ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'அ.தி.மு.க - தி.மு.க இருவருமே நமக்கு எதிரிகள்!

பொங்கிய நிர்வாகிகள்... குழப்பத்தில் விஜயகாந்த்

##~##

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் தன்னுடைய அரசியல் பாதை எது என்பதை விஜயகாந்த் விளக்குவார் என்ற எதிர்பார்ப்புடன் வந்த நிர்வாகிகள் கொஞ்சம் குழம்பிய நிலையில்தான் ஊர் போய்ச் சேர்ந்துள்ளனர். கடந்த 25-ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபம் தே.மு.தி.க-வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத் துக்காக கட்சி நிர்வாகிகளால் நிறைந்து இருந்தது. தாரை, தப்பட்டை முழங்க, பூரண கும்ப மரியாதையோடு விஜயகாந்த் வந்து சேர்ந்தார். 

ஆரம்பத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் விஜயகாந்தைப் புகழ்ந்துவிட்டு அமர்ந்தனர். மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.ஆர்.பார்த்திபன் பேச்சில் ஏகத்துக்கும் அனல் பறந்தது. ''2011-ம் ஆண்டு நம்மிடம் இருந்த வேகம் 2012-ல் இல்லை. 2012-ம் ஆண்டில் தலைமை எத்தனை போராட்டங்களை அறிவித்தது? போராட்டங்களை அறிவிக்காமல் போனதுக்கு காரணம் தெரியவில்லை. 2013-ம் ஆண்டைத் தே.மு.தி.க-வின் போராட்ட ஆண்டாகவே கேப்டன் அறிவிக்க வேண்டும். வீல் சேரில் சுற்றி வரும் கருணாநிதியே அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வீறுகொண்டு போராட்டங்களை அறிவிக்கிறார். நம்முடைய

'அ.தி.மு.க - தி.மு.க இருவருமே நமக்கு எதிரிகள்!

தொண்டர்களுக்குப் போராட்ட குணம் இல்லை என்று நினைக்கிறீர்களா? நீங்கள் கண் அசைத்தால் உங்களுக்காக உயிரையும் கொடுக்கும் உண்மையான தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம். சிறை நிரப்பும் போராட்டம் அறி வியுங்கள். நம்முடையக் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் சிறையைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்த அம்மையார் ஆட்சியை நாம் அசைத்துப் பார்க்கமுடியும்'' என்று பார்த்திபன் பொங்கியதும், மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலர் அவரை உட்கார வைக்க முயற்சித்தனர். விஜயகாந்தோ, ''பார்த்திபன் பேசட்டும்.... விடுங்க'' என்று கிரீன் சிக்னல் காட்டி விட்டார். தொடர்ந்து பேசியவர், ''கடந்த தேர்தலில், 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் அந்த அம்மையார் இறுதியில் நம்மை அவமானப்படுத்துவார்’ என்று முன்பே  கேப்டன் கணித்துச் சொன்னார். நாம்தான் அவரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கச் சொன்​னோம். இன்று அவர் சொன்னது போலவே நடந்து விட்டது. அதுக்காக கேப்​டனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அங்கே போனவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். கேப்டன் பிடித்து வைத்ததால்தான் அவர்கள் பிள்ளையார். அவர் தூக்கி வீசினால் அது சாணி. அ.தி.மு.க- மட்டும் இல்லை. தி.மு.க-வும் நமக்கு எதிரிதான். இரண்டு பேருமே நம்மை வளர விட மாட்டார்கள். அடுத்து நாம் கூட்டணி என்று முடிவெடுத்தால், அது நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். கருணாநிதியை நம்பிப் போன வைகோவின் நிலை நாளை நமக்கும் ஏற்ப டாது என்பது என்ன உறுதி?

'40-ம் நமதே’ என்று கூப்பாடு போடுகிறார்களே, அது என்ன கோயம்பேடு மார்கெட்லயா விற்குது? இதைவிடக் கொடுமை அடுத்த பிரதமர் அந்த அம்மாவாம். தமிழ்நாட்டைக் கெடுத்தது பத்தாதா? இந்தியாவையும் கொடுக்கணுமா? இலங்கையில் எங்கோ ஒரு மூலையில் இருந்தபடி ஒட்டு மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் விடு​தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அதுபோல கோயம்பேட்டில் இருந்து கொண்டு ஒட்டு மொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கப் போவது நம் கேப்டன் பிரபாகரன்' என்று கர்ஜிக்க, கூட்டத்தில் பலத்த கைதட்டல்.

'அ.தி.மு.க - தி.மு.க இருவருமே நமக்கு எதிரிகள்!

