Published:Updated:

நாடற்றவர்களின் கனவு!

விகடன் விமர்சனக்குழு
நாடற்றவர்களின் கனவு!
நாடற்றவர்களின் கனவு!
நாடற்றவர்களின் கனவு!

கனவுக்கும் வாழ்வுக்குமான இடைவெளியில் தொலைந்து போனவர்கள் அகதிகள். மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள இந்திய துணைக் கண்டத்தின் கடல்களை,  ஏதோ ஒரு அகதிப் படகு இந்த நேரத்தில் கடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் அந்தப் படகு தஞ்சம் தேடிச் செல்லும் கரையை சென்றடையுமா அல்லது கடலிலேயே அவர்களின் கனவுகள் கரைந்து போகுமா என்பதுதான் விடைத் தெரியாத கடல் போன்ற மர்மம். கரை சேர்ந்தாலும், கடலிலேயே மடிந்தாலும் துயரம் மட்டுமே இன்றைய தேதியில் அகதிகளின் நிலையாக உள்ளது.

ஏனென்றால் இப்போது பெரும்பாலான நாடுகள் அகதிகளை பெருமளவில் ஏற்றுக் கொள்வது இல்லை. வடிகட்டி சிலரை ஏற்றுக் கொள்ளும் நாடுகள், மற்றவர்களை எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்பி விடுகின்றன. போர், பஞ்சம், இன, மத முரண்பாடுகள் காரணமாக சொந்த நாட்டில் வாழ முடியாமல் போனவர்களையே அகதிகள் அல்லது நாடற்றவர்கள் என்கிறது ஐ.நா. சாசனம்.

நாடற்றவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துச் செல்கிறது. உலகம் முழுக்க  தொடர்ந்து

நாடற்றவர்களின் கனவு!

நடக்கும் யுத்தங்கள் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனை தாண்டி விட்டதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவிக்கின்றது. இந்த உலகம் கண்ட மிகப்பெரிய போரான இரண்டாம் உலகப் போர் காலத்தில் இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கையை விட இன்றைய நவீன உலகில் அகதிகளின் எண்ணிக்கை அதிகம்.

சொந்த நாடுகளை விட்டு வெளியேறி அந்நிய நாடொன்றில் புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை 17 மில்லியன். சொந்த நாடுகளுக்குள்ளேயே அகதிகளாக முகாம்களில் வாழும் மக்களின் எண்ணிக்கையோ 33 மில்லியன் என்கிறது அந்த ஆய்வு. சிரியா, ஆப்ரிக்க குடியரசு, தெற்கு சூடான் போன்ற நாடுகளின் நடைபெறும் யுத்தம், அதிக அளவு அகதிகள் உருவாக காரணம் ஆகின்றன.

இந்த யுத்தங்கள், ஆப்ரிக்க நாடுகளின் எண்ணெய் வளங்களுக்கான யுத்தங்கள். இதே யுத்தங்கள்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் விரிவுபடுத்தப்பட்டு இன்று வரை அந்த போர்கள் மூர்க்கமாக தொடர்கின்றன. எண்ணெய் வள நாடுகள் மீது ஏகாதிபத்திய நாடுகள் நடத்தும் இந்த போரின் அவலமான சாட்சிகள்தான் இந்த அகதிகள்.

நாடற்றவர்களின் கனவு!

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான கனிம வளங்களை தங்கு தடையின்றி இன்று எடுக்க முடிகிறது. அதுதான் மாவோயிஸ்டுகள் என்னும் வடிவத்தில் சிவப்புத் தாழ்வாரமாக விரிந்து உள்நாட்டு யுத்தம் என்ற வடிவத்தைக் கொடுக்கிறது. உலகெங்கிலும் நடைபெறும் யுத்தங்களோடு ஒப்பிடும்போது இது சாதாரணமான விஷயம்.

ஆனால் கனிமங்களுக்கான யுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் தொடங்கினால், இப்போது இந்தியாவில் இப்போது இருக்கும் 7 வகையான அகதிகளோடு ஏராளமான அகதிகள் உருவாகி விடுவார்கள். யுத்தங்களின் தொடர்ச்சியாய் அகதிகள் உருவாகும்போது அகதிகளின் உரிமைகளைப் பேணும் சட்ட வரைவுகள் எதுவும் இந்தியாவில் இல்லை. அகதிகளுக்கான ஐநா சாசனத்தில் இந்தியா கையெழுத்து இடவும் இல்லை. அதனால்தான் திறந்த வெளி கழிப்பிடங்களில் இருப்பதுபோல இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

தமிழகத்தில் 25 மாவட்டங்களில், 110 முகாம்களில் 66,000 அகதிகள் பதிந்தும் பதியாமலும் உள்ளனர். முறையான பிறப்புச் சான்றிதழ் உட்பட எதுவுமே இவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசு கொடுக்கும் அரிசியையோ, சீனியையோ வாங்கிவிட்டு வாழ்ந்து போன பழைய அகதி தலைமுறை அல்ல இது. இங்கு கல்வி கற்று ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்ளும் ஆர்வத்தோடும் இருக்கிறார்கள் இன்றைய அகதிகளின் இளம் தலைமுறையினர். ஆனால் அவர்களுக்கான உரிமைகள் எதுவும் கிடைப்பதில்லை என்பதால்தான் இங்கிருந்து பெருமளவில் தப்பி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள்.

அப்படி செல்கிறவர்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பும்போது அவர்கள் இலங்கைக்குச் செல்ல விரும்பாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். லெனின் பிள்ளையில் தொடங்கி பல தற்கொலைகள் இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. கனவுக்கும் வாழ்வுக்குமான இடைவெளி என்பது ஓர் அகதியைப் பொருத்தவரை கடலாகவோ, பாலைவனமாகவோ இருக்கிறது.

-டி.அருள் எழிலன்