ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்!

மிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்!

மிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்!
##~##

ழுகார் வந்ததும் தனது ஐ போனில் உள்ள சில போஸ்டர் காட்சிகளை நமக்குக் காட்ட ஆரம்பித்தார். ''சென்னையைச் சுற்றிச் சுற்றி வந்தேன். அழகிரியின் முகத்தைப் போட்டு போஸ் டர்கள் ஒட்டி இருந்தனர். ஜனவரி 30-ம் தேதி அவரது பிறந்த நாள் என்பதால் 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்ற டைப்பில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அழகிரி படம் போட்ட போஸ்டர்களில் அர்த்தம் பொதிந்த வாசகங்கள் இருந்தன. அதைத் திரும்பத் திரும்பப் படிக்கும்​போது, கருணாநிதிக்கே சவால் விடும் வசனங்கள் இருப்பதை உணர முடிந்தது. 'தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினைத்தான் வழிமொழிவேன்’ என்று சொன்னதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிக் கொட்டுகின்றன அந்த போஸ்டர்கள்.''

 ''சொல்லும்... சொல்லும்!''

''இந்தப் போஸ்டர்களில் அழகிரி படம் மட்டுமே இருக்கிறது. கருணாநிதி படத் தைக் காணவில்லை.''

''அவர் படத்தைப் போட்டு போஸ்டர் அடித்தால் சிக்கல் இன்னும் அதிகமாகும் என்று நினைத்து இருக்கலாம். 'கண்ணகியின் சிலம்பும் மனோகரனின் விலங்கும் விழுந்ததா? வீழ்த்தி​யதா?’ என்று கேட்கிறது ஒரு போஸ்டர். கண்ணகியின் கதையை வைத்து 'பூம்புகார்’ படத்தைக் கருணாநிதி எடுத்தார்

மிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்!

என்பது அனைவருக்கும் தெரியும். 'மனோகரா’ படம் கருணாநிதியின் வசனத் துக்காகவே புகழ்பெற்ற படம். 'கண்ணகியின் காலில் இருந்த சிலம்பை விற்கப்போன காரணத்தால் கள்வன் என்று கைதான கோவலன், கொலை செய்யப்பட்டான். சிலம்பின் காரணமாக கண்ணகி வீழ்ந்தாள். ஆனால், அதே சிலம்பை வைத்து மன்னனை வீழ்த்தினாள் என்பது காப்பியத்தின் கதை. மனோகரனைச் சிறைப்பிடித்து விலங்கிட்டு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இறுதியில், மனோகரன்தானே வென்றான்? கண்ணகியும் மனோ​கரனும் முதலில் விழுந்தனர். இறுதியில் வீழ்த்தினர். அதைப்போலத்தான் இன்று அழகிரி விழுந்ததாகத் தெரியலாம். ஆனால், இறுதியில் வீழ்த்தப்போவது அவர்தான்’ என்பதைக் கருணா நிதிக்கும் ஸ்டாலினுக்கும் சொல்வதைப்போல இந்த வசனங்கள் உள்ளதாம்.''

''அடுத்த போஸ்டர்?''

''நிறையப் போஸ்டர்கள். அதில் சிலவற்றை மட்டுமே சொல்கிறேன்... 'இங்கே பரமசிவனும் இல்லை! நாங்கள் கருடனும் இல்லை! நடப்பது ராம நாடகமே!’ என்கிறது இன்னோர் போஸ்டர். 'கருணாநிதியை பரமசிவனாகவும் ஸ்டாலினை பாம்பாகவும் அழகிரியை கருடனாகவும் இந்த போஸ்டர் வர்ணிப்பதாகச் சொல்கிறார்கள். 'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே... கருடன் சொன்னது’ என்ற திரையிசைப் பாடலை திரும்பத் திரும்பச் சொல்லிப் பாரும். முழு அர்த்தம் தெரியும்.''

''புரிகிறது... புரிகிறது!''

''ஸ்டாலினை அவரது இடத்தில் அப்படியே வைத்துக்​கொண்டு விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது இந்த போஸ்டரின் சாராம்சம் என்கிறார்கள். கோபாலபுரம், அண்ணா அறிவால​யத்தைச் சுற்றிச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்​படுகின்றன. 'அதுக்கும் மேல லே! அதுக்கும் மேல லே! அதுக்கும் மேல லே! அண்ணன் எங்க உசுரு லே!’ என்கிறது இன்னொரு போஸ்டர். 'ஸ்டாலின் தலைவராக ஆகட்டும். அழகிரி அதுக்​கும் மேல’ என்று அர்த்தம் சொல்கிறது இந்தப் போஸ்டர். இவை அனைத்துமே கருணாநிதியையும் ஸ்டா​லினையும் குறிவைத்துத் தாக்கும் நோக்கத்துடன் ஒட்டப்பட்டுள்ளன. இதுவரை மதுரையில் மட்டுமே மையம் கொண்டிருந்த அழகிரி போஸ்டர்கள், முதன் முதலாக சென்னையை மையம் கொண்டதற்கும் இதுதான் காரணம். ஜனவரி 30-ம் தேதி பிறந்த நாள். அதற்கு சில நாட்கள் முன்னதாக சென்னையில் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தகவல் கருணா நிதியின் கவனத்துக்கும் வந்து அவரைக் கொந்தளிக்க வைத்ததாகவும் சொல்கிறார்கள். அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஒரு திருமணத்தில் யாருக்கோ உணர்த்துவது மாதிரி கொந்தளித்துக் கொட்டி விட்டார் கருணாநிதி.''

''கல்யாண வீட்டில் நடந்ததைச் சொல்லும்!''

''திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்திக்கும் காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்க்​கதிரவனுக்கும் திருமணம். திருமணத்தை கருணா நிதிதான் நடத்தி வைக்க வேண்டும் என்று இரண்டு குடும்பத்துக்கும் ஆசை. கனிமொழி மூலமாக தேதி கேட்டதாகச் சொல்கிறார்கள். கருணாநிதியிடம் அவர் கேட்டாரா... அல்லது, 'ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள்... அப்பாவை நான் அழைத்து வருகிறேன்’ என்று இவர் தைரியம் சொன்​னாரா எனத் தெரியவில்லை. பத்திரிகை கொடுக்க வந்தபோதுதான் கருணாநிதிக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. கோபப்பட்டுள்ளார். ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. இரண்டு வீட்டா​ரும் சேர்ந்து இன்னொரு அஸ்திரத்தை ஏவினர். மாப்பிள்ளை, பெண் இருவரையுமே அழைத்துவந்து கருணாநிதியைச் சந்திக்க வைத்தனர். ஒருவழியாக, கருணாநிதியும் அண்ணா அறிவாலயம் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். சும்மா இல்லாமல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 'திருமணம் என் றால் தட்டாமல் சென்று நடத்தி வைக்கக் கூடியவர் நம்முடைய தலைவர்’ என்று குஷிப்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்போக, கொந்தளித்து விட் டார் கருணாநிதி. 'என்னைத் தூக்கி வைப்பதற்காக இப்படிச் சொல்கிறார். தூக்கி வையுங்கள். ஆனால் தூக்கி குப்பையில் போட்டு விடாதீர்கள். எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும்; எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அவர்கள் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிப்பவன்தான் கழகத்தின் தொண்டன். இதை மீறுபவர்களை நான் மன் னிப்பது இல்லை. எனக்கு அவர்களைவிட, என் னைவிட கழகம் பெரிது. கொள்கை பெரிது’ என்று முழங்கித் தீர்த்து விட்டார். 'அழகிரி மற்றும் அவரது ஆட்களுக்கு எதிரான கருணாநிதியின் குரல் இது. தேதி கேட்காமல் அழைப்பில் பெயர் போட்டதைவிட, வேறு ஏதோ உள் விஷயங்களை வைத்துத்தான் கருணாநிதி இப்படிப் பேசி இருக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள். இந்த இதழ், வாசகர்கள் கையில் இருக்கும்போது மதுரையில் உட்கார்ந்து தொண்டர்கள் சந்திப்பை அழகிரி தொடங்கி இருப்பார். யார் வாழ்த்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை கணிக்க முடியும்'' என்று சொல்லிவிட்டு அடுத்த மேட்டருக்குத் தாவினார் கழுகார்.

''மதுரையைச் சேர்ந்த பாரம்பரிய தி.மு.க. வி.ஐ.பி-யின் சகோதரிக்கு பெரியகுளத்தில் ஒரு சொத்துப் பிரச்னை. அந்தச் சொத்தை விற்பதற்காக இன்னொரு நபரிடம் அக்ரிமென்ட் போட்டாராம் சகோதரி. குறுக்கே வந்த வி.ஐ.பி-யின் மகன், 'இந்தச் சொத்தில் எங்களுக்கும் பங்கு இருக்கு’ என்று பிரச்னை செய்தாராம். அதையும் மீறி சொத்தை விற்க முயற்சிக்கிறார்கள் என்றதும், மதுரை தி.மு.க. முக்கியஸ்தரிடம் போய் முறையிட்டாராம் வி.ஐ.பி-யின் மகன். உடனே, மதுரையில் இருந்து கிளம்பிய படை ஒன்று, அந்தச் சொத்தை வாங்க அக்ரிமென்ட் போட்டிருந்த நபரை 'அன்பாக’ அதட்டிவிட்டு வந்ததாம். விஷயம் தெரிந்து கொந் தளித்த வி.ஐ.பி-யின் சகோதரி, 'இப்படி எல்லாம் பிரச்னை செய்தால் நான் முதலமைச்சரைச் சந்தித்து முறையிடுவேன்’ என்று பதில் மிரட்டல் விடுத்து இருக்கிறாராம்.''

''ஆட்சி மாறிய பிறகும் அடங்கவில்லை​யாக்கும்!''

''தென் மாவட்டத்தில் அண்மையில் மூன்றெழுத்து ஷாப்பிங் மால் ஒன்று திறக்கப்​பட்டது. காங்கிரஸ் வி.ஐ.பி- மகனின் நிழல் சொத்தான இந்த ஷாப்பிங் மாலில் மூன்று சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று இந்த தியேட்டர்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டதாம் அரசு. கவர்னர் அலுவலக வட்டாரத்தில் இருந்து பிரஷர் கொடுத்தும் காரியம் நடக்கவில்லை. டெல்லியில் இருந்து ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி விடலாம் என்று டெல்லிக்குப் படை எடுத்தாராம் வி.ஐ.பி-யின் மகன். 'இதையெல்லாம் எடுத்துக்கிட்டு இங்கே வராதீங்க. அங்கேயே பர்மிஷன் வாங்கப் பாருங்க’ என்று சொல்லி அனுப்பி விட்டாராம் உஷார் அப்பா.''

''அப்பாக்கள் உஷாராக இருந்தாலே மகன்கள் ஆட்டம் குறையுமே!''

மிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்!

''சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் வீரபாண்டி ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃப்ளெக்ஸ் வைக்கப்பட்டு இருந்தது. அதேவிழாவில், டி.எம்.செல்வகணபதியும் கலந்து கொண்டாராம். ஆனால், அவரது பெயரை கடைசியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்தப் போஸ்டர் விவகாரம் ஸ்டாலின் கவனத்துக்குப் போனதாம். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷை விசாரணைக்கு அழைத்து இருக்கிறார் ஸ்டாலின். 'புரட்டோகால்படி யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமோ, அவங்களுக்குக் கொடுங்க. உங்க விருப்பு வெறுப்பை எல்லாம் கட்சியில் காட்டினால், சும்மா இருக்க மாட்டேன்’ என்று டென்ஷனோடு சொன்​னாராம். அதற்கு ராஜேஷ், 'நான் சரியாதாங்க எழுதிக் கொடுத்தேன். வீரபாண்டி ராஜாவோட ஆட்கள்தான் மாத்தினாங்க. நான் சொன்னா அவங்க யாரும் கேட்கிறதே இல்லை’ என்று புலம்பினாராம். 'நான் விசாரிக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.

ஜனவரி 26-ம் தேதி வீரபாண்டி ஆறுமுகத்தின் பிறந்த நாள். ஆறுமுகத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போன ராஜேஷ், பூலாவரியில் உள்ள அவரது வீட்டுக்கும் போனாராம். அங்கே வீரபாண்டி ராஜாவுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் சிலர், 'ஏண்டா... அண்ணனைப் பத்தியே புகார் சொல்ற அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துடுச்சா’ என்று கோபத்தோடு அவரது கையைப் பிடித்து முறுக்கினார்களாம். அங்கிருந்து தப்பித்தால் போதும் என வந்து விட்டாராம் ராஜேஷ். இந்த விவகாரம் ஸ்டாலின் கவனத்துக்கும் போய் இருக்கிறது. இதற்கிடையில், அழகிரியின் பிறந்த நாளுக்கு வீரபாண்டி ராஜா தரப்பில் இருந்து வாழ்த்துச் சொல்லப்போனதாகவும் தகவல் போக, ஏகத்துக்கும் டென்ஷனாகி விட்டாராம் ஸ்டாலின். 'வீரபாண்டியார் இருந்தபோதும் பிரச்னை கொடுத்தாங்க. இப்பவும் எதுக்கு இப் படித் தொல்லை கொடுக்குறாங்க. ராஜாவை அமைதியா இருக்கச் சொல்லுங்க’ என்று வீரபாண்டி குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் மூலமாகச் சொல்லி அனுப்பினாராம் ஸ்டாலின்.

