Published:Updated:

'அம்மா வெற்றிலை-பாக்கு கடை' : கருணாநிதி கிண்டல்!

Vikatan Correspondent
'அம்மா வெற்றிலை-பாக்கு கடை' : கருணாநிதி கிண்டல்!
'அம்மா வெற்றிலை-பாக்கு கடை' : கருணாநிதி கிண்டல்!
'அம்மா வெற்றிலை-பாக்கு கடை' : கருணாநிதி கிண்டல்!

சென்னை: தமிழகத்தில் 100 இடங்களில் “அம்மா வெற்றிலை-பாக்கு கடை”களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம் என கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?

கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த பிரச்னையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்கு சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது” என்று பதில் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதலமைச்சருக்கு தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்திரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் ஒரு திருநங்கை முதன் முதலாக பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றிருக்கிறாரே?

கிரேஸ் பானு என்ற திருநங்கை; பிளஸ்-2 படித்த நேரத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்டபோதிலும், பல சிரமங்களைக் கடந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியில் படிக்க தேர்வு பெற்றிருக்கிறார். பாராட்டுதற்குரிய செய்தி-கிரேஸ் பானுவுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.

குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை விலைக்கு வாங்காமல், அதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரத்தை வாங்குவதாக சொல்லப்படுகிறதே?

தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.3.10க்கு வழங்கத்தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழக மின்சார வாரியம், காற்றாலை மின்சாரத்தை வாங்க மறுத்து, எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.14 என்ற விலைக்கு வாங்குவதாக புகார் கூறப்படுகிறது.

கடந்த 23 நாட்களில் மட்டும் இவ்வாறு எரிவாயு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் 126 கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆனால் மின்வாரியத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் சரியாக இல்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
அ.தி.மு.க. அரசு சார்பில் பத்து இடங்களில் “அம்மா” மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே?

அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் “அம்மா வெற்றிலை-பாக்கு கடை”களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.