கழுகார் பதில்கள்

சீர்காழி சாமா, தென்பாதி.


அன்று மதுக் கடைகளை மூடச் சொல்லி ராஜாஜி நடத்திய போராட்டத்துக்கும் இன்று ராமதாஸ் போராட்டம் நடத்துவதற்கும் என்ன வேறுபாடு?
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்துகொண்டு இருந்த அந்தக் காலகட்டத்திலேயே, இரண்டு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் காந்தி. ஒன்று, தீண்டாமை ஒழிப்பு. மற்றொன்று, கள்ளுக்கடை மூடல். வெள்ளையர் வீழ்ச்சிக்கு முன், இதை நடத்திக்காட்ட வேண்டும் என்று துடித்தார். அவரின் வழித்தடத்தில்தான் ராஜாஜியின் செயல்பாடுகளும் இருந்தன.
தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது... கொட்டும் மழை நாளில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் இல்லம் வந்து கையைப் பிடித்து ராஜாஜி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தன்னுடைய தள்ளாத வயதிலும், தமிழ்நாட்டு இளை ஞர்கள் தள்ளாடிவிடக் கூடாது என்று நினைத்துச் செயல்பட்டார் ராஜாஜி.
இன்று, முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று சொல்லும் அளவுக்கு மிக முற்றிய காலகட்டத்தில் ராமதாஸின் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மதுவிலக்கை அமல்படுத்த நடக்கும் அனைத்துப் போராட்டங்களும் வரவேற்க வேண்டியவைதான்.
மதுக் கடைகளை எதிர்த்து இப்போதுதான் காங்கிரஸ் கட்சி போர்க்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளது. காந்தியும் மதுவிலக்கும் நிர்மாணத் திட்டங்களும் இப்போதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஞாபகம் வந்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்!
எம்.பொன்னுசாமி, கோவை-16.

'நாங்கள்தான் கொலை செய்தோம்’ என்று, கோர்ட்டில் சரண் அடைகிறார்கள். அதன்பிறகு எதற்கு வக்கீல், கோர்ட், கேஸ், ஜாமின் எல்லாம். உடனே, குற்றத்துக்கான தண்டனையைக் கொடுத்து விட்டால், உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்கு வழி இல்லை அல்லவா?
##~## |
இப்படி சரண் அடைபவர்கள் பெரும்பாலும் உண்மைக் குற்றவாளிகளாக இருப்பது இல்லை. யாருக்காகவோ பிராக்சியாகத்தான் சரண் அடைகிறார்கள். காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கில் போலிக் குற்றவாளிகள் சரண் அடைந்ததைத் தெரிந்துகொண்ட பிறகுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. எனவே, சரண் அடைபவர்களை நம்ப முடியாது. சம்பவம் நடந்த மறுநாளே சரண் அடைபவர்கள், சம்பவ இடத்திலேயே நின்று அகப்படலாமே?
சங்கத்தமிழன், சென்னிவீரம்பாளையம்.

விமர்சிக்கப்படுபவர்கள் பிரபல்யம் அடைவார்கள். விமர்சகர்கள் பிரபலம் அடைவதில்லை என்பது உண்மையா?
இசையில் சுப்புடுவும், இலக்கியத்தில் க.நா.சு-வும், அரசியலில் சோவும் பிரபலம் அடையவில்லையா? விமர்சனம் என்பது சம்பந்தப்பட்ட துறையை வளப்படுத்துவதாக அமையும்போது, அந்த விமர்சகர்கள் கவனிக்கப்படுகிறார்கள். சுய விருப்பு வெறுப்புகள் பிரதி பலிக்கும்போது, அந்த விமர்சகர்கள் தள்ளிவைக்கப்படுகிறார்கள். விமர்சனத்தையே ஒரு கலையாக நினைக்கும் அளவுக்கு இன்றைய இலக்கியத் துறை வளர்ந்துள்ளது.
செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

ஊழல் - கொசு... எதை அழிப்பது சிரமம்?
கொசு அழிப்பிலும் ஊழல் செய்ய முடியும் என்பதால், ஊழலை அழிப்பதே சிரமம்!
வி.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

ஆட்சியில் இருந்தபோது ஈழத் தமிழருக்காக செய்யத் தவறியதை இப்போது செய்யப்போவதாக கருணாநிதி சொல்வது எதைக் காட்டுகிறது?
மக்களின் மறதிதானே அரசியல்வாதிகளின் சேமிப்புக் கணக்கு?
புனிதா, தூத்துக்குடி.

இந்தியாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பெரும் விவாதம் நடந்ததாமே?
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அரசியல் நிர்ணய சபையில் 'நாட்டுப் பெயர்’ விவாதம் 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.
பாரதம், பாரத வர்ஷம், இந்துஸ்தானம், இந்தியா ஆகிய நான்கு பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில், 'இந்தியா எனப்படும் பாரதம்’ என்ற பெயரும் 'பாரதம் எனப்படும் இந்தியா’ என்ற பெயரும் முன்மொழியப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 'இந்தியா எனப்படும் பாரதம்’ என்ற பெயருக்கு அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் 51 பேரும் அடுத்த பெயருக்கு 38 பேரும் வாக்களித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வாசகமான 'இந்தியா, தட் இஸ் பாரத்’ என்ற வாசகம் அதன்பிறகுதான் அங்கீகரிக்கப்பட்டது.
சரண்சுகன் சித்தப்பு, கருப்பம்புலம்.

தி.மு.க-வில் குஷ்பு நீடிப்பாரா?
'இனி யாரும் அறிக்கையோ, பேட்டியோ, வெளியிடக் கூடாது’ என்று சொன்ன பிறகும் இரண்டு முறை பேட்டிகள் கொடுத்துள்ள குஷ்புவைப் பார்த்தால், இப்போதைய தி.மு.க-வின் 'சுப்ரீம்’ ஆகத் தெரிகிறார். அவர் நிச்சயம் நீடிப்பார்!
பி.சாந்தா, மதுரை-14.

நாளிதழ்களில் கொலைச் செய்தி இல்லாத நாளே இல்லையே... ஏன்?
அந்த அளவுக்கு 'கொலைவெறி’ தாண்டவம் ஆடுகிறது.
பகைமை, அழிப்பு மனப்பான்மையைப்பற்றி ஃபிராய்டு நிறைய எழுதி இருக்கிறார். இது அனைத்து மனித மனங்களிலும் இருக்கிறது. சமூகச் சூழ்நிலை ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகிறது. இதுபற்றிக் கவலைப்படாத, இயல்பு உணர்ச்சி மீறியவர்கள் கொலைவெறியில் அலைகிறார்கள்.
'நேசத்தைவிட வெறுப்பு மிகப் பழைமையானது’ என்று ஃபிராய்டு சொல்கிறார். அந்த வெறுப்பு நாளுக்கு நாள் தூண்டப்படுவதன் விளைவுதான் கொலைச் செய்தியின் அதிகரிப்பு!
எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

'இலங்கை உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை ஐ.நா. அனுமதிக்கக் கூடாது’ என்கிறாரே ராஜபக்ஷே?
சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட ஏழு நாட்டு ராணுவத் தளபதிகளை அழைத்துவந்து வன்னி நிலப்பரப்பில் நிறுத்தி அப்பாவிகளை கொல்வதற்குத் திட்டமிட்டபோது... இலங்கை விவகாரம், உள்நாட்டு விவகாரமாக அவருக்குத் தெரியவில்லையா?
அநியாயம் செய்வதற்கு சில நாடுகள் உடந் தையாக இருக்கும்போது அதைத் தட்டிக்கேட்பதற்குச் சில நாடுகள் முன்வருவது எப்படித் தவறாகும்?
மற்ற நாடுகள் தலையிடுவதைத் தடுக்கும் கோரிக்கையை ஐ.நா-வுக்கு வைக்கும் ராஜபக்ஷே, ஐ.நா-வே தலையிடக் கூடாது என்று விரைவில் சொல்வார். ஐ.நா. அதிகாரிகளை கொழும்புக்குள் வரவிடாமல் தடுத்தவர்தானே அவர்! ஐ.நா. செயலாளர் பான்கீ மூனைக் கடுமையாகக் கொச் சைப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தவர், ராஜபக்ஷே தலைமையில் அமைச்சராக இருந்தவர். அவரைத் தூண்டி விட்டதும் ராஜபக்ஷேதானே!
முத்துக்குமரன், சாத்தூர்.

நான் கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். ஆனால், என்னுடைய நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்களே?
சென்னை திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரம் தெருவில் சையத் முபாரக் என்பவர் பெட்டிக் கடை வைத்துள்ளார். தினமும் ஒரு பொன்மொழியை அவர் கடை வாசலில் எழுதி வைப்பார். அவர் எப்போதோ எழுதி வைத்திருந்தது ஞாபகத்துக்கு வருகிறது...
'இரண்டு கால்கள் உள்ள எவரும் நடக்கலாம். ஆனால், இரண்டு கைகள் உள்ள எல்லாராலும் எழுதிவிட முடியாது’.
வி.பரமசிவம், சென்னை-25.

'வரும் செப்டம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கலாம். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’ என்கிறாரே முலாயம் சிங் யாதவ்?
உடனடியாகத் தேர்தல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களில் ஒருவராக முலாயம் சிங் இருக்கிறார். மூன்றாவது அணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முலாயம் சிங் நிறுத்தப்படலாம் என்ற சூழ்நிலை டெல்லியில் நிலவுகிறது. அதனால், அவர் தேர்தலுக்கு அவசரப்படலாம்!
