Published:Updated:

7 தமிழர் விடுதலையில் தமிழக அரசு இரட்டை வேடம்: பா.ம.க. கண்டனம்!

Vikatan Correspondent
7 தமிழர் விடுதலையில் தமிழக அரசு இரட்டை வேடம்: பா.ம.க. கண்டனம்!
7 தமிழர் விடுதலையில் தமிழக அரசு இரட்டை வேடம்: பா.ம.க. கண்டனம்!
7 தமிழர் விடுதலையில் தமிழக அரசு இரட்டை வேடம்: பா.ம.க. கண்டனம்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 தமிழர்கள் விடுதலையில் தமிழக அரசின் இரட்டை வேடம் போடுவதாக பா.ம.க. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பா.ம.க. தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ''ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை  உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தும் அதன்படி செயல்படாமல் அரசியல் லாபம் தேடும் நோக்குடன் இந்த பிரச்னையை கையாண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரின் விடுதலையை அ.தி.மு.க. அரசு சிக்கலாக்கியது. இந்த 7 பேரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், 7 தமிழர்களின் விடுதலையில் ஆர்வம் கொண்டிருப்பதாக தேர்தலுக்கு முன் நாடகமாடிய தமிழக அரசு, இப்போது தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில் நளினியையும், ரவிச்சந்திரனையும் பிணையில் விடுதலை செய்ய உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அ.தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்தை கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக சிறை விடுப்பில் விடுவிக்கும்படியும் பா.ம.க. செயற்குழு வலியுறுத்துகிறது.

இலங்கையின் தெற்கு மாநிலத்தில் உள்ள அளுத்கம பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடுமையான வன்முறையை பொதுபல சேனா என்ற சிங்கள அமைப்பு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.  பேரினவாத வெறியுடன் சிங்களர்களால் நடத்தப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைச் சிறப்பு செயற்குழு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருந்து வெற்றிக்கு துணை போன தேர்தல் ஆணையத்திற்குக் கண்டனம், முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் முட்டுக்கட்டை போடும் கேரள அரசுக்கு கண்டனம்,  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலங்கை போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும்.

தமிழ் கட்டாயப் பாட சட்டத்தை உறுதியாக செயல்படுத்த வேண்டும் பா.ம.க.வின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை வரும் 25 ஆம் தேதி கொண்டாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.