Published:Updated:

`2ஜி வழக்கு Vs சொத்துக்குவிப்பு வழக்கு..!’ - தி.மு.க., அ.தி.மு.க இடையே தொடரும் வார்த்தைப் போர்!

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கைப் பற்றிப் பொதுவெளியில் விவாதிக்க முடியாது. விவாதிக்க அழைப்பதற்கு உங்களுக்கு தார்மிக உரிமை கிடையாது.

டிசம்பர் 1-ம் தேதி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, ``2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்த கட்சி தி.மு.க. தமிழகத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையைக் கொள்ளையடித்த கட்சிதான் தி.மு.க. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன்போல் பேசிவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் 2-ஜி வழக்கில் சிக்குவார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

முதல்வர் பழனிச்சாமி
முதல்வர் பழனிச்சாமி

முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராஜா, ``2 ஜி வழக்கு குறித்து கோட்டையில் முதல்வருடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் தயாரா? சட்ட வல்லுநர்கள் யாரை வேண்டுமானாலும் உடன் வைத்துக்கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன்" என்று சவால் விடுத்திருந்தார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலினும் சுட்டிக்காட்டினார்.

கீழ்த்தரமான அரசியல் செய்வதை தி.மு.க நிறுத்திக்கொள்ளாவிட்டால், தி.மு.க கட்சியினர் பற்றி பட்டி தொட்டி எங்கும் பேச நேரிடும்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

இந்தச் சவாலுக்கு அ.தி.மு.க தரப்பில் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. பல இடங்களில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரிக்கும் சம்பவங்களும், அப்போது இரண்டு கட்சிக்காரர்களுக்குமிடையே கைகலப்பும் ஏற்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. இதற்கிடையே கடந்த டிசம்பர் 6-ம் தேதி ஆ.ராசாவின் கருத்துக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``ஆ.ராசா 2ஜி-யில் ஊழல் செய்த பணத்தைப் பதுக்கிவைத்திருக்கிறார். அதனால்தான் ஸ்டாலின் கூடவைத்திருக்கிறார். ராசா விவாதத்துக்கு அழைத்தால் முதல்வர் ஏன் வர வேண்டும்... விவாதத்துக்கு நான் வருகிறேன். தி.மு.க தயாரா?

ராமநாதபுரம்: ஆ.ராசா உருவபொம்மை எரிப்பு
ராமநாதபுரம்: ஆ.ராசா உருவபொம்மை எரிப்பு
உ.பாண்டி

முதல்வரைப் பற்றிப் பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது... ஜெயலலிதாவையோ, முதல்வரையோ பற்றி விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கும் ஆ.ராசாவுக்கும் எந்தத் தகுதியும் இல்லை. முதல்வரைக் குறித்து எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறார் ஸ்டாலின். வரும் தேர்தலில் அவரின் கனவுக்குப் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள்" என்று பேசினார்.

`வேகமெடுக்கும் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு!' - அக்டோபர் 5 முதல் தினசரி விசாரணை

ஜெயலலிதாவுக்காக டான்சி வழக்கு உட்பட 11 வழக்குகளில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``ஆ.ராசா பேசியது எனக்கு வருத்தமளிக்கிறது. ஜெயலலிதாவுக்காக நான் 11 வழக்குகளில் வாதாடியிருக்கிறேன். சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து எனக்குத் தெரியும் என்பதால் நான் பதிலளிக்கிறேன். வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. சட்டப்பிரிவு 394-ன் கீழ் அவர் குற்றமற்றவர். 2ஜி வழக்கில் ஆ.ராசா விடுதலையானதுபோலவே ஜெயலலிதாவும் வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டார். அவர் இறந்ததற்கான சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அப்படித் தாக்கல் செய்திருந்தால், வழக்கிலிருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் பேச நான் தயார்" என்று கூறினார்.

2ஜி வழக்கு பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய அறுவடை. அதனால் அவர்கள் மேல்முறையீடு செய்வார்கள். அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா

இன்று காலை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, ``2ஜி வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. குற்றப்பத்திரிகையிலுள்ள எந்தக் குற்றத்தையும் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. எந்தத் தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் எது உண்மை, பொய் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் நான் தயார். 2ஜி விவகாரத்தில் தி.மு.க மீது பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் பரப்பிவருகிறார்" என்று கூறினார்.

தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வாசித்துக் காட்டினார். ``அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் நடந்துகொண்டதாக நீதிபதிகள் வேதனையும் கண்டனமும் தெரிவித்ததாகவும், அவர் மக்களுக்குக் கொடுத்த வாக்கை மீறியதாகவும் நீதிமன்றமே கூறியிருக்கிறது. மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமான அரசமைப்புச் சட்டத்தின்மீது நடத்தப்பட்ட படுகொலை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட மற்ற மூவரும் அரசுப் பதவியில் இல்லை. அப்போது, இது ஜெயலலிதாவைப் பற்றியதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை மறைத்து முதல்வரும், அ.தி.மு.க-வினரும் பொய் கூறிவருகிறார்கள். இது பற்றி விவாதிக்க நான் தயார் என்று கூறினேன். இதற்கு முதல்வர் இன்றுவரை பதிலளிக்கவில்லை. நான் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாமல் உருவ பொம்மைகளை எரித்துவருகிறார்கள்" என்றார்.

ஊழலைப் பற்றிப் பேச தி.மு.க-வுக்கும் ஆ.ராசாவுக்கும் எந்தத் தகுதியும் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருப்பவர் ஆ.ராசா
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

இந்தநிலையில், மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கைப் பற்றி பொதுவெளியில் விவாதிக்க முடியாது. விவாதிக்க அழைப்பதற்கு உங்களுக்குத் தார்மிக உரிமை கிடையாது. உச்ச நீதிமன்றத்தில் விடுதலை என்று சொல்லும்வரை நீங்கள் குற்றவாளிதான். குற்றம்சாட்டப்பட்டவர்தான். குற்றம்சாட்டப்பட்டிருக்கும் குற்றவாளியான நீங்கள், முதல்வரை விவாதத்துக்கு வாருங்கள் என்று அழைக்கிற, சவால்விடுகிற உரிமை கிடையாது. ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடரப்பட்ட வழக்குகள். ஆனால், தி.மு.க மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தி.மு.க அங்கம்வகித்த காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு