Published:Updated:

தமிழ் தேசமா... தளபதி தேசமா?

ஸ்டாலினை உசுப்பிய சேலம்

தமிழ் தேசமா... தளபதி தேசமா?
##~##

'சேலம் மாநகர தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் ப.சுந்தரம், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்​பட்ட நாள் முதல் பல்வேறு வகைகளில் இளைஞர் அணிக்கு விரோதமாகவே செயல்படுகிறார். பொது​மக்களே அருவருக்கத்தக்க வகையில், வேண்டுமென்றே திட்டமிட்டு சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளார். அவரின் இத்தகைய செயலைக் கண்டிப்​பதோடு, சேலம் மாநகரத் துணை அமைப்பாளர் பொறுப்​பிலிருந்து விடுவிக்கப்பபடுகிறார்’ - முரசொலியில் இப்படி ஒரு காட்டமான அறி​விப்பை வெளி​யிட்டு இருந்தார் ஸ்டாலின்.

 யார் இந்த சுந்தரம்... அப்படி என்ன பிரச்னை?

''சேலம், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரை​வர் சுந்தரம். வீரபாண்டியாரின் ஆதரவாளரான அருளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டங்​களில் தலை காட்ட ஆரம்பித்த சுந்தரம், ஒரு கட்டத்தில் வீரபாண்​டியாரின் தீவிர விசுவாசியாக தன்னைக் காட்டிக்கொண்​டார். கடந்த தி.​மு.க. ஆட்சியில் வீரபாண்டி ராஜாவின் நிழலாகவே வலம் வந்தார். அதனால், சேலம் மாநகர இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பதவியும் கிடைத்தது. வீரபாண்டியார் குடும்பம் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களும் சுந்தரத்தின் மூலமாகவே பரிமாறப்​பட்டன.வீரபாண்டியாரின் மறைவுக்குப் பிறகு, ராஜாவுக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்காமல் சிவலிங்கத்துக்குப் பதவி கொடுத்ததும், முதலில் கொந்தளித்தவர் சுந்தரம்தான். தான் வகித்த இளைஞர் அணி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதோடு, மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்​பட்ட சிவலிங்கத்தையும் அதட்டி, தன்னுடைய வீரபாண்டி விசுவாசத்தைக் காட்டினார் சுந்தரம்.

தமிழ் தேசமா... தளபதி தேசமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிதி வழங்கும் கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடத்தத் திட்ட​மிடப்பட்டது. இந்தக் கூட்டத்தை நடத்தவிடாமல், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களைத் தூண்டிவிட்டு போலீஸில் புகார் கொடுத்ததும் சுந்தரம்தான் என்பது ஸ்டாலினுக்குத் தெரிய வந்தது.  சேலம் முழுவதும் ஸ்டாலின், கலைஞர், வீரபாண்டியார், ராஜா மற்றும் தன்னுடைய படத்தைப் போட்டு 'தமிழ் தேசத்தை தளபதி தேசம் ஆக்குவோம்’ என்று போஸ்டர் ஒட்டினார். இந்த போஸ்டரைப் பார்த்துக் கடுப்பான தமிழ் உணர்வாளர்கள் சிலர், 'ஏன் இப்படி எல்லாம் கீழ்த்தரமா நடந்துக்கிறாங்க? தமிழ் தேசத்தை தளபதி தேசம் ஆக்குவோம் என்றால் என்ன பொருள்? நீங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டைத் தளபதி நாடு என்று மாற்றிவிடுவீர்களா? தமிழ் தேசம் என்பது உங்களுக்கு அவ்வளவுவிளையாட்​டா​கிவிட்டதா?’ என்று ஸ்டாலி​னிடமே சொல்லிவருத்தப்​பட்டார்​களாம். இதில் கடுப்பான ஸ்டாலின், சுந்தரத்​துக்கு உடனே கட்டம் கட்டி​விட்டார்'' என்​கிறார்கள்.

சுந்தரத்திடம் பேசி​னோம். ''நான் அந்த அளவுக்குப் பெரிய ஆள் கிடையாதுங்க. இதைப்பற்றி இந்த நேரத்துல நான் எது பேசினாலும் அது எனக்கு சிக்கலாகும்'' என்றார்.

சேலத்தில் நடந்த நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்த ஸ்டாலினைச் சந்திக்க பல வகையிலும் சுந்தரம் முயற்சித்தார். ஆனால், ஸ்டாலின் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டாராம். ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் இன்னும் சிலருக்கும் அடுத்தடுத்து கல்தா இருக்கும் என்கிறது தி.மு.க. வட்டாரம்.

- வீ.கே.ரமேஷ்,

படங்கள்: வி.ராஜேஷ், எம்.விஜயகுமார்

 தேர்தல் நிதியாக ஆடுகள்!

 கிருஷ்ணகிரியில் கடந்த 17-ம் தேதி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஸ்டாலின் கையில் பலரும் தேர்தல் நிதியைக் கொடுக்க, சூளகிரியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா என்பவர் செம்மறி ஆட்டை இழுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு தொண்டரும் ஆட்டுடன் மேடைக்கு வந்தார். இருவரும் தேர்தல் நிதியாக ஆடுகளை ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

'இதை எப்படி நான் சென்னைக்குக் கொண்டுபோவது?’ என்று, சிரித்தபடியே ஆடுகளை வாங்கிக்கொண்டார். சற்று யோசித்த ஸ்டாலின், 'இந்த ஆடுகளை இதே மேடையில் ஏலத்தில் விடப்போகிறேன். விருப்பம் உள்ளவர்கள் வாங் கலாம்’ என்றார். ஏலம் ஆரம்பமானது. இரண்டே கால் லட்ச ரூபாய்க்கு ஒரு ஆடும், ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு இன்னொரு ஆடும் ஏலம் போனது.

எப்படி எல்லாம் வசூல் பண்றாங்கப்பா!

- எஸ்.ராஜாசெல்லம்