Published:Updated:

கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை!

கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை!
கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை!
கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை!

கோவை: கோவை மாவட்ட  கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, 'உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சி மூலம் தமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்த விஜயகாந்த் முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சி கோவை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனையுடன் இன்று தொடங்கியது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜயகாந்த் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு பின்னர் சூலூர் அருகே ராவுத்தர் பிரிவில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அங்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கட்சி பெற்ற ஓட்டு விவரம், பகுதி வாரியாக கட்சி வளர்ச்சி விவரங்கள் குறித்து விஜயகாந்த் கேட்டறிந்தார்.

பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சிறப்பான வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் வருகிற ஆகஸ்டு 25 ஆம் தேதி விஜயகாந்த்தின் பிறந்த நாளில் ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, செப்டம்பர் 14–ல் இயக்கம் தொடங்கிய நாளில் ஒவ்வொரு இடத்திலும் கழக தொண்டர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்குவது, கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, தமிழக மக்களின் அடிப்படை பிரச்னை மற்றும் பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்துவது, தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் மேலான கிளைகளுக்கு நிர்வாகிகள் சென்று ஆய்வு செய்து தலைமை கழகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டதாக கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

இன்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இன்று காலை முதலே நிர்வாகிகளும், தொண்டர்களும் ராவுத்தர் தோட்டத்துக்கு வந்து குவிந்தனர்.அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டுமே தோட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விஜயகாந்த்தை சந்திக்க அனுமதி கிடைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட வாரியாக அங்குள்ள ஹாலில் அமர வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து விஜயகாந்த் முதலில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தொண்டர்களுடன் விரிவாக ஆலோசித்தார். ஆலோசனைக்கு முன்னதாக தொண்டர்கள் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் அறிவித்தார். மறுநிமிடமே தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதன் பின்னர் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2016 தேர்தலின் போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

நாளை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடனும், 28 ஆம் தேதி நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.