Published:Updated:

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...
##~##

ழுகார் வந்ததும், ''ஜெயலலிதா அதிக சந்தோஷத்தில் இருப்பதுபோல் தெரிகிறதே...'' என்று கேட்டோம்.

 ''ஒரே நாளில் இரண்டு வெற்றிகள் கிடைத்தால், சந்தோஷப்பட மாட்டாரா? 20-ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியானது. அன்றைய தினம்தான் புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவதற்குத் தடை இல்லை என்று பசுமைத் தீர்ப்பாயமும் அறிவித்தது. அதற்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை, வைகோவை ஜெயலலிதா சந்தித்தார். அன்றைய தினமே அவரது நடவடிக்கைகளில் ஏக மாற்றமும் சந்தோஷமும் தெரிய ஆரம்பித்தது.''

''அப்படியானால் வைகோ மேட்டரில் இருந்து ஆரம்பிக்கலாம்!''

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக வேண்டியதாகி விட்டது. விஜயகாந்த் வந்த உற்சாகத்தில் வைகோவுக்குத் தொகுதிகள் குறைக்கப்பட்டன. ஆனாலும், வைகோ என்னுடைய ஆருயிர் சகோதரர் என்றும், அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் வழக்கத்துக்கு மாறாக அறிக்கை விட்டார் ஜெயலலிதா. நாஞ்சில் சம்பத்தை தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொண்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மீது வைகோவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், '40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டி’ என்று ஜெயலலிதா அறிவித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா வலியவந்து வைகோவைப் பார்த் துள்ளார்!''

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...

''எதிர்பாராத சந்திப்பா இது?''

''இல்லை. திட்டமிட்ட சந்திப்புத்தான். ஜெயலலிதா வருகிறார் என்றால், வைகோவின் ஊர்வலப் பாதையை போலீஸார் மாற்றி இருப்பார்கள். அல்லது, வைகோ வேறு பாதைக்குப் போன பிறகு, ஜெயலலிதா கோட்டையில் இருந்து கிளம்பி இருக்கலாம். 'வைகோவைச் சந்திக்கலாமே’ என்ற முடிவோடுதான் ஜெயலலிதாவின் பயணம் இருந்துள்ளது.

மதுவிலக்கு நடைபயணத்தில் இருக்கும் வைகோ, கடந்த 19-ம் தேதி திருப்போரூரில் இருந்து கிளம்பினார். அந்த வழியில்தான் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா இருக்கிறது. மதியம் 3 மணிக்கு, வைகோ சிறுதாவூரைத் தாண்டி விட்டார். அந்த நேரத்தில் கோட்டையில் இருந்து சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதா வருகிறார் என்பதால், வழிநெடுக டென்ஷனுடன் போலீஸ் காத்திருந்தது. சரியாக 3.13 மணிக்கு, தலைப்பாகையோடு வைகோ நடந்து கொண்டிருக்க... எதிர்த் திசையில் ஜெயலலிதாவின் கார். வைகோவைப் பார்த்ததும் ஜெயலலிதாவுடைய காரின் வேகம் குறைந்தது. திடீரென கார் நிறுத்தப்பட்டு, வழக்கமாக காரில் இருந்து இறங்குவதற்கு வைக்கப்படும் தனி ஸ்டெப்ஸ்கூட இல்லாமல் இறங்கி விட்டார் ஜெய லலிதா. இதைச் சற்றும் எதிர்பார்க்காத வைகோ, ரோட்டுக்கு நடுவில் இருந்த சின்னத் தடுப்பைத் தாண்டி, ஜெயலலிதாவின் காருக்கு அருகே வேகமாக வந்துள்ளார்.

'வாங்க வைகோ... நல்லா இருக்கீங்களா?’ என்று ஜெயலலிதா கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்ல, 'நல்லா இருக்கேன் மேடம். நீங்க நல்லா இருக்கீங்களா?’ என்று வைகோவும் வணக்கம் வைத்தார். 'உங்க கோரிக்கை என்ன? எதுக்காக இப்படி நடக்குறீங்க?’ என்று ஜெயலலிதா கேட்டார். 'பூரண மதுவிலக்கு மேடம்’ என்று வைகோ சொன்னதற்குப் பதில் எதுவும் சொல் லாமல் அடுத்தக் கேள்விக்குத் தாவி இருக்கிறார் ஜெயலலிதா. 'உங்க அம்மா எப்படி இருக்காங்க? மனைவி நலமா இருக்காங்களா?’ என்று கேட்டவரிடம், 'எல்லோரும் நல்லா இருக்காங்க மேடம். உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். 'தேங்க் யூ... ரொம்பவும் கஷ்டப்படுறீங்க. எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. சாப்பிடலாமா?’ என்று கரிசனத்துடன் கேட்டு இருக்கிறார் ஜெயலலிதா. 'இல்லைங்க... இங்கே பக்கத்துல பையனூர்ல எங்க கட்சித் தொண்டர் ஒருத்தர் வீட்டுல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சு இருக்காங்க’ என்ற வைகோ, 'மேடம்... இது எங்க கட்சியோட மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன்’ என்று அறிமுகப்படுத்த, 'வேளச்சேரி மணிமாறன்தானே... எனக்கு நல்லாத் தெரியுமே. பார்த்துப் பத்திரமா போங்க... நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா புறப்பட்டு இருக்கிறார்.

இதுதான் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த பேச்சுவார்த்தை. அதுவரை, காருக்குள் இருந்த சசிகலா, இதை ரசித்துக் கவனித்துக்கொண்டு இருந்தாராம். ஜெயலலிதாவின் இந்த சர்ப்ரைஸ், வைகோவை அதிர்ச்சி அடையவைத்தது. ஜெய லலிதாவின் கார் கிளம்பும்போது, 'ஒதுங்குங்க... மேடம் கிளம்புறாங்க... வழிவிடுங்க...’ என்று வைகோ கொடுத்த சவுண்டைக் கேட்டு புன்னகைத்தபடியே புறப் பட்டாராம் ஜெயலலிதா. கார் ஏறிய ஜெயலலிதா, 'அந்த போட்டோவையும் வீடியோவையும் வாங்கச் சொல்லுங்க’ என்று கூறி இருக்கிறார். 'இந்த மேட்டர் வெளியில் வர வேண்டாம் என்று அவர் நினைக்கிறாரோ?’ என்றுகூடச் சிலர் நினைத்தனர். அதன் பிறகுதான் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டது தெரிய வந்தது. 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் முதல் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டு இருப்பதைப் பார்த்தால், வைகோவுடன் அரசியல் ரீதியாக நல்லிணக்கம் பாராட்ட ஜெயலலிதா முடி​வெடுத்து விட்டார் என்று தெரி​கிறது. கருணாநிதி பலமான கூட்டணியை அமைக்கும்போது, நாமும் சில முக்கியக் கட்சி களைக்கொண்ட கூட்டணி அமைப்​பதுதான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந் திருப்பது தெரிகிறது.''

''இருக்கலாம்!''

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...

''அதையெல்லாம்விட, 'ஒரு அரசியல் கட்சித் தலைவரை நேரில் பார்த்ததும், தானே வலியச் சென்று பேசியது ஜெய லலிதாவின் செயல்பாட்டில் ஏற்​பட்ட மிகப்பெரிய மாற்றம்’ என்றும் அவரைப் பலரும் பா​ராட்ட ஆரம்பித்து விட்டதில் ஜெயலலிதாவுக்குக் கூடுதல் உற்சாகம். இத்தகைய சூழ் நிலையில்​தான் காவிரி கெசட் செய்தியும் புதன்கிழமை வந்து சேர்ந்தது. அன்று காலையில் ஜெயலலிதா பதற்றமாகத்தான் இருந்தார். புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது சம்பந்தமாக பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பு 11 மணிக்கு வரப்போகிறது என்று டி.வி-க்களில் ஃப்ளாஷ் ஓடியது. 'மருத்துவமனை செயல்படக் கூடாது’ என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டபோதே ஜெயலலிதா மனம் குறுகினார். 'தடை நீடிக்கப்படலாம்’ என்றே சிலர் செய்தி பரப்பினர். பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிப் பிரிவு உறுப்பினரான நீதிபதி சொக் கலிங்கம், நிபுணத்துவப் பிரிவு உறுப் பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் 'கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது சட்டவிரோதம் அல்ல’ என்று தீர்ப்பளித்தனர்.  இந்தத் தகவலோடு சேர்த்துத்தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியான தகவலும் வந்து சேர்ந்தது. சும்மா இருப்பாரா... உடனே, நிருபர்கள் அனைவரையும் கோட்டைக்கு வரச் சொல்லி கொண்டாட்டப் பேட்டியைக் கொடுக்க ஆரம்பித்தார்.''

''இருக்கத்தானே செய்யும்!''

''பேட்டியின்போது உற்சாகமாக இருந்தார் முதல்வர். 'எனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க் கைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி’ என்று சொன்னார். 'என்னைப் பொறுத்தவரை தனிப் பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு மிக மகத் தான பிரமாண்டமான வெற்றி. 30 ஆண்டு காலத்தில் உண்மையாக இன்றுதான் ஒரு சாதனை புரிந்ததாக ஒரு மனநிறைவும் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. நிச்சய​மாக இது ஒரு மகத்தான சாதனை என்று நான் கூறுவேன்’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். இது, இன்னொரு பக்கத்தில் கருணாநிதியைக் கொந்தளிக்க வைத்தது.''

''என்னவாம்?''

''ஜெயலலிதா கொடுத்த பேட்​டியின் சாராம்சத்தைக் கேட்டுக் கோபத்தால் துடித்தாராம் கருணாநிதி. 'டெல்லியில இருக் கிறவங்க இந்தத் தகவலை முதல்ல நமக்குச் சொல்லக் கூடாதா? அந்தம்மா தன்னோட சாதனைனு சொல்லிக் கிண்டல் பண்ற நிலைமையை ஏற்படுத் திட்டாங்களே’ என்ற கருணாநிதி டெல்லி மீடியேட்டரான டி.ஆர்.பாலுவைப் பிடித்துக் கடிந் ததாகவும் சொல்கிறார்கள். 'அந்த அம்மாவுக்கு 24-ம் தேதி பிறந்த நாள்... அதையட்டி இப்படி கெசட்ல வந்தா, தன்னோட பிறந்த நாள் பரிசுன்னு சொல்லாதா? டெல்லிக்கும் நமக்கும் சரியான கம்யூனிக்கேஷனே இல்லை... அங்க இருந்து ஒழுங்கான தகவலும் வர மாட்டேங்குது’ என்று கருணாநிதி சொன்னாராம். 'கெசட்டில் வெளிவரப்போகும் தகவல் தெரிந்தால், முன்னமே அதற்கான முஸ்தீபுகளை கருணாநிதி செய்திருப்பார். அதைச் செய்யவிடாமல் தடுத்து விட்டது டெல்லி’ என்றும் சொல்கிறார்கள்.''

''டி.ஆர்.பாலு டெல்லியில்​தானே இருந்திருப்பார்?''

''கடந்த சில வாரங்களாக சென்னையில் அவர் முகா மிட்டு இருக்கிறார். மார்ச் 1-ம் தேதி நடக்க இருக்கும் ஸ்டாலின் மணி விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார். டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் கொண்ட குழு, ஸ்டாலின் புகழ் பாடும் மலர் ஒன்றைத் தயாரித்து வருகிறது. கட்சிக்கு வெளியில் இருக்கும் வி.ஐ.பி-க்கள் இதில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதி இருக்கிறார்களாம்.''

''அழகிரி ஏதாவது எழுதி இருக்கிறாரா?''

''கட்சிக்கு வெளியில் இருக்கும் வி.ஐ.பி-க்கள் என்றுதான் சொல்லி விட்​டேனே... அதனால் அழகிரி இல்லை. அன்றைய தினம் அடையாறு கேட் ஹோட்டலில் அதிகாலையில் 60-ம் கல்யாணம் நடக்க இருக்கிறதாம். அங்கிருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு வரும் ஸ்டாலின், அங்கு தொண்டர்களுக்குத் தரிசனம் தருகிறார். தலைமைக் கழகம் சார்பில் விழா, மலர் வெளியீட்டு நிகழ்ச்சிகள் இன்னும் முடிவாகவில்லையாம். வட சென்னையில் சேகர்பாபு நடத் தும் விழாவில் அன்பழகன், வீரமணி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், வைரமுத்து, அவ்வை நடராஜன் எனப் பெரும் பட்டாளம் குவிகிறது.

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...

அதுவே பிரதானமாக இருக்கும் என்கிறார்கள்.''

''பொட்டு வழக்கு எப்படிப் போகிறது?''

''பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு 22 நாட்கள் ஆகிவிட்டன. கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் அட்டாக்கை நோக்கி போலீஸார் நகர... களத்தில் இறங்கிக் காரியம் ஆற்றிய சபாரத்தினம், சந்தானம் உள்ளிட்ட ஏழு பேர் சரண் அடைந்தனர். அவர்கள் அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி மற்றும் ஆரோக்கிய பிரபுவைக் கை காட்ட, விஷயம் தெரிந்து அவர்களும் சரண் அடைந்தனர். ஆக, தாங்களாக இதுவரை ஒருவரைக்கூட போலீஸாரால் கைதுசெய்ய முடியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்திய டாடா ஏஸ், பைக், வாள், அரிவாள் போன்றவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை பத்திரி கையாளர்கள் கண்ணில்கூட காட்டாமல் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் 24 மணி நேரப் பாதுகாப்புடன் வைத் திருக்கிறார்கள். கொலைக்கு முன் னோட்டமாக விஜயபாண்டியும் ஆரோக்கியபிரபுவும் பொட்டுவை ஃபாலோ செய்யப் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரையும் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்.''

''கடைசியாகச் சரண் அடைந்த விஜயபாண்டியும் பிரபுவும் என்ன சொன்னார்களாம்?''

''கடந்த 18-ம் தேதி மாலையில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்தனர். போலீஸ் விசா ரணையை ரொம்ப கேஷ§வலாக எதிர்கொண்ட இருவரும், ஒரு அளவுக்கு மேல் விஷயத்தைக் கக்கவே இல்லை. அந்த ஏழு பேர் வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக சில தகவல்களை மட்டும் சொன்ன இவர்கள், சில விஷயங்களை மறுத்து இருக்கிறார்கள். 'அப்படியாச் சொன்னாய்ங்க... அய்யய்ய... அதெல்லாம் சும்மா சார். உங்ககிட்ட விளையாடி இருக்காய்ங்க’ என்று சிரித்து இருக்கிறார்கள். 'அழகிரி குடும்பத்துக்கும் பொட்டு கொலைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது’ என்று சொன்னவர்கள், 'அழகிரியிடம் இருந்த என்னைப் பிரித்த பொட்டு, ஒரு கட்டத்தில் அண்ணனை விட்டு விலகிட்டதா நினைச்சிருந்தோம். ஆனா, அவன் மீண்டும் அண்ணன்கிட்ட நெருக்கமா கிட்டான். இதுக்கு மேல நமக்கு எதிர்காலமே கிடை யாது. ஏரியாவுல ஃபார்ம் ஆகி தனி ராஜாங்கம் நடத்தி வந்த நம்மை ஊர் ஊராக ஓடி ஒளியவைத்த அவன் உயிரோடு இருந்தால், மீதி வாழ்க்கையும் இருண்டு போய்விடும். கட்சியில் நம்மோட எதிர்காலம் போனாலும் பரவாயில்லை. அவன் உயிரோடு இருக்கக் கூடாது’ என்று அட்டாக் அண்ணன் சொன்னார். அதனால்தான் போட்டோம் என்று விசா ரணையின்போது இவர்கள் சொல்லியதாக போலீஸ் வட்டாரம் கிசுகிசுக்கிறது.''

''ம்!''

''விஜயபாண்டி, பிரபு இருவரையும் மூன்று நாட்களாக விசாரித்ததில், அட்டாக் முன்பு பதுங்கி இருந்த இடங்களை எல்லாம் கண்டுபிடித்து விட்டனர் போலீஸார். ஏற்கெனவே அட்டாக் இருக்கும் இடம் என்று போலீஸார் சந்தேகப்பட்ட 10 இடங்களில் 5 இடங்கள் 'டிக்’ செய்யப்பட்டு விட்டதால், மீதம் உள்ள ஐந்து இடங்களில் ஒன்றில்தான் அவர் இப்போது இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் போலீஸார். தி.மு.க. புள்ளிகளை விசாரித்த வகையிலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் அட்டாக் பதுங்கி இருப்பதாகக் கருதப்படும் இடங்களுக்கு தனிப் படைகள் விரைந்திருக்கின்றன.''

''அட்டாக்கின் மனைவி தயாளுவிடமும் போலீசார் விசாரித்தார்களாமே?''

'' 'அட்டாக் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டுள்ளனர். அதுபற்றி அவருக்கு எதுவும் தெரிய வில்லையாம். 'அன்பு எங்கே இருக்கிறான்?’ என்று கேட்டுள்ளனர்.''

''யார் இந்தப் புதிய கேரக்டர்?''

''தயாளுவின் பெரியப்பா மகன். தயாநிதி அழகிரியின் கிரிக்கெட் அணியில் ஒருவரான அன்பு, தயாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். கொலைச் சதியில் அவரது பங்கு என்ன என்பது தெரிந்தால் வழக்கு வேகம் பிடிக்கும் என்பதால், தலைமறைவாக உள்ள அன்புவைப் பிடிக்க ஒரு படை வடமாவட்டங்களுக்கு சென்று இருக்கிறதாம். இதேபோல, அட்டாக் பாண் டியின் சொத்துக்கள் சிலவற்றுக்குப் பினாமியாக இருக்கும் ஆரோக்கிய பிரபுவின் தம்பி பிரவீனையும் தேடி வருகிறார்கள் போலீஸார். இப்போதைக்கு முடியுமா எனத் தெரியவில்லை'' என்றபடி கழுகார் வானத்தை வலம் வர ஆரம்பித்தார்.

படம்: ஜெ.முருகன்

 அப்பாடா... நன்றி சொன்னார் ரங்கசாமி!

புதுவை முதல்வர் ரங்கசாமி தனது கட்சி மாநாட்டை ஏ.எஃப்.டி. மைதானத்தில் நடத்தினார். கட்சி தொடங்கியதும் இதே மைதானத்தில்தான். அப்போது, லட்சக்கணக்கில் கூடியவர்கள், இந்த முறை மைதா னத்தை நிரப்பவில்லை.

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் கருணாநிதி...

ஜோசியர்கள் சொன்ன 7.30 மணிக்கு சரியாக மேடை ஏறிய ரங்கசாமி, 'அப்பா பைத்திய சாமியின் அருளால்தான் ஆட்சியைப் பிடித்தோம்’ என்று தன் உரையைத் தொடங்கினார். மத்திய அரசை விளாசித் தள்ளினார்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கூட்டணிக் கட்சி மற்றும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவழியாக நன்றி தெரிவித்தார்.

'நன்றி சொல்லவே இரண்டு வருடம் ஆகிவிட்டதா?’ என்று அ.தி.மு.க-வினர் கிண்டல் அடித்தனர்.