ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

காங்கிரஸ் கைவசம் மூன்று திட்டங்கள்!

தெலுங்கானா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி எப்போது?

##~##

மீண்டும், தனி தெலுங்கானா போராட்டம் வெடித்துள்ளது.  

 ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்களுக்கு இணையாக, தனி தெலுங்கானாவைப் பிரிக்கக் கூடாது என்று ராயல சீமா, சீம ஆந்திரா பகுதிகளிலும் போராட்டம் வலுத் துள்ளது. இந்தப் போராட்டங்களால் ஆந்திர மாநிலமே நிலைகுலைந்து கிடக்கிறது.

முக்கிய சில அரசியல் கட்சிகளின் ஆதரவு தெலுங்கானாவுக்கு இருக்கும் நிலையில், அந்தந்தக் கட்சிகளைச் சார்ந்த சில எம்.எல்.ஏ-க்களும்

எம்.பி- க்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர். ராயல சீமா, சீம ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், 'தனி தெலுங்கானா பிரிக்கக் கூடாது’ என்று போர்க்கொடித் தூக்கி உள்ளனர். இவர்களுக்கு தலைமை தாங்கி இருப்பவர் காங்கிரஸ் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஷைலஜா நாத். 'ஒருங்கிணைந்த ஆந்திரமே தொடர வேண்டும்’ என்று விசாகப்பட்டினத்தில் மாணவர்கள் போராட்டமும் மக்களிடையே கையெழுத்து அறிக்கையும் தயார் செய் கின்றனர். மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் அனந்தபுரம் தொகுதி எம்.எல்.ஏ. குருமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கைவசம் மூன்று திட்டங்கள்!

'தனி தெலுங்கானா பிரிக்க வேண்டும்’ என்று ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் தலை மையில் உஸ்மானிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கோதண்டராமன் தீவிரமாக போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களும் மற்றக் கட்சிகளைச் சேர்ந்த தெலுங் கானா ஆதரவாளர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

காங்கிரஸ் கைவசம் மூன்று திட்டங்கள்!

இதுகுறித்து அந்த மாநில காங்கிரஸ் புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ''டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முக்கியக் கட்சிகள் அனைத்தும் தனி தெலுங்கானா பிரிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றன. எனவே, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி, மக்கள் ஆதரவு இருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது; ராயல சீமா, சீம ஆந்திரா பகுதிகளில் அதிக மக்கள் ஆதரவுகொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு ஏற்பட்டு இருக்கிறது.  காங்கிரஸின் தெலுங்கானா பகுதி எம்.பி-க்கள் மூலம் எப்படியாவது சந்திரசேகர ராவிடம் பேசி இந்தக் கூட்டணிக்கு சம்மதம் வாங்கி விடலாம். ஆனால், காங்கிரஸ் அரசால் வழக்கு போடப்பட்டு சிறையில் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேச மூன்று மத்திய அமைச்சர்களை அனுப்பியது. 'வழக்குகளை வாபஸ் பெற்று, உங்களை வெளியே கொண்டு வருகிறோம். தெலுங்கானாவைப் பிரித்து ராயல சீமா பகுதிக்கு முதலமைச்சர் ஆக்குகிறோம்’ என்று ஜெகனிடம் கூறி இருக்கிறார்கள். 'ஒரு வருடம் சிறையில் கஷ்டப்பட்டு இருக்கிறேன். இன்னும் சில தினங்களில் எனக்கு பெயில் கிடைத்து விடும். உங்கள் ஆதரவு தேவையே இல்லை. சில அரசியல் கட்சிகளும் என்னை நம்பி இருக்கின்றன. யாருக்கும் துரோகம் செய்ய முடியாது’ என்று காட்டமாகச் சொல்லி விட்டார்.

காங்கிரஸ் கைவசம் மூன்று திட்டங்கள்!

இதனால், குழப்ப நிலையில் தவிக்கிறது காங்கிரஸ். அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்து ஜனவரி 28-ம் தேதி முடிவை அறிவிப்பதாக உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்திருந்தார். இப்போது முடிவை காலவரையின்றி தள்ளிவைத்து இருக்கிறார்.   காங்கிரஸ் தலைமை இப்போது மூன்று முடிவுகளை வைத்திருக்கிறது. ஒன்று... தனி தெலுங்கானாவைப் பிரித்து தனித்தனி கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது. இரண்டு... ராயல சீமாவை தனி மாநிலமாகவும், தெலுங்கானாவைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்வது. மூன்று... இரண்டு மாநிலங்காகப் பிரிக்காமல், தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்காக ஒரு பெரிய நிதியை ஒதுக்குவது. இந்த மூன்று முடிவுகளில் எதாவது ஒன்றுதான் அறிவிக்கப்படும்.  

தெலுங்கானா பிரச்னைக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வையுங்கள்!

- கவிமணி

போராட்டம் ஏன்?

 அரசியல்வாதிகளும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந் தவர்களும்தான் 'தனி தெலுங்கானா பிரிக்கக் கூடாது’ என்று போராடுபவர்களில் முன்னிலையில் இருப்பவர்கள். அதற்குக் காரணம், இவர்களுடைய முதலீடு அனைத்தும் தெலுங்கானா பகுதியில் இருக்கிற ஹைதராபாத்தில்தான் இருக்கிறது. தனி மாநிலமாகப் பிரித்தால், இவர்களுடைய முதலீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே, தனி மாநிலமாக பிரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தெலுங்கானா பகுதியில்தான் அதிக கனிம வளங்கள் இருக்கிறது. இருப்பினும் அந்தப் பகுதி பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. முக்கிய நகராமான ஹைதராபாத் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் தனி தெலுங்கானா அரசியல்வாதிகள். இதுவே தனி தெலுங்கானா போராட்டம் வெடிப்பதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.