பிரேமலதா பேசும்போது, ''இளைஞர்கள்தான் நம் இயக்கத்தின் பலம். கேப்டனின் ஓயாத உழைப்​பாலும், விடாமுயற்சியாலும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந் துள்ளோம். இப்போது நம் கேப்டன் மீது பொய் வழக்குகளைப் போட்டு மிரட்டிப் பார்க்கிறார் அந்த வழக்கு ராணி. பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு அந்த அம்மையார் அரசியலிலேயே இருக்க மாட்டார். அரசியலை விட்டு நிரந்தரமாக ஒதுங்கி விடுவார். அப்போது தமிழக அரசியல் வெற்றிடமாகத்தான் இருக்கும். அன்று நம் கேப்டன்தான் முதல்வர். நான் சொல்வது நடக்கிறதா இல்லையா என்று பொறுத் திருந்து பாருங்கள்.

நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் நம்மை அவர்கள் ஒடுக்கியே வைக்கிறார்கள். நம்முடைய தலைமையில் எப்போது கூட்டணி என்ற நிலை வரு கிறதோ அப்போதுதான் தே.மு.தி.க- தலைநிமிர்ந்து நிற்கும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை'' என்று முழங்கினார்.

தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பிறகு, மைக் பிடித் தார் விஜயகாந்த். ''கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கட்சிப் பணிதான் இப்போது முக்கியம். தே.மு.தி.க. கொடி பறக்காத ஊர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குங்கள். கரை வேட்டியைக் கட்டிக் கொண்டால் மட்டும் போதாது. கட்சிப் பணியும் செய்ய வேண்டும். மதுவைக் கொண்டு வந்து இளைஞர்களையும், மக்களையும் இந்த அரசு கெடுத்து வருகிறது. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் எனக்கு ஜெயலலிதா சவால் விட்டார். இப்போது நான் அவருக்குச் சவால் விடுகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40- தொகுதிகளிலும் மக்களும், தே.மு.தி.க- தொண்டர்களும் உங்களை ஓடஓட விரட்டப் போகிறார்கள்.

மக்கள் புரட்சி வெடித்தால்தான் நாடு திருந்தும். அந்தப் புரட்சி நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெடிக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2016-ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலை நாம் பலி கொடுக்க முடியாது. அதை மனதில் வைத்துதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கவேண்டும். இன்று சட்டமன்றத்தில் இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பிரசாரத்துக்கு வரச்சொல்லி என்னிடம் கெஞ்சினர். அப்படி என்னை அழைத்துப் போனதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அரிவாள் வைத்து வெற்றி பெற்றது என்றால், அ.தி.மு.க. அதிகாரிகளை வைத்து ஜெயித்தது. நாடா ளுமன்றத் தேர்தலில் அது நடக்காது.

தி.மு.க-வை நான் இப்போதுத் தாக்கிப் பேசாமல் இருக்கலாம். தி.மு.க- ஆட்சியில் இருந்தபோது அவர்களையும் திட்டி இருக்கிறேன். யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்க் கட்சியாக இருப்போம். தேர்தலுக்கு  முன் உங்களைக் கேட்டுதான் கூட் டணியை முடிவு செய்வேன்'' என்று முடித்தார்.

கூட்டம் முடிந்ததும், கிளம்பும் சமயத்தில் 'கட்சியின் பொருளாளராக இனி ஏ.ஆர்.இளங்கோவன் செயல் படுவார்’ என்று அறிவித்தார் விஜய காந்த். இது, கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ''பொருளாளர் பதவி 'மாஃபா’ பாண்டிய​ராஜனுக்குக் கொடுக்​கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இளங்கோவன் பெயரை அறிவித்து விட்டார். தென் மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் யாருக்கும் கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கவில்லை. அதோடு, குறிப்பிட்ட நாயுடு இனத்தவருக்கு மட்டுமே கட்சியில் முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. கொள்கைப் பரப்புச் செயலாளர், இளைஞர் அணி, தொழிற்சங்கம் என முக்கியப் பொறுப்புக்கள் அத்தனையிலும் அந்த  சமூகத்தினர்தான் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இப்போது, இளங்கோவனுக்குப் பொருளாளர் பதவியைக் கொடுத்து மறுபடியும் விஜயகாந்த், தனது  சாதிப் பாசத்தைக் காட்டி இருக்கிறார். 'சாதி, மதம், மொழி, இனம் இதற்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன்’ என்று கேப்டன் பேசுவது எல் லாம் வெளி வேஷமா?'' என்று வேதனையோடு கேட்கின்றனர் தே.மு.தி.க-வில் உள்ள சில நிர்வாகிகள்.

நியாயமான கேள்விதானே?

- தி.கோபிவிஜய்

படங்கள்: பொன்.காசிராஜன்