Published:Updated:

காலணி: வரலாறும்...வர்த்தகமும்!

காலணி: வரலாறும்...வர்த்தகமும்!
காலணி: வரலாறும்...வர்த்தகமும்!
காலணி: வரலாறும்...வர்த்தகமும்!

செருப்பு என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் அதற்குப் பின்னுள்ள வரலாறும், வலியும், அரசியலும், வர்த்தகத்தையும் புரிந்து கொண்டால் அது காலில் அணிந்துகொள்கிற வெறும் செருப்பு இல்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். பாதங்களைக் காப்பது மட்டுமே செருப்பின் வேலை என்று சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. அது ஆளுமையின் அடையாளம், அரசியலில் எதிர்ப்பு, உலக அளவில் மிகப் பெரிய வர்த்தகம் என விரிந்து கொண்டிருக்கிறது.

செருப்பின் வரலாறு எப்போதிலிருந்து தொடங்குகிறது என்பதற்குத் தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்துள்ளது. ஆரம்பக் கால மக்கள் பெரும்பாலும் துணி அல்லது மிருகத்தின் தோலை காலில் சுற்றிக்கொண்டு அதை இறுக்கமாக் கட்டித்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்பு பல்வேறு சூழல்கள், தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் சந்தித்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது.

எகிப்தியர்கள் கி.மு. 3700க்கும் முன்னரே செருப்புகளை அணிந்திருக்கின்றனர் என்கிறது வரலாறு. 2010ஆம் ஆண்டில் ஓர் அகழ்வாராய்ச்சியில் 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன செருப்பை அர்மேனியக் குகையில் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதைபோலவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களிடமும், கிரேக்கர்களிடமும், ரோமானியர்களிடமும் செருப்பணிந்ததற்கான அடையாள சிற்பங்களும், தொல்லியல் சான்றுகளும் உள்ளன.

சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மரம், துணியால் ஆன செருப்புகளைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும், இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்பே அங்கிருந்த பூர்வக் குடிமக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும் காலணிகளை அணிந்திருந்தனர் என்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டங்களில் காலணி ஒரு அழகு அணியாகவும், அந்தஸ்தாகவும் இருந்திருக்கிறது.

காலணி: வரலாறும்...வர்த்தகமும்!

தவிர, காலணிகள் என்பது பாதுகாப்பு என்பதையும் தாண்டி சமூக அந்தஸ்து என்கிற வடிவம் அடைந்தபோது, அதை எல்லாரும் பயன்படுத்தக்கூடாது என்கிற தடையும் எழுந்துள்ளது. அதற்கு எதிராக உலகம் முழுவதும் பல போராட்டங்களும் நடந்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு காலணி கொண்டிருக்கும் சந்தை பல பரிசோதனை முயற்சிகளுக்கும் இறங்கியது. காலை முழுவதுமாக மூடிய காலணிகளில் நடப்பதற்கு, ஓடுவதற்கு, நடனம் ஆடுவதற்கு என ஒவ்வொரு தேவைக்கும் உற்பத்தி செய்யத்தொடங்கியது சந்தை. குழந்தைகள் விருப்பத்துக்கு ஏற்ப ஒலி எழுப்பும் செருப்பு, பொம்மை காலணி, பெண்களுக்குப் பிடித்த வகையிலான ஹீல்ஸ் செருப்புகள் என பல ஆயிரம் செருப்பு மாடல்கள் வந்துவிட்டன.

காலணி: வரலாறும்...வர்த்தகமும்!

தவிர, சர்வதேச அளவில் ரிபோக் மற்றும் நைக் நிறுவனங்கள் பெருமளவு சந்தையைக் கையில் வைத்திருக்கிறது. 1980ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் தடகள விளையாட்டு காலணி சந்தையில் நைக் 50 சதவிகிதத்தை வைத்திருந்தது. இன்று நைக் நிறுவனம் உலகம் முழுவதும் 700 கடைகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. தவிர அமெரிக்காவுக்கு வெளியே 45 நாடுகளில் கிளைகளை வைத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2015ல் காலணிகள் துறையின் சந்தை மதிப்பு 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டது. குறிப்பாக உள்நாட்டில் விற்பனையாகும் காலணிகளில் பெரிய நகரங்களில் மட்டும் 55 சதவிகிதம் காலணிகள் விற்பனை ஆகின்றன. தவிர, மொத்த காலணிகள் விற்பனையில் ஆண்களுக்கான காலணி 55 சதவிகிதமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான காலணி 15 மற்றும் 30 சதவிகிதமும் என்கிற அளவில் உள்ளது.

2013-14ம் நிதியாண்டில் கணக்கிடும்போது இந்தியாவின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதி 35,748 கோடி. 2012-13ல் இது 27,288 கோடியாக இருந்தது. தோல் பொருட்களால் ஆன காலணி ஏற்றுமதி 32.03 சதவிகிதம் அதிகரித்து 9,216 கோடியிலிருந்து, 12,168 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதுபோல, காலணிகளுக்கான உதிரி தோல் பாகங்கள் ஏற்றுமதி 43.01 சதவிகிதம் அதிகரித்து 1,337 கோடியிலிருந்து 1,913 கோடியாக உயர்ந்துள்ளது. தோல் சாரா இதர வகைக் காலணிகளின் ஏற்றுமதி 77.91 சதவிகிதம் அதிகரித்து 691 கோடியிலிருந்து 1,230 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் காலணிகள் மட்டும் 42.83 சதவிகிதமாக முதலிடத்தில் உள்ளது.

காலணி: வரலாறும்...வர்த்தகமும்!

காலணி உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தோனேஷியா, சீனா, தைவான், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேஷியா போன்ற நாடுகள்தான் முன்னணியில் உள்ளன. ஆனால் இந்த தொழிற்சாலைகள் யாவும் அவர்களது சொந்த பிராண்டுகளுக்காக உழைக்கவில்லை. எங்கிருந்தோ யாரோ ஒருவர் கொடுக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. அதாவது இங்கு தயாரிக்கப்படும் காலணிகள் அந்தந்த நாடுகளில் உற்பத்தி சார்ந்தது அல்ல. இதுபோன்ற தொழிற்சாலைகளிலிருந்துதான் சர்வதேச சந்தை கொண்டுள்ள காலணிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன்.

காலணிகள் தயாரிப்பில் 70 சதவிகிதம் முறைசாரா தொழில் துறையினர்தான் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் மட்டும் 18 லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என்பதும் முக்கியமானது.

தேவைக்கு ஏற்ப, பருவ நிலைக்கு ஏற்ப பயன்படுத்த தொடங்கிய காலணிகள் இன்று தேசங்கள் கடந்து மிகப் பெரிய வர்த்தக மதிப்பை கொண்டிருக்கிறது. அதன் வர்த்தக எல்லை விரிந்துகொண்டே இருப்பதும் சுவாரஸ்மானது. சாதாரணமாகக் கடந்து செல்லும் காலணியில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஒரு காலணியை தேர்ந்தெடுக்கும் முன் ஒரு நிமிடம் அதன் வரலாற்றையும் வர்த்தகத்தையும் யோசிப்போம். நமது காலுக்கும், காசுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

நீரை. மகேந்திரன்