Published:Updated:

பா.ஜனதா தலைவராகிறார் அமித்ஷா: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பா.ஜனதா தலைவராகிறார் அமித்ஷா: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பா.ஜனதா தலைவராகிறார் அமித்ஷா: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பா.ஜனதா தலைவராகிறார் அமித்ஷா: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் அமித்ஷா, பா.ஜனதா தலைவர் பதவியில் நியமிக்கப்பட உள்ளார். அநேகமாக நாளை மறுதினம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதையடுத்து புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. இதில் அமித்ஷா பெயர் முதலில் இடம்பெற்றிருந்தாலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர்களான இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஜெகத் பிரகாஷ் நத்தா, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பி. முரளிதர் ராவ் மற்றும் ராஜஸ்தான் மாநில தலைவர் ஓம் மதூர் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் இருந்தன.

இருப்பினும் பா.ஜனதா தலைவராக தனது மனநிலைக்கு ஏற்ப செயல்படும் ஒருவர் இருந்தால், ஆட்சியை நடத்தி செல்வதில் கருத்துவேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏதும் எழாமல் சுமூகமாக இருக்கும் என பிரதமர் மோடி கருதினார். அவர் தனது இந்த விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு கட்சிக்கு அதிக எம்.பி.க்கள் பலத்தை பெற்று தந்ததில் அமித்ஷாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜனதாவில் ஒருதரப்பு தலைவர்கள் கருதுகிறார்கள். பா.ஜனதா பொது செயலாளராக உள்ள அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநில மேலிட பார்வையாளராக உள்ளார். இவர் தேர்தல் மேற்பார்வையாளராக இருந்து, உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜனதா 71 தொகுதிகளை பெற்றது.

இந்நிலையில் அமித்ஷாவை பா.ஜனதா தலைவராக நியமிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளதால், அமித்ஷா, பா.ஜனதா தலைவர் பதவியில் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. அநேகமாக நாளை மறுதினம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
அதே சமயம் அமித்ஷா மீது போலி என்கவுண்டர் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.