
எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேர்தல் நேரங்களில் பின்புலமாக இருந்து செயல்படும் சிலர், தேர்தல் முடிந்ததும் அமைதியாக இருந்து விடுகிறார்களே... ஏன்?
அமைதியாக இருக்கிறார்களா... அமைதியாகச் சம்பாதிக்கிறார்களா என்பது அந்த ஆளைப் பொறுத்தது.
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உதயநிதியை விட துரை தயாநிதி சீக்கிரமே அரசியலில் அடியெடுத்து வைத்து விட்டாரே?
உதயநிதிக்கு வேறு வேலை இருக்கிறது. தயாநிதிக்கு அது இல்லாததுகூட காரணமாக இருக்கலாம். அரசியல் விரக்தி துரை தயாநிதியின் அப்பாவுக்கு இருப்பதால் அந்த இடத்தை நிரப்ப இவர் நினைக்கலாம். துரை தயாநிதி குறி வைப்பது உதயநிதி அப்பா வகித்து வரும் இளைஞர் அணிச் செயலாளர் என்ற பதவியை என்பதால் உதயநிதியும் கொஞ்சம் உஷார் ஆவார் போலவே தெரிகிறது.
நாசரேத் விஜய், கோவை-6.

அரசியல் படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் யாரும் தண்டிக்கப்பட்ட மாதிரி தெரியவில்லையே... இது யாருடைய கையாலாகாத்தனம்?
##~## |
சம்பவம் நடக்கும்போது யாருடைய ஆட்சி நடக்கிறதோ அந்த ஆட்சியாளர்கள்தான் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். பெரிய, முக்கியமான கொலைகளில் பெரும்பாலானவற்றை மறைப்பதற்கே நினைக்கிறார்கள். இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.
எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

அனுபவம்(கருணாநிதி), வேகம்(விஜயகாந்த்), விவேகம்(ராகுல்) ஆகிய மூன்றையும் சேர்த்தால் நாற்பதையும் அள்ளி விடுவார்களா?
பக்குவம் என்பது மூவருக்கும் இருந்தால் மட்டுமே அவர்கள் நினைத்தது நடக்கும். கூடக்குறைய இருந்தாலும் எண்ணிக்கை பற்றிக் கவலைப்படாமல் போட்டியிட்டால் அது சாத்தியமாகலாம்.
காங்கிரஸை விடக் கூடுதல் எண்ணிக்கையைப் பெற வேண்டும் என்று விஜயகாந்த் நினைப்பார். நாங்கள்தானே இரண்டாவது பெரிய கட்சி என்று காங்கிரஸ் நினைக்கலாம். இந்தச் சிக்கல் ஒன்றுதான் அந்தக் கூட்டணி உருவாகாமல் தடுக்கும் ஒரு முக்கியமான தடையாக அமையும்.
இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பழைய கடிதங்கள் குறித்து பெரும் மோதல் ஏற்பட்டுள்ளதே?
கமல்ஹாசன் குறித்து கருணாநிதி ஒரு கருத்தைச் சொல்லியதால் அவர்மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. அது, நீதிமன்றத்தில் இருக்கும் விவாதம்!
ஆனால், '1980-ம் ஆண்டில் நான் அன்றாடம் எம்.ஜி.ஆரைச் சந்திப்பது உண்டு. ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் தலைமைச் செயலகம் செல்வார். நான் காலையில் கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். மதியம் இருவரும் அவருடைய மாம்பலம் அலுவலகத்தில் சந்தித்து ஒன்றாக மதிய உணவு அருந்துவோம். அதன்பிறகு, நாங்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து மணிக்கணக்கில் விவாதிப்போம். ஒவ்வொரு நாளும் நான் அவரை வழக்கமாகச் சந்தித்து வந்ததால் நான் ஏன் அவருக்கு கடிதம் எழுதப் போகிறேன்?’ என்று ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். பொதுவாகவே, எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதுவார் என்பது பலரும் அறிந்தது. நேரடியாக தினமும் சந்தித்தாலும் பல விஷயங்களை கடிதம் மூலம் சொல்லும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார்.
சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

'பெண்களின் பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகளே பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று, பிரதமர் கூறுகிறாரே?
வருவாய் வரும் விஷயங்களை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும், மற்ற விஷயங்களை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைதானே? இதற்கு மன்மோகன் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன?
பி.மூக்கையா, தஞ்சாவூர்.