இதற்கு இடையில் ஆறுமுகத்தின் பிறந்த நாளுக்கு, அவரது இளைய மகன் பிரபு கொடுத்த விளம்பரம் ஸ்டாலினை யோசிக்க வைத்து இருக்கிறதாம். அந்த விளம்பரத்தில்... கருணாநிதி, ஸ்டாலின், ஆறுமுகம் ஆகியோரது படம் மட்டுமே இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை தளபதிக்கு நன்றி சொல்லி இருக்கிறாராம் பிரபு. தனக்கு ஆதரவாக இருக்கும் பிரபுவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கலாம் என்பதுதான் ஸ்டாலினின் எண்ணம். வீரபாண்டியார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு பொறுப்பு கொடுத்தால் போதும். அது பிரபுவுக்கே கொடுத்து விட்டால் எதிர்காலத்தில் தனக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நினைக்கிறாராம். கூடிய சீக்கிரமே அது நடக்கும் என்கிறது தி.மு.க. வட்டாரம்.''

''கட்சி வளர்ப்பதைவிட கோஷ்டி வளர்ப்புத்​தான் அதிகமாக இருக்கிறது.''

''விழுப்புரம் கதையைச் சொல்கிறேன், கேளும். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்​டத்தை முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செய லாளருமான பொன்முடி தலைமை வகித்து நடத்தி இருக்கிறார். அப்போது மாவட்ட முக் கியஸ்​தர் ஒருவர், 'என்னுடைய பையனுக்கே இன்னமும் உறுப்பினர் கார்டு வரலை’ என்று புகார் வாசித்தாராம். உடனே எகிறிய எக்ஸ், 'நிர் வாகிகளை மட்டும்தானே வரச்சொன்னேன்... கண்டவங்களும் வந்திருக்காங்க’ என்று சொல்ல... இன்னொரு நிர்வாகி வெடுக்கென்று வெளியேறி​னாராம். 'கட்சியின் நகரச் செயலாளர் ஆளும் கட்சிக்குத் தாவி ஒன்றரை வருஷமாச்சு. இன்ன​மும் நகரச் செயலாளர் போட வக்கில்ல. அதுக்குள்ள என்னத்துக்கு நிர்வாகிகள் கூட்டம்?’ என்று சொன்னபடியே வெளியே போனாராம். ஆடிப்போய் அமைதியாய் ஆகிவிட்டாராம் எக்ஸ். 'ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த மாதிரி இருக்கிற ஆட்களை தளபதி ஒழுங்கா கவனிச்சாலே போதும்’ என்று ஆலோசனையும் சொல்கிறார்கள் கறுப்பு - சிவப்புக் கட்சியில்!'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!

படங்கள்: க.தனசேகரன், வீ.நாகமணி, ஆ.முத்துகுமார்

 வந்தார் ஸ்ரீலேகா!

மிஸ்டர் கழுகு: அழகிரி ஆட்களின் போஸ்டர் சவால்!

ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு தொடங்க லஞ்சம் கைமாறிய விவகாரத்தில், அந்தக் கல்லூரி நிர்வாகத்தின் இயக்குனர் ஸ்ரீலேகா (பங்காரு அடிகளாரின் மருமகள்) ஜனவரி 28-ம் தேதி சென்னை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். சுமார் நூற்றுக்கணக்கான கேள்விகளுடன் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அதில் பாதி கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிவிட்டாராம். மீதி கேள்விகளுக்கு அடுத்தநாள் பதில் சொல்வதாக கூறிவிட்டாராம். இதுபற்றி, ஸ்ரீலேகா தரப்பில் விசாரித்தோம். ''அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினரான முருகேசன், இரண்டு முறை ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். எல்லாவற்றையும் ஆதாரத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொல்லிவிட்டோம்'' என்றனர். 'சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஸ்ரீலேகா சொன்ன இந்த தகவல்கள் உண்மைதானா?’ என்று, டாக்டர்கள் குணசீலன் ராஜன், முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடக்குமாம்.

இதற்கிடையில், அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் மஜும்தாரால் பாதிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் பலரும், சி.பி.ஐ-க்கு புகார் அனுப்பி இருக்கிறார்களாம். கொல்கத்தாவில் உள்ள மஜும்தாருக்கு, சென்னை சி.பி.ஐ. தரப்பில் இருந்து சம்மன் அனுப்பியதாகவும் சொல்கிறார்கள். சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அவர் வரும்போது கேட்க வேண்டிய 211 கேள்விகளுடன் தயாராக இருக்கிறதாம் விசாரணை டீம்.