Published:Updated:

மோடியின் ஒருமாத கால ஆட்சி: சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?

 மோடியின் ஒருமாத கால ஆட்சி:  சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?
மோடியின் ஒருமாத கால ஆட்சி: சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில், அவரது ஆரம்ப நடவடிக்கைகள் பாராட்டுக்களை பெற்று தந்த போதிலும், ஆட்சியில் அமர்ந்து ஒருமாதம் முடிவதற்குள்ளாகவே ரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட சாமான்ய மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்துள்ளன.

 மோடியின் ஒருமாத கால ஆட்சி:  சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து கடந்த மே 26 ஆம் தேதியன்று நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த ஒரு மாத காலத்தில் தமது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் மோடி, அவர்களது ஆடம்பர செலவுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

பதவியேற்ற உடனேயே, மத்திய அமைச்சர்கள் 100 நாட்களில் செய்யவிருக்கும் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறிய மோடி, தங்களின் உறவினர்கள் யாரையும் உதவியாளராக வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கும் விதமாக்க டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுமாறும், மக்களின் புதிய ஐடியாக்களை பெற வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மோடியும் அதேப்போன்று டுவிட்டரில் தீவிரம் காட்டியதன் பலனாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை பின்னுக்குத்தள்ளிவிட்டு, உலக அளவில் அதிக ஃபாலோவர்களை கொண்டவர்கள் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க கூடாது என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் பிரதமர் அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டை பெற்றுத்தந்த போதிலும், ரயில் கட்டண உயர்வு, மத்திய அரசின் தொடர்பு மொழியாக சமூக வலைத்தளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு, சர்க்கரை விலை உயர்வு போன்றவை கடும் விமர்சனங்களையும் மோடி அரசு எதிர்கொள்ள வைத்தது.

பதவியேற்ற சில தினங்களிலேயே நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளதாகவும், இதனால்

 மோடியின் ஒருமாத கால ஆட்சி:  சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?

அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்றும், இந்த கசப்பு மருந்தை இந்தியாவின் எதிர்கால நலன் கருதி மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மோடி கூறியிருந்தார்.

அதன்படியே பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6 சதவீதத்திற்கும் மேலும் உயர்த்தப்பட்டது. மேலும் சர்க்கரைக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் அதன் விலையும் உயர்ந்தது. அதேப்போன்று டீசலின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதம் ரூ. 5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரயில் கட்டண உயர்வுக்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக சிலிண்டர் விலை உயர்வு முடிவை அமல்படுத்துவது  3 மாதங்களுக்கு தள்ளிபோடப்பட்டுள்ளது. இவையெல்லாம் முந்தைய காங்கிரஸ் அரசின் பாதையிலேயே மோடி அரசு நடக்கிறது என்ற விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

இதுஒருபுறமிருக்க இணையதளம், ஃபேஸ்புக், டுவிட்டர், யு டியூப், மின்னஞ்சல்  உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்திற்குப்பதிலாக இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கைக்கு, பல மாநிலங்களிலும், குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. தமிழக பா.ஜனதா கூட்டணி கட்சிகளே கூட இதனை எதிர்க்க,  இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என பின்னர் ஜகா வாங்கியது மோடி அரசு.

 மோடியின் ஒருமாத கால ஆட்சி:  சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?

மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியினால், நிச்சயமாக அப்படி ஒரு நல்ல தீர்வு பிறக்கும் என்றுதான் தமிழக மீனவர்களும், மக்களும் நம்பினார்கள். ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காணப்பட்ட அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. பிடித்துச் செல்லப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படுவதும், அவர்கள் தமிழகம் வந்து சேருவதற்குள் அடுத்த மீனவர்கள் குழுவை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வதும் தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கிறது.

இதுதவிர இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு தீர்வு காண, குறைந்தபட்சம் ராஜபக்சேவை முன்பு அளித்த வாக்குறுதியின்படி 13 வது சட்டதிருத்தத்தையாவது அமல்படுத்த இலங்கை அரசை மோடி அரசு நிர்ப்பந்திக்கும் என எதிர்பார்த்தால், 13 வது சட்டதிருத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆணவமாக அறிவித்த பின்னரும் கூட இந்தியா தரப்பிலிருந்து எவ்வித ரியாக்‌ஷனும் இல்லை.

அதைவிட கடந்த காலங்களில் தமிழர்களை குறிவைத்து சிங்கள இனவாத மற்றும் புத்த குழுக்கள் நடத்திய தாக்குதல்களை போன்றே, அங்குள்ள இஸ்லாமியர்களும் அண்மையில் தாக்கப்பட்டபோது, உலக நாடுகள் பல அதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மோடி அரசோ அது குறித்து மூச்சுகூட விடவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மீது பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் உள்ளுக்குள் இருக்கும் குரோதமே இவ்வாறு மவுனம் சாதிக்க வைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனிடயே பட்டதாரி கூட இல்லாத ஸ்மிருதி இரானி, மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி இரானியின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சை

 மோடியின் ஒருமாத கால ஆட்சி:  சாதனையின் தொடக்கமா...வேதனையின் தொடக்கமா?

ஒருபுறம் எழுந்து ஓய்வதற்குள்,   உரத்துறை அமைச்சரான நிகல் சந்த் என்ற இன்னொரு அமைச்சர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மோடிக்கு இதுவும் இன்னொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இவைகள் நடப்பு பிரச்னைகளாக உருவெடுத்தது என்றால், கடந்த ஒரு மாத காலத்தில் ஈராக் உள்நாட்டு போரால் எழுந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பணவீக்கம், விலைவாசி உயர்வு, வழக்கத்திற்கு குறைவான அளவில் பொழியும் பருவமழை, 'எல்நினோ' வால் இந்த ஆண்டு பருவமழை குறைந்து வறட்சி ஏற்படும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கை போன்றவை மோடி அரசு முன்னர் கடும் சவால்களாக காத்திருக்கின்றன.

 இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் தனது முதல்பட்ஜெட்டை வருகிற ஜூலை மாத தொடக்கத்தில் தாக்கல் செய்ய உள்ளது மோடி அரசு. ரயில்வே பட்ஜெட்டை பொறுத்தவரையில் ஏற்கனவே கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்டதால், கூடுதல் கட்டணத்திற்கேற்ப பயணிகளுக்கு தரமான சேவைகளை அளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவது,  போக்குவரத்து அதிகமாக உள்ள பாதைகளில் கூடுதல் ரயில்களை இயக்குவது போன்ற அறிவிப்புகளாவது இடம்பெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொது பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வருமான வரிவிலக்கு வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரதானமாக உள்ளது. இது தவிர ரயில்வே கட்டணத்தை உயர்த்தியது போன்று பொது பட்ஜெட்டிலும் கூடுதல் வரிவிதிப்பு, மானியக் குறைப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அறிவிப்புகள், திட்டங்கள் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு, அதிகமான கசப்பு மருந்தை கொடுத்துவிட்டால், அது மக்களின் கசப்பை மோடி எதிர்கொள்ள வழிவகுத்துவிடும்.

இந்நிலையில் பருவமழை குறைந்து வறட்சி ஏற்பட்டால், உணவு தானிய பஞ்சம், குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், எதிர்கால இந்தியாவை வழிநடத்தி செல்வதற்கும்  எத்தகைய திட்டங்களை முன்வைக்க உள்ளது என்பதை பொறுத்துதான், மோடியின் ஆட்சி சாதனையின் தொடக்கமா அல்லது வேதனையின் தொடக்கமா? என்பது தெரியவரும்.
                                                                                                                                                                    - பா. முகிலன்