குஷ்பு எதற்காக அரசியலிலும் தி.மு.க-விலும் சேர்ந்தார்?
'கற்பு’ குறித்து கருத்துச் சொன்னதற்காக பல்வேறு வகைகளில் அவர் அச்சுறுத்தப்பட்டார். அதனால், ஏதாவது ஒரு கட்சியில் சேருவது நல்லது என்று முடிவெடுத்தார். காங்கிரஸில் அவரைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு சிலர் முயற்சித்தனர். பெரியார் படத்தில் மணி யம்மையாக நடித்தது முதல் அவருக்கு தி.மு.க- நட்பும் கருணாநிதி அறிமுகமும் கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அதில் ஐக்கியமானார். சினிமா பாப்புலாரிட்டியைத் தொடர்ந்து தக்க வைப்பதும் அதன்மூலமாக அடுத்தடுத்த பதவிகளை பிடிக்க நினைப்பதும் மனித இயல்புதானே?
சி.பி.ராஜு, சென்னை-17.

பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் பெருகி வருவதன் மூலகாரணம் என்னவாக இருக்கும்?
மனோதத்துவ ரீதியான கண்காணிப்பு சமூகத்தில் அவசியம் ஆகிறது. மூர்க்கமும் வன்செயலும் கொண்ட நடத்தை பலரது அடிமனத்தில் விதைக் கப்பட்டு இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே இதைப் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், நிறுவனங்கள் அதை ஒவ்வொரு மனிதனிடமும் கண்காணிக்க வேண்டும். ஒருவர் ஒன்றைத் தொடர்ந்து செய்வதை கட்டாயச் செய்கை என்று சொல்கிறது மனோதத்துவ இயல். ஒரு விஷயத்தைப் பற்றியே தீவிர சிந்தனை செய்து கொண்டே இருப்பதை தீவிர வெறி என்கிறார்கள். இது ஆட்டுவிக்கும் எண்ணப் பிறழ்வாக ஆகிவிடுகிறது. இந்த மூன்றும் சேர்ந் துதான் இத்தகைய குற்றச் சம்பவங்களை சர்வ சாதாரணமாகச் செய்யத் தூண்டுகின்றன.
கேட்டதை வாங்கிக் கொடுத்து, அளவுக்கு மீறிப் பணம் கொடுத்து குழந்தைகள் மனம் கோணாமல் நடந்து கொள்ள நினைக்கும் பெற்றோர், தங்களது வாரிசுகளின் மனம், கோணல் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பி.சாந்தா, மதுரை-14.

அடுத்தடுத்து எதிர்ப்புகள்... அதிர்ச்சியில் சினிமா தயாரிப்பாளர்கள்- இது சரியா?
எதிர்ப்பு வந்தால் நல்லது என்றுதான் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போதெல்லாம் நினைப்பதாகக் கேள்வி. 'விஸ்வரூபம்’ வெற்றி பலரது மனதை இப்படித்தான் யோசிக்க வைத்திருக்கிறதாம்.
எஸ்.ராஜகோபால், சென்னை-17.

பீகார், உ.பி., உத்தர்கான்ட், நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து அதிகமான தொழிலாளர்கள் இங்கு வேலைக்காக வருகிறார்கள். இங்குள்ள தொழிலாளர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர் என் பதைத்தானே இது குறிக்கிறது?
இங்கு வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை என்பதால்தான் அவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள். தமிழகத்தில் சிறுவர்கள், வேலைக்குச் செல்லும் தேவை அற்று படிப்பதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர் என்று பாசிட்டிவ்வாக இதைப் பார்க்கலாம்.
தமிழகத்துடன் ஒப்பிடும்போது அந்த மாநிலங்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கின்றன என்பதும் இதன்மூலம் தெரிகிறது.
