைத்து வெளிவந்த எஸ்-பாண்ட் முறைகேடு தொடர்பான செய்திகளை மீடியாக்களுக்குக் கொடுத்ததன் பின்னணியில் தி.மு.க-வின் கை இருப்பதாக பிரதமருக்கு ஒரு சந்தேகமாம். 'பிரதமர் ஒன்றும் நேர்மையானவர் அல்ல’ என்பதை வெளிச்சத்துக்குக் காட்ட, இந்தத் தகவலைத் திரட்டி ஆங்கில நாளிதழ் ஒன்றின் கையில் ஒப்படைத்து, தன்னை அவமானப்படுத்தியதாக மன்மோகன் சிங் கோபத்தில் இருக்கிறாராம். பிரஸ்மீட்டில் தீர்க்கமான வார்த்தைகளைச் சொல்லி, '2ஜிக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை மட்டுமல்ல.... அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு​வராத​தன் மூலம் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்திவிட்டார். 'இப்படிப்பட்ட ஆ.ராசாவை நானே மந்திரி ஆக்கவில்லை, கருணாநிதிதான் அந்தக் காரி​யத்தைச் செய்தார்’ என்று சொன்​னதன் மூலம் 'மொத்தத்தில் காங்​கிரஸ் கையில் எந்தக் கறையும் இல்லை’ என்பதை மன்மோகன் சிங் ஆணியடித்தாற்போல சொல்லியிருக்கிறார்...''

''இது தி.மு.க. தரப்பைக் கொந்​தளிக்க வைத்திருக்குமே?''

''அதைப்பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதாகத் தெரிய​வில்லை. 'காங்கிரஸ் மீது கருணாநிதியால் கோபப்படவும் முடியாது. கழற்றிவிடவும் முடி​யாது’ என்று மத்திய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் வாய்நிறையச் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டதே இன்றைய யதார்த்தம். பா.ம.க-வின் முக்கியத் தலைவர் ஒருவர் கருணா​நிதியைச் சந்தித்தபோது தழுதழுத்தபடி இதையே கருணாநிதி சொன்னாராம்!''

மிஸ்டர் கழுகு: 30 வருஷம் பின்னோக்கி...!

''அவரது வார்த்தையிலேயே சொல்லும்!''

'' 'பா.ம.க-வுக்கு எத்தனை தொகுதிகள் தருவீர்கள்? நம்பர் சொன்னால் நாங்கள் திருப்தியாக இருப்போம்’ என்று அந்தத் தலைவர் கேட்க... 'பா.ம.க. எங்கக் கூட்டணியில்தான் இருக்கு! இதை தலையில் அடிச்சுக்​கூட சத்தியம் பண்ணத் தயாரா இருக்கேன். ஆனா, நம்பர் சொல்ற நிலைமையில் நான் இல்லைய்யா! என்னை 30 வருஷங்கள் பின்னோக்கிக் கொண்டுபோயிருச்சு காங்கிரஸ். 1980-ல் தி.மு.க-வும், காங்கிரஸும் தொகுதிகளை பாதிக்குப்பாதியா பிரிச்சுக்கிட்ட மாதிரியான நிலைமை​யில நான் உங்களுக்கு எந்த நம்பரைச் சொல்ல முடியும்?’ என்று கேட்டாராம் கருணாநிதி. இன்றைய நிலைக்கு பிரித்துக் கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் 70, பா.ம.க. 28, விடுதலைச் சிறுத்தைகள் 12 என்று வைத்துக்​கொண்டால் தி.மு.க.வுக்கு மிஞ்சி இருப்பது 124 தான். இதிலும் உதிரிகளுக்கு 10 தொகுதிகள் போய்விடும். 'மீண்டும் மைனாரிட்டி அரசாங்கத்தை அமைக்கவா இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்’ என்று கலங்கி இருக்கிறார் கருணாநிதி.

இன்னொரு பா.ம.க. பிரமுகர் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இருக்கிறார். '140 தொகுதியாவது நாங்க நின்னால்தான் மெஜாரிட்டி அரசாங்கத்தை அமைக்க முடியும். அதுக்கு குறைவாக நிற்கக் கூடாது என்று அனைத்து அமைச்சர்களும் தலைவரிடம் சொல்லி இருக்கிறோம்’ என்றாராம் ஸ்டாலின். ஆனால், அதற்குச் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.''

