Published:Updated:

பாலியல் குற்றங்கள், கொலைகளை தடுக்க நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!

பாலியல் குற்றங்கள், கொலைகளை தடுக்க நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!
பாலியல் குற்றங்கள், கொலைகளை தடுக்க நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!
பாலியல் குற்றங்கள், கொலைகளை தடுக்க நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளைகளை தடுக்க பாரபட்சம் இல்லாத நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த வாரம் பொள்ளாச்சியில் பள்ளி விடுதியில் தங்கிப்படித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தூத்துக்குடியில் மாணவி புனிதா பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கோரக்கொலை. அரூர் தாதராவலசை கிராமத்தில் பழங்குடி இனப்பெண் மேனகா பாலியல் படுகொலை. திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.

விருத்தாசலம் அருகே சுகுனா, சிதம்பரத்தில் 21 வயதான இளம்பெண் சந்தியா, தூத்துக்குடியில் மாரியம்மாள், நன்னிலம் அருகே விமலா, கோயம்பேட்டில் இளம் பெண் மலர் என்ற நீண்ட வரிசையில் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே 23 ஆம் தேதி இரவு வெற்றிலை கொடிக்காலுக்குள் ப்ளஸ் 2 படித்து முடித்த தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவி வினிதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புது நகரைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சரமாரி கத்திக்குத்து. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜோகி, அவரது தாய் அன்னம்மாள், ஜோகியின் மனைவி கிரிஜா ஆகியோர் கடப்பாரையால் அடித்துப் படுகொலை.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 73 வயது மூதாட்டியிடம் பட்டப்பகலில் தங்கச்சங்கிலி பறிப்பு. காஞ்சிபுரம் மாவட்டம், பூஞ்சேரியில் டீக்கடை நடத்தி வரும் ஆசாத் என்பவரின் கடையில் 98 ஆயிரம் ரூபாய் திருட்டு. 24 ஆம் தேதி மயிலாடுதுறை அருகே சோழகரநல்லூரில் அடகு கடையின் கதவை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை. இடிந்தகரை கிராமத்தில் மட்டும் 25 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் வீடுகள் சேதம், பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு. சேலையூர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சவுந்திரராஜன் வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை, 75 ஆயிரம் மதிப்புள்ள 1,200 அமெரிக்க டாலர்கள் திருட்டு.

பட்டாபிராமை அடுத்த அன்னம்மேடு பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் இனமொழியனுக்கு கத்திக் குத்து. கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் நாகாத்தம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் குத்து விளக்கு திருட்டு. திருவேற்காட்டில் தந்தை செல்வராஜை கட்டையால் அடித்து கொலை செய்தமகன். ஆலந்தூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 4 சவரன் கொள்ளை. சென்னை பொழிச்சலூரில் ஜெயப்பிரகாஷ்க்கு கத்திக் குத்து என்று வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

கடந்த கால தி.மு.க. ஆட்சியின்போது, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக எத்தனை முறை அறிக்கை விடுத்தார். அவரைப் போல நான் அறிக்கை விடவோ, அவர் பதவி விலக வேண்டுமென்று கூறவோ தயாராக இல்லை. ஆனால், தமிழகத்திலே சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன் வர வேண்டும்.

பாலியல் குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் நடைபெறுவதை தவிர்க்க ஆட்சியினர் பாரபட்சம் இல்லாத வகையிலும், எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதிலேயே நாட்டம் செலுத்தாமலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.