Published:Updated:

2ஜி மாறன் குடும்பம்; 3ஜி கருணாநிதி குடும்பம்; 4ஜி காந்தி குடும்பம் - அமித் ஷாவின் புதிய விளக்கம்

அமித் ஷா
அமித் ஷா

2ஜி, 3ஜி, 4ஜி ஆகியவை தமிழகத்தில் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள், 3-ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள், 4ஜி என்றால் காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் என்று அமித் ஷா விமர்சனம்.

கூட்டணி முடிவு, சீட் பங்கீடு, தேர்தல் பரப்புரை போன்ற திட்டங்களுடன் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தார். காலை, புதுச்சேரி - காரைக்காலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா, மாலை சுமார் 4:30 மணி அளவில் விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.

தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற `பா.ஜ.க கோர் கமிட்டி மீட்டிங்’ மற்றும் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்ட பின், சுமார் 6 மணி அளவில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் நடைபெற்ற `பா.ஜ.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்’ கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அமித் ஷா, ``புராதானம்மிக்க இனிமையான தமிழில் பேச முடியாததற்கு உங்களிடம் எனது மன்னிப்புகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு தமிழ்நாட்டின் பெருமையை கொண்டு சென்றிருக்கிறார்கள். தமிழர்களின் கலாச்சாரத்தை நாடு முழுவதும் மக்கள் மதிக்கிறார்கள். நாம் இன்றைய தினம் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வரும் தேர்தலில் களமிறங்கவிருக்கிறோம்.

பா.ஜ.க பொதுக்கூட்டம் விழுப்புரம்
பா.ஜ.க பொதுக்கூட்டம் விழுப்புரம்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிந்தனைகளோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு அ.தி.மு.க. மற்றொரு பக்கம் குடும்ப ஆட்சியின் மீது நம்பிக்கைகொண்டு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைத்தபோது சொன்னார்... `பா.ஜ.க அரசாங்கம் ஏழை, எளிய, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசாங்கமாக இருக்கும்’ என்று. சற்றே நாம் திரும்பிப் பார்ப்போம். 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் தர முடியாத பல திட்டங்களை மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் நிறைவேற்றியிருக்கிறது” என பா.ஜ.க ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா, ``ஏழை எளிய, தலித் மற்றும் பழங்குடியின மக்களைப் பற்றிப் பேசுகையில் எம்.ஜி.ஆர் ஞாபகத்துக்கு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, அந்த மக்களைப் பற்றிச் சிந்தித்த மனிதராக அவர் இருந்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் கொண்டுவந்த திட்டத்தை ஜெயலலிதா தொடர்ந்து நிறைவேற்றிவந்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் `தீனதயாள் ஏழை மக்கள் நல்வாழ்வுத் திட்டம்’ எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தேசப் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மறுபக்கம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. தமிழக மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள்
மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள்

சோனியா காந்திக்குத் தன் மகனை பிரதமராக்கிவிட வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலினுக்கு தன்மகன் உதயநிதியை முதலமைச்சராக்கிட வேண்டும் என்றும் கவலை. ஊழல் பற்றி தி.மு.க பேசும்போது எனக்குச் சிரிப்பு வருகிறது. `உங்கள் வீட்டைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். 2ஜி ஊழல் செய்தது யார்? உங்கள் கட்சியில், வீட்டுக்குள் இருப்பவர்களைப் பற்றிச் சிந்தித்துவிட்டுப் பேசுங்கள். காங்கிரஸ் தலைமையில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்தபோது தி.மு.க அந்தக் கூட்டணியில் இருந்தது” எனக் கூறினார்.

அப்போது, அலைக்கற்றை ஊழல் பற்றி இந்தியில் பேசிய அமித் ஷாவின் பேச்சை, ஹெச்.ராஜா தவறுதலாக தமிழில் மொழிபெயர்க்க, அதை அறிந்த அமித் ஷாவோ ஹெச்.ராஜாவின் மொழிபெயர்ப்பைக் கிண்டல் செய்ததால் அங்கு பொதுமக்களிடம் சற்று சிரிப்பலை எழுந்தது. ``ஹெச்.ராஜா நீங்க ஒழுங்கா மொழிபெயர்க்க மாட்ட்டேங்கிறீங்களே’’ என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, ``2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய தொலைத் தொடர்பு சேவைகள் தமிழகத்தில் இருக்கின்றன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள், 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள், 4ஜி என்றால் காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள். ஊழல் பற்றி இவர்கள் பேசுகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையிலேயே கல்வி, உள்ளூர் மொழியிலேயே இருக்க வேண்டுமென்று நாம் கொண்டு வந்திருக்கிறோம். ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு ராகுல் காந்தி வருகிறார். ஆனால், அவர்களால்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டு வந்தது மோடி தலைமையிலான அரசு. பல நல்லாட்சி விருதுகளைப் பெற்ற மாநில அரசாங்கத்தின் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

` நமது முதல்வர் விஜயகாந்த்` - சலசலப்பை உண்டாக்கிய எல்.கே.சுதீஷ்! #TNElection2021

மத்திய அரசோடு கைகோத்து இரட்டை ரயில் இன்ஜின் சக்தியோடு தமிழகத்தை முன்னேற்றி செல்லும் ஆட்சி வேண்டுமா இல்லை மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் ஆட்சியின் கூட்டணி வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள் மக்களே. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரையின் முழுமையான வெற்றி, பா.ஜ.க ஆட்சி அமையும்போதுதான் தெரியும். தமிழக மக்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். நாம் எதற்காக வாக்களிக்க வேண்டும்... மக்களின் மேம்பாட்டுக்காகவா அல்லது எதிரணியினரின் குடும்ப வளர்ச்சிக்காகவா என்று முடிவு செய்யுங்கள்” என்று பேசி முடித்தார்.

அதைத் தொடர்ந்து மதுராந்தகத்திலுள்ள உணவகத்தில் உணவருந்திய அமித் ஷா, கூட்டணிக் கட்சித் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் பேசுவதற்காக கார் மூலமாக சென்னை நோக்கிப் புறப்பட்டார். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் மூன்று மணி நேரம் நடந்த சந்திப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு