Published:Updated:

நிலம் ஒதுக்கப்பட்டதில் ஊழல்: சோனியா, ராகுலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

நிலம் ஒதுக்கப்பட்டதில் ஊழல்: சோனியா, ராகுலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
நிலம் ஒதுக்கப்பட்டதில் ஊழல்: சோனியா, ராகுலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
நிலம் ஒதுக்கப்பட்டதில் ஊழல்: சோனியா, ராகுலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

புதுடெல்லி: பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலம் தவறாக பயன்படுத்தபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்பட 4 பேர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

'நேஷனல் ஹெரால்ட்' மற்றும் 'குவாமி அவாஷ்' ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்திற்கு டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரால்டு ஹவுஸ் என்ற இடமும்,  மிகவும் விலை மதிப்பு மிக்க நிலமும் உள்ளது.

இந்நிலையில் சோனியாவும்,ராகுலும் சேர்ந்து தொடங்கிய 'யெங் இந்தியன்’ என்ற நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன் பெரும்பாலான பங்குகளை வாங்கியதாகவும்,இதன் மூலம் டெல்லியில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெரால்டு ஹவுஸ் இடத்தை,தங்களது 'யெங் இந்தியன்’ நிறுவனம் மூலம் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் அபகரித்துள்ளதாகவும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்ட விரோதமானது என்றும் சாமி கூறியிருந்தார்.

ஆனால், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த "நேஷனல் ஹெரால்டு' செய்தித்தாள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அந்தப் பத்திரிகை இப்போது வெளிவரவில்லை.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் என்பதற்காக சட்டத்திற்கு உள்பட்டு அசோசியேட்டடு நிறுவனத்துக்கு கடன் கொடுக்கப்பட்டது. இதில் வர்த்தக நோக்கம் எதுவும் இல்லை” என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  ஊடக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியும் சுப்ரமணியன் சுவாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா உள்ளிட்டோருக்கு எதிராக பூர்வாங்க ஆதாரம் உள்ளதாக கூறி, இவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.  

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, சோனியா உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றார்.