''கலைஞர் டி.வி-க்கு ரெய்டு  நடக்க இருப்பதாகக்  கேள்விப்பட்டோமே?''

''பணப் பரிமாற்றங்கள் குறித்து மும்பையில் கைதான ஷாகித் பால்வா நிறையத் தகவல்களைத் தந்துள்ளார். அதில் கலைஞர் டி.வி-யும் வருகிறது. கணக்கு வழக்குகளை வைத்து சரி பார்க்க நினைக்கிறதாம் சி.பி.ஐ. டெல்லியில் இருந்து இது தொடர்பான தாக்கீது வந்துள்ளது. கலைஞர் டி.வி-யின் பொறுப்பாளர் சரத்குமார் விரைவில் சி.பி.ஐ. முன் ஆஜராகலாம். கலைஞர் டி.வி. அலுவலகம் இருக்கும் இடம் தி.மு.க. தலைமைக் கழகம் இருக்கும் இடம். எனவே, அங்கே சி.பி.ஐ. நுழைந்தால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்று தலைமை நினைக்கிறதாம். இந்த நெருக்கடி தயாளு அம்மாள், கனிமொழி வரைக்கும் வரலாம்...''

''கடந்த புதன்கிழமை மதியம் கனிமொழி கைது பரபரக்க வைத்துவிட்டதே!''

''இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்றதற்காக கைதானார். 'கனிமொழி கைது’ என்று பரவிய செய்தி, 2ஜியில்தான் என்று பலரும் நினைத்தார்கள். உண்மை பலருக்கும் தெரியவர மாலை ஆனது. இந்தச் செய்தியை வைத்து 'நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்ட பாக்ஸ் நியூஸ் சுவாரஸ்யமானது.’ டெல்லியில் ஒரு பழக்கம் உண்டு. சில பெரிய மனிதர்களுக்கு ஜோசியம் பார்த்து, உங்களுக்கு சிறையில் களி சாப்பிட வேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லிவிட்டால் அதற்குப் பரிகாரமாக ஒரு காரியம் பார்ப்பார்கள். திகார் சிறை வாசலுக்கு மதியம் 12 மணிக்கு வந்து அந்த பெரிய மனிதர்கள் நிற்பார்கள். சிறை ஊழியர்கள் உள்ளே இருந்து களியைக் கொண்டுவந்து தருவார்கள். கைநிறைய அந்தக் களியை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு... சிறை ஊழியர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போவார்கள். அதைப்போலத்தான், தான் சிறைக்குப் போக இருக்கும் தோஷத்தை இப்படி ஆர்ப்பாட்டம் செய்து ஒரு நாள் சிறைவாசம் இருந்து கழிக்க நினைத்தார். எனவே, கனிமொழி நடத்தியது தோஷத்தை நிவர்த்தி செய்ய நடந்த ஆர்ப்பாட்டம்தான் என்று போகிறது அந்தப் பெட்டிச் செய்தி!'' - கழுகார் சொன்னதற்கு நாம் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை!

''டெல்லியில் சோனியாவை திடீரென்று சந்தித்திருக்​கிறார் அன்புமணி. 'கடந்த தேர்தலில் நீங்க பண்ணுன விஷயம் மட்டுமே எனக்கு வருத்தம். இந்த முறை நீங்க சேருவதில் எனக்கு சந்தோஷமே’ என்று சோனியா சொல்ல... கூட்டணி உறுதியான திருப்தி​யில் வியாழன் இரவே சென்னை திரும்பியிருக்கிறார் அன்புமணி. மறு​நாள் கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து பேரன் சுகந்தனின் திருமணப் பத்திரிகையை கொடுக்கும் சாக்கில், கூட்டணிக்கும் நிச்சயதார்த்தம் நடத்தி​விடுவாராம் ராமதாஸ்'' என்றபடி ஜூட் விட்டார் கழுகார்.

படம்: வி.செந்தில்குமார்

மிஸ்டர் கழுகு: 30 வருஷம் பின்னோக்கி...!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு