Published:Updated:

பாலியல் புகார்: மத்திய அமைச்சரை நீக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம்!

Vikatan Correspondent
பாலியல் புகார்: மத்திய அமைச்சரை நீக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம்!
பாலியல் புகார்: மத்திய அமைச்சரை நீக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம்!
பாலியல் புகார்: மத்திய அமைச்சரை நீக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம்!

புதுடெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத்திய ரசாயனத்துறை அமைச்சரை நீக்கக்கோரி, டெல்லியில் பா.ஜ.க. அலுவலகம் முன், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.பி.யும், மத்திய ரசாயனத்துறை இணையமைச்சருமான நிகால் சந்த் மீது கடந்த 2011ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்க நிகால் சந்த் மற்றும் 17 பேருக்கு அம்மாநில கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர் நிகால் சந்த் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், நிகால் சந்த் மீது நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்பையும் மீறியும் அவர்கள் பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ''பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிறகு ஏன்? பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சரை தண்டிக்க மறுக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்' என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழும்பினர்.

இதற்கிடையே, 'எனக்கு நீதியை பெற்றுத்தாருங்கள்' என மத்திய அமைச்சர் நிகால் சந்த்தால் பாதிக்கப்பட்ட பெண்ணும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.